Published : 23 Jun 2015 10:19 AM
Last Updated : 23 Jun 2015 10:19 AM

ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கி செயல்பட வேண்டும் - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். வாசகர்கள் பகிர்ந்துகொண்டதில் சிலவற்றை:

பிஎஸ்என்எல் புதிய சேவை வரி முன்கூட்டியே வசூலிப்பு

உயர்த்தப்பட்ட புதிய சேவை வரியை பிஎஸ்என்எல் நிறுவனம் முன்கூட்டியே வசூலிப்பதாக நடராஜன் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரலில் புகார் அளித்துள்ளார்.

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வாசகர் நடராஜன் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனம் சேவை வரியை 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது ஜூனிலிருந்து அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மே மாதத்துக்கான சந்தா தொகையிலேயே புதிய சேவை வரி சேர்க்கப் பட்டுள்ளது. அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மே மாதத்துக்கான பில், ஜூன் மாதத்தில் வழங்கப்படுவதால், புதிய சேவை வரி அப்போது விதிக்கப்படுகிறது’ என்கின்றனர். ஜூன் மாத பயன்பாட்டுக்குத்தான் புதிய சேவை வரியை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பிஎஸ்என்எல் சென்னை தொலைத்தொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதியிடம் கேட்டபோது, “புதிய சேவை வரி ஜூன் மாதத்திலிருந்து வசூலிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்திருந்தது. ஒருவேளை நாங்கள் மே மாதத்தில் பில் வழங்கியிருந்தால், புதிய சேவை வரி அப்போது வசூலிக்கப்பட்டிருக்காது. பில் ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டதால், அரசு அறிவித்தபடி ஜூன் மாதத்திலிருந்து புதிய சேவை வரியை வசூலிக்கிறோம். இதே நடைமுறையைதான் எல்லா நிறுவனங்களும் பின்பற்றுகின்றன” என்றார்.

***

ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கி செயல்பட வேண்டும்

குரோம்பேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என வாசகர் ஒருவர் ‘உங்கள் குரல்’ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த வாசகர் வி.குமார் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது:

குரோம்பேட்டையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கி கிளை தொடங்கப்பட்டது. அப்போது ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக இருந்தது. வார நாட்களில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை வங்கி செயல்பட்டு வந்தது. இது வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனளித்தது.

ஆனால், தற்போது ஞாயிற்றுக்கிழமை வங்கிக்கு விடுமுறை அளித்துள்ளதோடு, வேலை நேரம் காலை 11 முதல் மாலை 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு செல்வோர், வங்கிப் பணிகளுக்காக ஒருநாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இவ்வங்கியின் வேலை நேரத்தை பழையபடி மாற்ற வேண்டும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீகுமார் கூறினார்.

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இந்த வங்கிக் கிளை தொடங்கப்பட்டபோது ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக செயல்பட்டு வந்தது. வார நாட்களில் விடுமுறை விடப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை ரிசர்வ் வங்கியில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வாடிக்கையாளர்களின் காசோலைகளை மாற்றுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதுதவிர, நிர்வாக ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் வங்கியின் விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மீண்டும் ஞாயிற்றுக்கிழமையில் வங்கி செயல்பட வேண்டுமானால் அதற்கு வங்கி நிர்வாகம் மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தால்தான் அதுகுறித்து முடிவு செய்ய முடியும்’’ என்றார்.

***

கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து முன்பதிவு மையம் மாறியதால் அவதி

கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்த கணினி முன்பதிவு மையம் ரிசர்வ் வங்கி எதிரே மாற்றப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை காசிமேட்டைச் சேர்ந்த எம்.தூயமூர்த்தி என்ற வாசகர் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது:

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் வெளியூர்களுக்குச் செல்வதற்கான ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்காக கணினி முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது.

இந்த மையத்தை தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இது அனைவருக்கும் மிகவும் வசதியாக இருந்தது.

இந்நிலையில், அண்மையில் இந்த முன்பதிவு மையம் ரிசர்வ் வங்கி எதிரே மாற்றப்பட்டுள்ளது. இதனால் ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வெகு தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், ரயில் பிடிக்கச் செல்லும் பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

எனவே, பயணிகளின் நலன் கருதி மீண்டும் கணினி முன்பதிவு மையத்தை கடற்கரை ரயில் நிலையத்துக்கே மாற்ற வேண்டும். இவ்வாறு தூயமூர்த்தி கூறினார்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கடற்கரை ரயில் நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக கணினி முன்பதிவு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. எனினும், பயணிகளின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

அன்புள்ள வாசகர்களே...

'தி இந்து' தமிழ் நாளிதழ் உங்களோடு இன்னும் நெருக்கமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. வழக்கமாக நீங்கள் எழுதும் கடிதங்கள், மின்னஞ்சல்கள், 'தி இந்து' அலுவலகத்துடனான தொலைபேசி தொடர்புகள் இவற்றையும் தாண்டி, இந்தத் தொழில் நுட்பம் நமக்குள்ளே கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நீங்கள் தரும் தகவல்களை செய்தியாளர்கள் மூலம் சரி பார்த்து செய்தியாக்க காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறுமுனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் எண்ணங்களையோ... அளிக்க நினைக்கும் புதிய தகவலையோ பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் பதிவில் உள்ள தகவல்கள் போதாதபட்சத்தில், நாங்களே உங்களைத் தொடர்புகொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x