Published : 05 Jul 2015 09:47 AM
Last Updated : 05 Jul 2015 09:47 AM
இந்த 92 வயதிலும் வாழ்க்கையை விறுவிறுப்பாக வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசுக்கு எதிரான அறிக்கைகள், ‘முரசொலி’க்கான கட்டுரைகள், ‘ராமானுஜர்’ தொடருக்கான கதை வசனம், இடையிடையே வந்து செல்லும் கட்சிக்காரர்களுடனான சந்திப்புகள்… இவ்வளவுக்கு நடுவிலும் வாசிக்கிறார். “இது இல்லாமல் முடியாது” என்கிறார் சிரித்துக்கொண்டே. மேஜையில் இருக்கும் ஜெயமோகனின் ‘அறம்’, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘இந்திய நாத்திகம்’ இரு புத்தகங்களும் வாசிப்பில் இருப்பதை உணர்த்துகின்றன. கருணாநிதியின் 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், ஜனநாயகத்துக்கு அவர் அளித்த மிகப் பெறுமதியான பங்களிப்புகளில் ஒன்று நெருக்கடிநிலையின்போது அவர் நடத்திய எதிர் அரசியல். நெருக்கடிநிலையின் 40 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா தன் கருப்புப் பக்கங்களைத் திரும்பிப் பார்க்கும் தருணத்தில், தன்னுடைய ஞாபக அடுக்குகளிலிருந்து அந்த வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகிறார் கருணாநிதி.
நெருக்கடிநிலை அறிவிப்பு வெளியான காலகட்டம் இப்போது நினைவில் இருக்கிறதா?
அதை எப்படி மறக்க முடியும்? 1975 ஜூன் 12 அன்று நான் தஞ்சை மாவட்டம், முத்துப்பேட்டையில் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். அன்றுதான் அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. பிரதமர் இந்திரா ரேபரேலி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா தீர்ப்பளித்தார். செய்தியாளர்கள் என்னிடம் இது தொடர்பாகக் கேட்டார்கள். “இந்தியாவின் மிகப் பெரிய கட்சி காங்கிரஸ். உலகின் மதிக்கத் தக்க மிகப் பெரிய நாடு இந்தியா. மத்திய அரசில் இருப்பவர்கள் முடிவெடுக்கும்போது இதை எண்ணிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், இப்போது அவர்கள் எடுக்கும் எந்த முடிவும் இந்தியாவின் எதிர்கால அரசியலில் ஒரு முன்மாதிரியாக இருக்கும்” என்று கூறினேன்.
அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பின் அமலாக்கத்தை நிறுத்திவைக்க இந்திரா அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. ஜுன் 23 அன்று அந்த முயற்சி பின்னடைவைச் சந்தித்த பிறகு, ஜூன் 25 அன்று இரவு அரசு நெருக்கடிநிலையைக் கொண்டுவந்தது. இந்திராவே மறுநாள் காலையில் வானொலியில் இதைத் தெரிவித்தார்.
நெருக்கடிநிலை அறிவிப்புக்குப் பின் உங்கள் உடனடி எதிர்வினை என்ன?
முன்னதாக, அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதுமே பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. பிரதமரின் ராஜிநாமாவை வலியுறுத்தி ஒரு பெரும் போராட்டத்துக்குத் திட்டமிடப்பட்டு, எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்கள் போராட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மொரார்ஜி தேசாய் தலைமையிலான இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்துக்குத் திமுகவும் அழைக்கப்பட்டிருந்தது. இதனிடையேதான் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நெருக்கடிநிலை அறிவிப்பு வெளியானதுமே நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை எம் முன் வந்திருப்பதை உணர்ந்துகொண்டோம். உடனடியாக எதிர்வினையாற்றினோம். அதாவது ஜுன் 27 காலை 11 மணிக்கெல்லாம் கட்சியின் தலைமைச் செயற்குழுவைக் கூட்டி கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டோம். அன்று விடியற்காலை 4 மணிக்கே எழுந்து, நானே என் கைப்பட அந்தக் கண்டனத் தீர்மானத்தை எழுதினேன்.
அந்த நாட்களில் உங்களை மோசமாகப் பாதித்த விஷயம் எது?
எவ்வளவோ இருக்கின்றன என்றாலும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள்தான் என்னை ரொம்பவும் பாதித்தன. ‘முரசொலி’ மூலமாகத்தான் என்னுடைய கருத்துகள் தினமும் செல்கின்றன என்பதால், அதைக் குறிவைத்தார்கள். பத்திரிகையில் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள் எதுவானாலும் தணிக்கை அதிகாரிக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும். ஒரு பக்கக் கட்டுரையை அச்சுக் கோத்து அனுப்பினால், தணிக்கை என்ற பெயரில் திரும்பி வரும்போது அவற்றில் நாலைந்து வரிகளே மிஞ்சியிருக்கும். கழகத் தோழர்கள் பிடித்துச் செல்லப்படுவார்கள்; சிறையில் வதைக்கப்படுவார்கள். எதையும் எழுத முடியாது. அதேசமயத்தில், அரசு ஆதரவு பத்திரிகைகள் மூலம், என் மீதும் கட்சியினர் மீதும் தனிப்பட்ட அவதூறுகள் அவிழ்த்துவிடப்பட்டன. எட்டு வயது நிரம்பிடாத கனிமொழிக்கு வங்கியில் எண்பதாயிரம் இருப்பதாக எழுதுவார்கள். ஆதாரங்களோடு மறுத்து ‘முரசொலி’யில் எழுதினால் அவற்றையும் வெட்டிவிடுவார்கள். ஒருகட்டத்தில் கருணாநிதி என்ற பெயரில் எதுவுமே எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. ரொம்பவும் இது காயப்படுத்தியது என்றாலும், நானும் ஓயவில்லை. போராட்டம் என்றால், அதில் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவதில் எப்போதும் நான் சளைப்பதில்லை. நான் கரிகாலன் ஆனேன். ‘கரிகாலன் பதில்கள்’ என்ற புதிய பகுதியைத் தொடங்கி எழுத ஆரம்பித்தேன்.
அப்போதுதான் பத்திரிகையும் கையுமாக வீதியில் இறங்கினீர்கள் அல்லவா, இப்படி இரண்டில் ஒன்று பார்க்கும் பிடிவாதக் குணம் எங்கிருந்து வந்தது?
அம்மா, அப்பா… அப்புறம் அன்றைக்குத் தொடங்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுகள். ஆமாம், சாதியப் பாகுபாடுகள் என் மீது போட்டிருந்த விலங்குகளை உடைக்க வேண்டும் என்றால், அயராத போராட்டம்தான் அதற்கு ஒரே வழி என்பதைத்தான் என்னுடைய வாழ்க்கை எனக்குச் சொல்லிக்கொடுத்தது.
இன்றைக்கும் சாதியப் பாகுபாடுகள் உங்களை விரட்டுகின்றனவா? எப்படிச் சொல்கிறீர்கள்? 45 வயதிலேயே நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள். கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக நீங்கள் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு மேல் அணுகிக்கொண்டிருப்பவர்களெல்லாம் தேசிய அளவிலான தலைவர்கள். அவர்களிடமெல்லாமும்கூட சாதியரீதியிலான பார்வையை எதிர்கொள்வதாகச் சொல்கிறீர்களா?
ஆமாம். அவர்களில் பலரிடமும்கூட சாதியப் பாகுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். திமுக மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப் போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எவ்வளவு உயரம் போனாலும் இங்கு சாதியம் பின்னின்று நடத்தும் அரசியலை உணர்ந்திருப்பதால்தான் சமூகநீதிக்காக எவ்வளவு தூரம் செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எவ்வளவோ காரியங்களைச் செய்திருந்தாலும், இந்தியாவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி வெற்றி கண்டதைப் பெரிய சாதனையாக நாங்கள் நினைப்பதும் அதனால்தான்.
உங்களிடம் உள்ள சமூகநீதி தொடர்பான இந்தப் பிரக்ஞை அடுத்த தலைமுறை திமுகவினரிடமும் இருக்கிறதா?
இன்றைக்கு ஊற்றப்படுகின்ற தண்ணீரும், தொடர்ந்து இடப்படுகிற உரமும் எதிர்காலத்தில் நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நெருக்கடிநிலைக் காலகட்டத்துக்கு முன்பே இந்திரா காந்தியின் பேச்சுகள் / நடவடிக்கைகளில், திமுக மீதான ஒரு கசப்புணர்வு இருந்திருப்பதை உணர முடிகிறது. பின்னாளில், திமுகவைத் தடைசெய்ய வேண்டிய இயக்கமாகக்கூட இந்திரா கருதியிருக்கிறார். இத்தனைக்கும் 1971 தேர்தலில் இந்திரா காந்தியுடன் கூட்டணி உறவுகொண்டே திமுக போட்டியிட்டிருக்கிறது. உறவு கசப்படைய என்ன காரணம்? முன்னதாக மொழிப்போர் அனுபவங்கள், சுயாட்சிக் கொள்கை போன்ற விஷயங்கள் ஏதேனும் திமுகவிடம் அவருக்கு ஒவ்வாமையை உருவாக்கியிருந்தனவா?
மொழி விவகாரம், மாநில சுயாட்சி விவகாரம், சோஷலிச அடிப்படையிலான திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்களில் காட்டிய தொடர் அக்கறை, வடக்கு - தெற்கு பாகுபாட்டு அணுகுமுறையில் எங்களுக்கு இருந்த விழிப்புணர்வு, சர்வ வல்லமை படைத்த மத்திய அரசை எதிர்த்துத் துணிச்சலாக அறைகூவல் விடுக்கும் அணுகுமுறை இப்படி எவ்வளவோ விஷயங்கள் காரணமாக திமுக தொடர்ந்து குறிவைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஒரு தேச விரோத சக்தி என்கிற அளவுக்கு கருத்துகளை விதைப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் எங்களுடைய இயக்கத்தின் தொடக்கக் கால எதிரிகள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்கள். டெல்லியின் அதிகார மையத்தை மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே இப்படியான ஒரு எண்ணத்தை உருவாக்குவதில் அக்காலகட்டத்தில் அவர்கள் மெல்ல மெல்ல வெற்றி கண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அண்ணாவின் மறைவுக்குப் பின், திமுக சாய்ந்து ஓய்ந்துவிடும் என்று பலர் மனக்கணக்கு போட்டார்கள். திமுகவோ மேலும் வலுப்பெற்று வளர்ச்சி அடைந்தது. இது தாங்கிக்கொள்ள முடியாததாகப் பலருக்கும் இருந்தது. இந்த நிலையில்தான் திமுகவிலிருந்து நண்பர் எம்ஜிஆர் பிரிந்தார்.
நாம் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசலாம். திமுகவைப் பலவீனப்படுத்த எம்ஜிஆரை இந்திரா காந்தி பயன்படுத்திக்கொண்டாரா?
இந்திராவின் மனதில் சிலர் ஊன்றிய விஷ விதை தொடர்ந்து வளர்ந்த வண்ணம் இருந்தது. அதனால், திமுகவை ஒதுக்கவும், ஓரங்கட்டவும், பலவீனப்படுத்தவும் என்னென்ன ஆயுதங்கள் வலிய வந்து அவர் கைகளில் விழுந்தனவோ அவை எல்லாவற்றையுமே அவர் பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை. அத்தகைய கருவிகளில் ஒன்றாக எம்ஜிஆரும் டெல்லிக்கு வாய்த்தார்.
எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கினாரா அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பும் உற்சாகமும் கொடுக்கப்பட்டாரா என்பதற்கு இன்றுவரை உறுதியான ஒரு பதில் கிடைக்கவில்லையே?
இந்தியாவின் கட்டுப்பாடற்ற தீவுகள் என்று தமிழகத்தையும் குஜராத்தையும் ஒருமுறை குறிப்பிடுகிறார் இந்திரா காந்தி. அப்படி என்ன கட்டுப்பாடுகளை அப்போது தமிழகம் மீறியது? இதுவரை வெளியே சொல்லாத இந்திராவின் நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள் ஏதும் இருக்கிறதா?
தமிழகத்தில் திமுகவும் குஜராத்தில் ஸ்தாபன காங்கிரஸும் அப்போது ஆட்சியில் இருந்தன. ஜனநாயகத்தைக் காப்பாற்ற எந்த விலையையும் தரத் தயாரான அரசுகளாக அவை இருந்தன. இதை இந்திராவால் ஜீரணிக்க முடியவில்லை. வெளியே பலருக்குத் தெரியாத இன்னொரு காரணம்: தமிழகத்தில் இந்திரா காங்கிரஸுடன் ஸ்தாபன காங்கிரஸ் இணைவதற்கு நான் தடையாக இருக்கிறேன் என்ற எண்ணத்தை இங்குள்ள சிலர் இந்திராவிடம் விதைத்து தூபம் போடும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருந்தனர்.
ஆனால், எந்த இந்திராவைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறீர்களோ, அதே இந்திராவுடன்தான் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி சேர்ந்தது. இன்றளவும் விமர்சிக்கப்படும் இந்த முடிவை நோக்கி உங்களை எது தள்ளியது?
டெல்லியில் 1977-க்கும் 1980-க்கும் இடையில் நடந்த ஆட்சியினால் ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளே அந்த முடிவை நோக்கித் தள்ளியது. இந்தியாவுக்கு ஒரு நிலையான ஆட்சி வேண்டும் என்ற அடிப்படையில்தான், “நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியைத் தருக” என்று கூற வேண்டிய நிலைக்கு திமுக வந்தது.
நெருக்கடிநிலையின்போதுதான் ஆட்சியை இழந்தீர்கள். கட்சி ஏராளமான கைதுகளையும் பிரிவுகளையும் சந்தித்தது. திமுகவிலிருந்து பிரிந்த எம்ஜிஆர் பெரிய அளவில் வளர்ந்தார். உங்கள் அரசியல் வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று அதைச் சொல்லலாமா?
நெருக்கடிகள் நிறைய இருந்தன என்றாலும், வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று நெருக்கடிநிலைக் காலகட்டத்தைக் குறிப்பிட முடியாது. அண்ணா மறைந்தபோது உருவானதுதான் பெரும் நெருக்கடி. அண்ணாவால் சில லட்சியங்களை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு என் மீது விழுந்ததைவிடவும் பெரிய நெருக்கடி ஏதும் இல்லை.
நெருக்கடிநிலைக்குப் பெரிய விலை கொடுத்த இயக்கங்களில் ஒன்று திமுக. ஆனால், தமிழகத்தில் தேர்தலில் அதற்கான பலன்களை அப்போது திமுகவால் அறுவடை செய்ய முடியவில்லை. என்ன காரணம்? நெருக்கடிநிலையின் கொடூரச் சூழலைப் போதிய அளவுக்கு மக்களிடம் கொண்டுசேர்க்க திமுக தவறிவிட்டதா அல்லது நெருக்கடிநிலைச் சூழலையும் தாண்டி திமுகவின் ஆட்சி மீது அப்போது இருந்த அதிருப்தியா?
இரண்டுமே தவறு. சோதனைகளை எதிர்கொள்ளும் இயக்கங்களும், தலைவர்களும் அவற்றுக்கான பலன்களை நிச்சயமாகப் பெறுவார்கள் என்பதை அரசியலில் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா என்ன? இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் வெற்றிக்குக் காரணமாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், அடுத்து நடைபெற்ற தேர்தலில் என்னவானார்? இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பலர் தீக்குளித்தும், துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகியும் மாண்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். ஆனால், அதையொட்டி நடந்த தருமபுரி தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது.1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவும் 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜரும் தோல்வியடைந்தார்களே, என்ன காரணம்? தேர்தல் வெற்றி - தோல்வி என்பது எப்போதும் வாக்காளர்களின் மனநிலையைச் சார்ந்தது. அந்த மனநிலை ஏன் அப்படி இருந்தது என்பதற்கு, தர்க்கரீதியாக துல்லியமான - சரியான காரணங்களை யாராலும் சொல்ல முடியாது.
தேசிய அரசியல் நோக்கி நீங்கள் நகர்வதற்கான வாய்ப்புகள் அந்தக் காலகட்டத்தில் உருவாகியிருக்கின்றன. அப்போது டெல்லி நோக்கி நகர்ந்திருந்தால், இன்றைக்கு முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ்போல தேசிய அரசியலில் ஓர் இடத்தைப் பிடித்து வைத்துக்கொண்டேகூட மாநில அரசியலையும் கைக்குள் வைத்திருந்திருக்கலாம். நீங்கள் ஏன் போகவில்லை?
என்னுடைய சிந்தனையும் செயலும் எப்போதும் ‘தமிழ் - தமிழர் - தமிழ்நாடு’ என்ற எல்லைக்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்கின்றன. இங்கேயே செய்ய வேண்டிய காரியங்கள் இன்னும் ஆயிரமாயிரம் இருக்கும்போது, தேசிய அரசியல் எண்ணம் எப்படி வரும்?
ஆனால், அப்போது தொடங்கி இப்போது வரை தேசிய அரசியலில் ஒரு வலைப்பின்னலை திமுகவால் உருவாக்கவே முடியவில்லை. இன்றளவும் திமுகவின் பெரிய பலவீனங்களில் ஒன்றாகவே இது நீடிக்கிறது. இதை உணர்ந்திருக்கிறீர்களா?
உணர்ந்திருக்கிறோம். அதைச் சரிசெய்வதற்கான முயற்சி களிலும் ஈடுபட்டிருக்கிறோம்.
நெருக்கடிநிலை போன்ற சூழல்கள் உண்மையில் கூட்டாட்சித் தத்துவம் இங்கு எவ்வளவு வலுவிழந்திருக் கிறது என்பதற்கும், மாநிலங்களின் உரிமைகள் எவ்வளவு துச்சமானவையாக அணுகப்படுகின்றன என்பதற்கும் உதாரணங்கள். தேசியவாதத்தின் பெயரால், சுதந்திரத் துக்குப் பின் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. தேசிய அரசில் கூட்டணி ஆட்சியில் திமுக பங்கேற்றிருந்த காலகட்டங்களிலெல்லாம் இது தொடர்பாக ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்களா? அவற்றுக்கு தேசிய அரசுகளின் எதிர்வினை என்ன?
மாநிலங்களின் உரிமைகள் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருவதை உணர்ந்துதான் 40 ஆண்டுகளுக்கு முன்பே, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கத்தை திமுக முன்வைத்தது. எப்போதுமே இது தொடர்பாக நாங்கள் பேசிவந்திருக்கிறோம். 1970 மார்ச் 21 அன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், “மாநிலங்களுக்கு ஏன் அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும்?” என்று நான் பேசியதை தேசிய அளவில் பல கட்சிகள் ஆதரித்துப் பேசின. நாட்டிலேயே முதன்முதலாக 1974-ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைத் தமிழகச் சட்ட மன்றத்தில்தான் நிறைவேற்றினோம். அப்போது தொடங்கி இப்போது வரை எங்கெல்லாம், எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம், அப்போதெல்லாம் மாநிலங்களின் மேலதிக உரிமைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவே செய்கிறோம். தேசிய அரசுகளின் எதிர்வினைகள்தான் எல்லோருக்கும் தெரியுமே?
இந்தியா இன்னொரு நெருக்கடிநிலையை எதிர்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா? இன்னொரு முறை அப்படியான ஜனநாயகப் படுகொலை நடத்தப்படாமல் இருக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன?
அப்படிப்பட்ட வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல; அதைக் கொண்டுவந்தவர்களும் பின்னாட்களில் அதன் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளவே செய்தார்கள். எனவே இன்னொரு முறை அந்த ஜனநாயகப் படுகொலையை நடத்தலாம் என்று யாரும் கனவிலும்கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
நெருக்கடிநிலை கற்றுக்கொடுத்த பெரிய பாடம் என்ன?
அண்ணா அடிக்கடி சொல்வார், “இடையறாத விழிப்புணர்வே, ஜனநாயகத்துக்கு நாம் தரும் விலை” என்று. அந்த உண்மையே, அனுபவரீதியாகக் கற்றுக்கொண்ட பெரிய பாடம்.
திமுகவின் அடையாளமாக அந்நாட்களில் அறியப்பட்ட போர்க் குணம் மிக்க உறுதியான எதிர் அரசியலை இன்று பார்க்க முடியவில்லை. இது தலைமுறை மாற்றத்தின் விளைவா அல்லது கால ஓட்டத்தின் சிதைவா?
திமுகவின் போர்க் குணம் குறைந்துவிடவில்லை; என்றைக்கும் அது குறையவும் குறையாது. இன்றைக்கும் ஜனநாயகத்துக்குப் பாதகமான ஒரு நடவடிக்கை எடுக்கப் பட்டால், திமுகவிடமிருந்து அந்தப் போர்க் குணத்தை நீங்கள் பார்க்கவே செய்வீர்கள்.
முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாகவே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடுவதில்லை என்று திமுக எடுத்த முடிவு எந்த அளவுக்குச் சரியானது?
வியூகரீதியில் அது எத்தனை சரியானது என்பதைப் பின்னாளில் பார்ப்பீர்கள்.
வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பிரச்சினைகள் உங்கள் அரசியலை உந்தித் தள்ளியிருக்கின்றன. இந்த 92 வயதில், இன்றைய காலகட்ட அரசியலில் உங்களை உந்தித் தள்ளக் கூடிய பிரச்சினை எது?
திராவிட இயக்கத்தை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று எண்ணிச் செயல்படும் சக்திகள். அவற்றை எப்படி வேரோடு களையலாம் எனும் எண்ணமே ஒவ்வொரு நாளும் கண் விழிப்பதிலிருந்து என்னை இப்போது உந்தித் தள்ளுகிறது!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT