Published : 22 Jul 2015 10:24 AM
Last Updated : 22 Jul 2015 10:24 AM

நம்மைச் சுற்றி... வெள்ளித் திரையில் இந்திரா காந்தி வாழ்க்கை!

* இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்க மும்பை திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான மணீஷ் குப்தா முடிவு செய்துள்ளார். இந்திரா காந்தியாக வித்யா பாலன் நடிக்கிறார். இந்திரா காந்தி, சிறுமியாக இருந்தது முதல் படுகொலை செய்யப்பட்டதுவரையிலான முக்கிய சம்பவங்கள் திரைப்படத்தில் இடம்பெறும். இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்ட பிறகு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்பதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னால் சோனியா காந்தியிடம் ஒப்புதலுக்காக திரைக்கதையை அனுப்பிவிட்டார். இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

* பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை ஹாங்காங் மற்றும் சீனாவில் வசிக்கும் சிந்தி இன மக்களின் ‘சிந்தி அசோசியேஷன்’ சமீபத்தில் கவுரவித்தது. சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்களில் பத்ம விபூஷண் விருது பெற்றவர் அத்வானி மட்டும்தான். அதற்காகத்தான் இந்த கவுரவம்!

* இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட ரிச்சர்டு வர்மா பற்றி எதிர்மறையான செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவர் பதவியேற்று ஏழு மாதங்கள் ஆன பின்னரும், உருப்படியான எந்த விஷயத்தையும் அவர் செய்யவில்லை என்று குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. டேவிட் முல்ஃபோர்டு, நான்ஸி பாவெல் என்று பெரிய தலைகள் அலங்கரித்த பதவியில், பெரிய அனுபவங்கள் இல்லாத ரிச்சர்டு வர்மாவை நியமித்ததிலிருந்தே பாஜக அரசுக்கு அதிருப்தி தொடங்கிவிட்டது என்கிறார்கள். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதே அவருக்கு எதிர்மறையான பிம்பத்தைத் தந்துவிட்டது. ‘ஆப்பிரிக்க அமெரிக்கர்களை ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தூதராக அனுப்புவது போன்றது இது’என்று தூதரக மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

* என்னதான் அகிலேஷ் யாதவ் முதல்வர் என்றாலும், அவரது தந்தை முலாயம் சிங்கின் கை இன்னும் ஓங்கிதான் இருக்கிறது. மக்கள் குறை கேட்கும் ‘ஜனதா தர்பார்’ நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று அகிலேஷிடம் கூறிய முலாயம், தனது இல்லத்திலேயே ஜனதா தர்பாரை நடத்திவருகிறாராம்.

* மும்பை ஐ.ஐ.டி-யின் குறைந்த விலை ‘டேப்லட்’ ஆகாஷ் தயாரிப்பு கடந்த மார்ச்சில் நிறுத்தப்பட்டது. மோடி அரசு சூட்டும் புதிய பெயரில் அது மீண்டும் உற்பத்தியாகும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x