Published : 01 Aug 2015 09:38 AM
Last Updated : 01 Aug 2015 09:38 AM
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலிடம் இருந்து அர்ஜுனா விருதைப் பெற்றுக்கொண்டார்.
கடந்த ஆண்டு அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அஸ்வின், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி விருது வழங்கப்பட்டபோது இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்ததால் அவரால் விருதைப் பெற முடியவில்லை.
விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு மகிழ்ச்சி பொங்க பேசிய அஸ்வின், “என்னுடைய கிரிக்கெட் பயணம் இதுவரை சிறப்பாக அமைந்திருக்கிறது. நிறைய விஷயங்களில் நான் அதிர்ஷ்டசாலி. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்காக விளையாடியதால் மிகப்பெரிய பெருமையைப் பெற்றிருக்கிறேன். அதனால் அதிர்ஷ்டசாலியாகவே உணர்கிறேன். இப்போது அர்ஜுனா விருதைப் பெற்றிருப்பது மிகப்பெரிய கவுரவமாகும். இந்தியாவுக்காக இன்னும் சிறப்பாக ஆடி மேலும் பல விருதுகளை வெல்வேன் என நம்புகிறேன்” என்றார்.
28 வயதான அஸ்வின் இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 124 விக்கெட்டுகளையும், 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2013 நவம்பரில் மும்பையில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். அதன்மூலம் கடந்த 80 ஆண்டுகளில் அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை (19 போட்டிகளில்) வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார். அதுதான் சச்சின் டெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் போட்டி. இதுவரை அஸ்வினோடு சேர்த்து 46 கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.
வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் குறித்துப் பேசிய அஸ்வின், “உண்மையை சொல்வதானால் எல்லா நேரங்களிலுமே கொஞ்சம் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அது பெரிய பிரச்சினையில்லை. நான் அங்கு சென்று அங்குள்ள சூழலைப் பயன்படுத்தி சிறப்பாக ஆட விரும்புகிறேன். எனது ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டும். நான் சிறப்பாக செயல்படும்போது நன்றாக பந்துவீச முடியும். அதனால் நான் ரசித்து விளையாட விரும்புகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT