Published : 06 May 2014 08:00 AM
Last Updated : 06 May 2014 08:00 AM
தமிழகத்தில் டாலர் சிட்டி’ என அழைக்கப்படும் திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் கும்பல் ரயிலில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் வட மாநிலத்தில் சம்பல் பள்ளத்தாக்கில் பூலான் தேவி தலைமை யிலான கொள்ளையர்கள் குதிரையில் சென்று ரயிலில் ஏறி பயணிகளிடம் பணம், நகையை கொள்ளையடித்து கதிகலங்க வைத்ததை யாரும் மறந்துவிட முடியாது.
கூட்டமாக ரயில் பெட்டிக்குள் ஏறும் கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி, பயணிகளை மிரட்டி கொள்ளை யடித்துவிட்டு அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி குதிரைகளில் தப்பிச் செல்வர். ஆனால் இன்று வட மாநில நிலைமை தமிழகத்திலும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக சேலத்தில் ரயில் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் சேலத்தில் ஜங்ஷன் ரயில் நிலையம் வழியாக கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ரயில்கள் வந்து செல்கின்றன.
நெட்வொர்க் அமைத்து திருட்டு
ரயில் கொள்ளையர்கள் சேலம் மார்க்கத்தைக் கடந்து செல்லும் ரயில்களில் கைவரிசை காட்ட தொடங்கியுள்ளனர். விசார ணையில் தமிழகத்தின் டாலர் சிட்டி’ என் வர்ணிக்கப்படும் திருப்பூர் மாவட்டம் ரயில் கொள்ளையர்களின் புகலிடமாக இருப்பது தெரியவந்துள்ளது.
திருப்பூரை தேர்ந்தெடுக்க இங்கு பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வசிப்பதே காரணம். தொழில் நகரம் என்பதால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் இங்கு தங்கியுள்ளனர். மாநிலம் முழுவதும் வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் நெட்-வொர்க்’ அமைத்து ரயில் கொள்ளைக்கு அச்சாரமிட்டுள்ளனர். பலதரப்பட்ட மனிதர்கள் வசிப்பதால் போலீஸாரின் சந்தேக பார்வையில் யாரும் சிக்குவதில்லை.
திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர் களுடன் ரயில் கொள்ளையர்கள் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களை மூளைச்சலவை செய்து, பண ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுப்பதாக போலீஸாரின் ரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது.
திட்டமிட்டு கைவரிசை
எந்த ரயில், எந்த இடம் என்பதை திட்டமிட்டு குறிப்பிட்ட ரயிலில் ஐந்து முதல் ஏழு பேர் வரை டிக்கெட் எடுத்து ஏறுகின்றனர். பின்னர் எந்த பெட்டியில் பெண்கள் அதிக நகை அணிந்து இருக்கின்றனர் என்பதை நோட்டமிட்டு அந்த பெட்டியை டார்கெட்’ செய்கின்றனர்.
ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் நடமாட்டத்தை வேவு பார்த்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை ரயில் கடக்கும்போது, அதிரடியாக கொள்ளையர்கள் கத்தி முனையில் பெண்களின் கழுத்தில் இருந்து நகையை பறிக்கின்றனர்.
அதேநேரத்தில் கொள்ளையர்களில் சிலர் ரயிலில் ஒரு பெட்டிக்கும் மற்றொரு பெட்டிக்கும் இடையில் செல்லும் ஏர் லாக்’ கை துண்டித்து விடுகின்றனர். இதனை துண்டிக்கும்போது ரயில் இன்ஜின் டிரைவருக்கு சிக்னல் கிடைக்கிறது. அவர் ஏதோ ஆபத்து என்ற நோக்கத்தில் ரயிலை நிறுத்துகிறார்.
அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் ரயிலில் இருந்து குதித்து, அந்த பகுதியில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில ஏறி தப்பிவிடு வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் சேலம் மாவட்டம் சங்ககிரி மாவேலிபாளையத்தை ரயில் கடக்கும்போது பெண்களிடம் நகை பறித்த கும்பல் ஏர்-லாக்கை துண்டித்து ரயிலை நிறுத்தி தப்பிச் சென்றனர். அதேபோன்று கடந்த ஒரு வாரத்துக்கு முன் தருமபுரி மாவட்டம் காரவள்ளியை மைசூர் எக்ஸ்பிரஸ் கடந்தபோது, ஐந்து பெண்களிடம் இருந்து 22 பவுன் தங்கநகையை பறித்த கொள்ளையர்கள் அவசரகால செயினை இழுத்து நிறுத்தி தப்பிச் சென்றனர்.
கும்பலைப் பிடிக்க தீவிரம்
இதையடுத்து ரயிலில் கொள்ளை சம்பவத்தை தடுக்கும் வகையில், சேலத்தில் ரயில்வே ஐ.ஜி. சீமா அகர்வால் ஆலோசனை நடத்தி மாநிலம் முழுவதும் 14 தனிப்படை அமைத்து ரயில் கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம் அருகே நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க ஏ.டி.எஸ்.பி ராஜவேல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப் படையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பழைய குற்றவாளிகள், வட இந்திய மற்றும் உள்ளூர் குற்றவாளிகளின் பட்டியலை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து ரயில் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்த ரயில்வே துறைக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. கொள்ளையைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையுடன், உள்ளூர் போலீஸார் இணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் கொள்ளையர்களைப் பிடிக்க, அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT