Published : 27 Jul 2015 05:38 PM
Last Updated : 27 Jul 2015 05:38 PM

மறைமுகமாக செயல்படுத்தப்படும் மீத்தேன் திட்டம்: ஸ்டாலின்

காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி மீத்தேன் திட்டத்தை ஓஎன்ஜிசி மூலம் மறைமுகமாக செயல்படுத்துவதை உடனே மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில், ''மீத்தேன் திட்டத்தை ரத்து செய்து விட்டோம் என்று அதிமுக அரசு அறிவித்தாலும் அத்திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்துவதற்கு வழிவிட்டு அமைதி காக்கிறது.

காவிரி டெல்டா பகுதி அதிமுக அமைச்சர்களோ முதலமைச்சரோ விவசாயிகளுக்கு எதிராக நடைபெறும் எரிவாயு எடுக்கும் பணிகள் குறித்து மவுனமாகவே இருக்கிறார்கள்.

ஓஎன்ஜிசி மூலம் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 35 இடங்களில் எரிவாயு எடுக்க நடக்கும் முயற்சிகளை அதிமுக அரசு தடுக்கவில்லை. பொன்னியின் செல்வி பட்டத்தை பெற்ற ஜெயலலிதா காவிரி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடாமல் விவசாயிகளை வஞ்சித்துள்ளார். இப்போது எரிவாயு எடுக்கும் முயற்சிகளுக்கு தூபம் போட்டு விவசாயிகள் நலனுக்கு துரோகம் செய்துள்ளார்.

நிலம் எடுப்பு மசோதாவிற்கு முதலில் ஆதரவு பிறகு பல்டி என்றும், மீத்தேன் திட்டத்துக்கு முதலில் எதிர்ப்பு இப்போது ஓஎன்ஜிசி முயற்சிகளுக்கு ஆதரவு என்றும் விவசாயிகள் நலனை பாழாக்கி வருகிறார் ஜெயலலிதா. இதன் மூலம் விவசாயத்தை நாசம் செய்து தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கி விவசாயிகள் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க கார்ப்ரேட்டுகளுக்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் தீவிர நடவடிக்கையில் அதிமுக அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் உருவாகிறது.

காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி மீத்தேன் திட்டத்தை ஓஎன்ஜிசி மூலம் மறைமுகமாக செயல்படுத்துவதை உடனே மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை அதிமுக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவில்லை என்றால் காவேரி டெல்டா பகுதியில் திமுக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x