Published : 07 Jul 2015 10:53 AM
Last Updated : 07 Jul 2015 10:53 AM
திருவான்மியூரிலிருந்து வேளச்சேரி, மடுவங்கரை வழியாக தி.நகருக்கு இயக்கப்படும் எம்7ஏ பஸ் சேவையை நிறுத்தக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் பி.எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
திருவான்மியூரிலிருந்து தரமணி, வேளச்சேரி, வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மடுவங்கரை, சைதாப்பேட்டை வழியாக தி.நகருக்கு எம்7ஏ மாநகர பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வேளச்சேரியின் உள்பகுதியில் சென்று வருவதால் அதிகமான மக்கள் காத்திருந்து பயணம் செய்தனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில், கடந்த வாரத்தில் திடீரென இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. போதிய அளவில் வசூலாகவில்லை எனக் கூறி நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது உண்மையல்ல. அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது மீண்டும் பஸ் சேவை தொடருகிறது. ஆனால், எம்7ஏ பஸ் சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளதால் எப்போது வேண்டுமென்றாலும் மீண்டும் நிறுத்தப்படலாம் என கருதப்படுகிறது. எனவே, இந்த பஸ்ஸை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘எம்7ஏ பஸ் நிறுத்தப்படவில்லை, தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT