Published : 09 Jul 2015 06:03 PM
Last Updated : 09 Jul 2015 06:03 PM

கையறு நிலையில் மக்கள்: பாண்டி

கருத்துக்கணிப்பு : மதுவிலக்கை வலியுறுத்த இது சரியான தருணமா?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாண்டி கருத்து:

குடிமக்களால் ஆன சமூகம் குடி நோயாளிகளின் கூடரமாக மாறி வருகிறது. கல்லீரல் வீங்கிகளின் மரண விளிம்பின் ஒதுங்குமிடமாக மருத்துவ மனைகள். குடியால் எந்த கணத்தில் வேண்டுமானாலும் தன் தகப்பனையோ, தன் கணவனையோ, தன் மகனையோ இழக்க நேரிடலாம் என்ற மனப் பதறலில் வாழ்வின் சூன்யத்தை வெறித்தபடி, நித்திய கொடுமையாய் மாறிக் கிடக்கும் வாழ்வை எண்ணிக் குமையும்,

கையறு நிலையில் மக்கள்... உழைக்கும் வர்க்கத்தின் குடும்ப வருமானத்தை தவறான வழியில் கைப்பற்றும் அரசின் குயுக்தித்தான் மதுபானக் கடைகளாக மாறிக் கிடக்கிறது. குடியால் அறுபடும் தாலிகளைப் பற்றி.. மது காவு கொள்ளும் குழந்தைமை பற்றி குடி நோயாளிகளால் பறிபோன, அவர்தம் மகவுகளின் கல்விச்சாலை இடைநிற்றல் பற்றி.. கவலை கொள்ளாத அரசை மது விற்பனை வருமானம் குறைந்ததால், கன்னத்தில் கை வைத்து காரணம் தேடும் அரசை என்னவென்றழைப்பது...?

மதுவிலக்கை வலியுறுத்த தருணமோ.. சகுனமோ தேவையில்லை...தேவையெல்லாம் மது விலக்கை ஆதரிப் போரின் ஒருங்கிணைப்பும்...மதுவிற்கெதிரான தீவிர எதிர் குரல்களை அதிகார மையத்தின் காதுகளில் உரத்து ஒலிப்பதற்கு நேர்மை கொண்ட ஊடகங்களின் ஒத்துழைப்புமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x