Published : 13 Jun 2015 11:15 AM
Last Updated : 13 Jun 2015 11:15 AM
“இனிமேல் (டிசம்பர் 2015 முதல்) சென்னை டிசம்பர் இசை விழா வில் நான் பாட மாட்டேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஐந்து அல்லது ஆறாவது வயது முதல், என்னுடைய சங்கீத பிரபஞ்சத்தில் ‘சீஸன்’ ஒரு பகுதி யாகவே இருந்திருக்கிறது. இசைக் கலைஞர் களிடமிருந்தும், இசை ஆராய்ச்சியாளர்களிட மிருந்தும், நிபுணர்கள், ரசிகர்களிடமிருந்தும் நான் நிறைய கற்றுத் தெரிந்திருக்கிறேன். துரதிருஷ்டவசமாக, இப்போது நான் இருக் கும் இடத்தில், டிசம்பர் சீஸனுடன் என்னுடைய இசைப் பயணத்தை ஒத்துப்போக வைக்க இயலவில்லை.
என்னுடைய இந்த முடிவை கச்சேரி நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டேன். இசை உலகில் என்னுடைய வளர்ச்சிக்கு சென்னை சபாக்கள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. கடந்த சில வருடங்களாக, என்னுடைய பல்வேறு வேண்டுகோள்களை பெருந்தன்மையுடன் ஏற்று சபாக்கள் ஒத் துழைப்புக் கொடுத்தன. அவர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் என் நன்றி” - தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன் முடிவை இப்படி வெளிப்படுத்தியிருந்தார் வித்வான் டி.எம். கிருஷ்ணா.
கடந்த சில வருடங்களாக கிருஷ்ணாவின் இசைப் பயணத்தை (மேடையிலும், எழுத் திலும்) பின் தொடர்ந்து கொண்டிருப்பவர் களுக்கு அவருடைய இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்.
இதுபற்றி டி.எம்.கிருஷ்ணாவிடம் பேசினேன்.
கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக சென்னையில் சங்கீத சீஸன் நடத்தப்பட்டு வரும் முறை அவருக்குப் பிடித்தமானதாக இல்லை. டிசம்பரில் நிறைய சத்தம்தான் இருக்கிறதே தவிர, சங்கீதம் குறைவாகவே இருக்கிறது என்பது அவரது எண்ணம். பிரபலமான ஒரு சிலரை மனதில் வைத்தே சீஸன் நடத்தப்படுவதாக அவர் நினைக்கிறார்.கச்சேரி செய்பவர்களும் இந்த சீஸன்ல புதுசா என்ன டிரஸ் போட்டுக்கலாம்... புதுசா என்ன உருப்படி பாடலாம் என்பதை மட்டுமே சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்கிறார் கிருஷ்ணா, வருத்தம் கலந்த குரலில்.
பிரபலங்கள் தவிர மற்றவர்கள் கூட்டம் ஈர்ப்பதில்லை என்று சபாக்காரர்கள் சொல்வதிலும் இவருக்கு உடன்பாடில்லை.
“கூட்டம் என்ன சார் கூட்டம்? எல்லா கச்சேரி களுக்கும் ஆயிரம் பேர் வரணும்னு எதுக்கு எதிர் பார்க்கணும்? நல்ல சங்கீதம் கொடுக்க எத்தனையோ பேர் இருக்காங்க... அவங் களுக்கு சான்ஸ்தான் கிடைக்கிறதில்லே... நூறு, இருநூறு பேரு ஆடியன்ஸ்ல இருந்தாலும் பரவாயில்லைன்னு இவங்களுக்கு மேடை கொடுக்கலாமே... பத்து, பதினைஞ்சு வருஷங் களுக்கு முன்னாடி எல்லாம் இப்படி இருக்கலே” என்கிறார்.
மொத்தத்தில், டிசம்பர் சீஸன் என்பதே இயந் திரத்தனமான ஒன்றாகிவிட்டது என்பது கிருஷ்ணாவின் அனுமானம். சொல்லிவைத்த மாதிரி என்.ஆர்.ஐக்கள் வந்து குவிந்துவிடு கிறார்கள். டிசம்பர் 17 அன்று ஒரு சபாவில் ஒருவர் பாடி முடித்த உடனேயே, அதே மேடையில் அடுத்த டிசம்பர் 17 அன்று பாட அவருக்கு தேதி கொடுத்து விடுகிறார்கள். டிசம்பர் பிறந்தால் காளான்கள் மாதிரி புது சபாக்கள் முளைத்துவிடுகின்றன.
இசைக் கலைஞர்கள் சிலரே கூட சபாக்கள் சிலவற்றுடன் கைகோர்த்து இசை விழா நடத்துவதும், தங் களுக்கு தெரிந்த பாடகர்கள் சிலருக்கு அங்கே வாய்ப்பு கொடுப்பதும் நடக்கிறது. பணம் வாங்கிக் கொண்டு தேதி கொடுக்கும் கூத்தும் ஒரு சில இடங்களில் அரங்கேறுவது உண்டு! இவை எல்லாவற்றுக்கும் மேலாக, 80, 90 வயது நிரம்பிய பாடகர்களில் ஒருசிலர் ஓய்வெடுக்க மனமில்லாமல் பிடிவாதமாக பாட விரும்பு வதும், சபாக்களும் சக்கர நாற்காலியில் அவர்களை மேடைக்கு அழைத்து வந்து இம்சிப்பதும் நடக்கிறது.
‘‘நிலைமையை சரி செய்ய, சபா நிர்வாகி களும், இசை உலகை சேர்ந்தவர்களும் ஒன்றாகக்கூடி உட்கார்ந்து விவாதம் செய்திருக்கிறார்களா?’’ என்று கிருஷ்ணா கேட்பது நியாயமான கேள்வி.
நிற்க…
டிசம்பரில் டி.எம்.கிருஷ்ணா பாடப்போவ தில்லை என்பதால் சென்னை ரசிகர்கள் பெரிதாக ‘ஃபீல்’ செய்ய எதுவுமில்லை. ஏனெனில், மற்ற பதினோரு மாதங்களில் பாடுவதற்கு அவர் தயாராகவே இருக்கிறார் சபாக்கள் விரும்பும் பட்சத்தில். இதை சபா செயலர்களுக்கு அவர் தெரிவித்தும் இருக்கிறார். தவிர, சங்கீத உலகில் இருந்து அவர் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு விடவும் இல்லை!
தொடர்ந்து 25 வருடங்களில் டி.எம்.கிருஷ்ணா அடைந்துள்ள வளர்ச்சி நிமிர்ந்து பார்க்க வைக்கும் ஒன்று. பாடகராக மட்டுமின்றி, கச்சேரி மேடைகளில் மாறுபட்ட அணுகுமுறை கொண்டவராக, எழுத்தாளராக, பேச்சாளராக, மனதில் படுவதை தயக்கமின்றி வெளிப்படுத்துபவராக உயரம் தொட முயற்சிப்பவர் இவர்.
உள்ளுணர்வின்படியே எந்த முடிவையும் எடுப்பவர் இப்போதைய டிசம்பர் புறக்கணிப் பும் சேர்த்து!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT