Published : 19 Jun 2015 12:08 PM
Last Updated : 19 Jun 2015 12:08 PM

சொன்னது சொன்னபடி: கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை தேவை

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

தார் சாலை வேண்டும்

சூளைமேடு, பஜனை கோயில் 2-வது தெருவில் கடந்த ஆண்டு பாதாள சாக்கடை திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கப்பட்டன. அதன்பிறகு அந்தச் சாலை சீரமைக்கப்படாததால் தற்போது அது மேடும், பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இத்தெருவைச் சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. எங்கள் பகுதி மட்டும் விடுபட்டுள்ளது. இதனால் அங்கு வாகனங்களை ஓட்டிச் செல்வது கடினமாக உள்ளது. எங்கள் பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும்.

சபீனா சலீம், சூளைமேடு.

பஸ் நிறுத்தம் வருமா?

மயிலாப்பூர் லஸ் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இரு பஸ் நிறுத்தங்களுக்கு இடையே அதிக தூரம் இருப்பதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பஸ் பிடிக்க சிரமப்படுகின்றனர். அதனால் இவ்விரு பஸ் நிறுத்தங்களுக்கு இடையே புதிய பஸ் நிறுத்தம் ஒன்றை அமைக்க வேண்டும். மேலும் ஆலிவர் சாலை சந்திப்பில் சிக்னல் ஒன்றை அமைக்க வேண்டும்.

கே.முத்து, மயிலாப்பூர்.

கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை தேவை

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட கந்தசாமி நகரில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை வசதியோ, கழிவுநீர் கால்வாய் வசதியோ ஏற்படுத்தப்படவில்லை. வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் அந்த சாலையில் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் கழிவுநீரை முறையாக வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.பரமேஷ், பூந்தமல்லி.

எரியாத விளக்குகள்

செங்குன்றத்தை அடுத்த காட்டுநாயக்கன் நகரில் பல தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் விஷப் பூச்சிகளுக்கு பயந்து பொதுமக்கள் வெளியில் வருவதில்லை. எனவே இப்பகுதியில் அனைத்து தெரு விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.கனகராஜ், நல்லூர்

நேரடி பஸ் இயங்குமா?

திருவல்லிக்கேணி - ராயபுரம் இடையே இயக்கப்பட்டு வந்த 4எச், 31, 38எஃப் ஆகிய பஸ் சேவைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டன. இப்போது திருவல்லிக்கேணியிலிருந்து ராயபுரம் செல்ல வேண்டுமென்றால் 2 பஸ்கள் மாற வேண்டியுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே இவ்விரு பகுதிகளுக்கிடையே நேரடி பஸ்களை இயக்க வேண்டும்.

எச்.முகமது லியாகத் உசேன், திருவல்லிக்கேணி.

மின் பிரச்சினை

அயனாவரம் என்.எம்.கே. தெரு மற்றும் பல்வேறு தெருக்களில் இரவு நேரங்களில் குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வழங்கப்படுவதால் மின் விசிறி, டியூப் லைட் போன்றவை பழுதாகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மின்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு சீரான அழுத்தத்தில் மின்சாரம் வழங்க வேண்டும்.

சி.எஸ்.செல்வம், அயனாவரம்

திறந்துகிடக்கும் கழிவுநீர் கால்வாய்

பழைய பெருங்களத்தூர், கண்ணன் அவென்யூ பகுதியில் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது, பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும் அச்சத்துடன் சாலையோரம் ஒதுங்கவேண்டியுள்ளது. இந்த திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெஹ்பர் மதீனா பேகம், தாம்பரம்.

சாலை சீரமைக்கப்படுமா?

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அஜாக்ஸ் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சர்வீஸ் சாலை பழுதடைந்துள்ளது. இங்கு பாதாள சாக்கடைக்கு பல இடங்களில் மூடிகள் இல்லை. நிலத்துக்கடியில் கொண்டு செல்ல வேண்டிய மின் கேபிள்கள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அதனால் இந்த சாலையை போக்குவரத்துக்கு ஏற்றவாறு சீரமைக்க வேண்டும்.

பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.

வாகன நிறுத்தத்தை அகற்ற வேண்டும்

மேற்கு சைதாபேட்டை காரணீஸ்வரர் கோயில் குளக்கரை சாலையில் குடிநீர் வாரியம் சார்பில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் இச்சாலையில் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடிவதில்லை. எனவே அப்பகுதியிலுள்ள வாகன நிறுத்தங்களை உடனடியாக அப்புறப்படுத்தினால் ஆம்புலன்ஸ்கள் செல்ல ஏதுவாக இருக்கும்.

வாசகர், மேற்கு சைதாப்பேட்டை.



அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x