Published : 12 Jun 2015 11:18 AM
Last Updated : 12 Jun 2015 11:18 AM

சொன்னது சொன்னபடி - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். வாசகர்கள் பகிர்ந்துகொண்டதில் சிலவற்றை:

  • 8ஏ பேருந்தை இயக்க வேண்டும்

பெரம்பூர் திரு.வி.க.நகரிலிருந்து ராயபுரம், காசிமேடு வழியாக சுங்கச்சாவடி வரை இயக்கப்பட்டு வந்த 8ஏ என்ற எண் கொண்ட பேருந்து சேவை சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் அண்ணா சதுக்கம், பெசன்ட்நகர் ஆகிய பகுதிகளிலிருந்து பெரம்பூர் வரை இயக்கப்படும் பஸ்களை திரு.வி.க.நகர் வரை நீட்டிக்க வேண்டும்.

ஜெ.கிருஷ்ணன், திரு.வி.க.நகர்

***

  • ஏரியைச் சுற்றி நடைபாதை அமைக்க வேண்டும்

வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. வேளச்சேரியில் நடைபயிற்சி மேற்கொள்ள பூங்காக்கள் அமைக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள போதிய இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் வேளச்சேரி ஏரியைச் சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா அமைத்தால் இரு பிரச்சினைகளுக்கும் அது தீர்வாக அமையும். இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆர்.மீனாள், வேளச்சேரி

***

  • பாதை அமைக்க வேண்டும்

சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சேத்துப்பட்டு பாலத்தின் மீது ஏறி, சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது சேத்துப்பட்டு ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து, ஏரி வழியாக மருத்துவமனைக்குச் செல்ல பாதை அமைத்தால் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எஸ்.பாலசுப்பிரமணியன்,புழுதிவாக்கம்

***

  • நிழற்குடை அமைக்க வேண்டும்

போரூர் விக்னேஷ்வரா நகர் பஸ் நிறுத்தத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விதிகளை மீறி விளம்பர நிறுவனத்தால் வைக்கப்பட்ட நிழற்குடை அகற்றப்பட்டது. அங்கு தற்போது நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனால் அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

ஏ.உமாமகேஷ்வரன், போரூர்

***

  • மேடவாக்கம் - தி.நகர் பஸ் இயக்க வேண்டும்

மேடவாக்கத்திலிருந்து வேளச்சேரி, பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மாநகரின் முக்கிய பகுதியான தி.நகருக்கு நேரடியாக பஸ் இயக்கப்படுவதில்லை. அதனால் இப்பகுதியிலிருந்து தி.நகருக்கு நேரடியாக வெள்ளை பலகை கொண்ட பஸ் இயக்க வேண்டும்.

ஆர்.கண்ணன், மேடவாக்கம்

***

  • சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

தற்போது மாணவர் சேர்க்கை காலம் என்பதால் சோழிங்கநல்லூர் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ்கள் கோரி பொதுமக்கள் வருவது அதிகரித்துள்ளது. அலுவலக ஊழியர்கள் பணம் கொடுப்போருக்கு மட்டுமே விரைவாக சான்றிதழ்களைப் பெற்று தருகின்றனர். பணம் கொடுக்காதோரின் விண்ணப்பங்களை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்புவதே இல்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு வாசகர், சோழிங்கநல்லூர்

  • அதிக மின் கட்டணம் வசூலிப்பு

கிருகம்பாக்கம் பாரதிநகர் பகுதியில் வாடகை வீடுகளுக்கு தனி மீட்டர் இருந்தாலும், யூனிட்டுக்கு ரூ.7 வரை வாடகைதாரர்களிடம் இருந்து மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வாடகைதாரர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசகி, கிருகம்பாக்கம்

***

  • மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

வில்லிவாக்கத்தில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிக்கு செல்லும் சாலையில் (மக்காராம் இடுகாடு உள்ள சாலை) சிலர் செங்கல், மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களை சாலையில் கொட்டிவைத்துள் ளனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கட்டுமான பொருட்களை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்த்தி, வில்லிவாக்கம்



அன்புள்ள வாசகர்களே...

'தி இந்து' தமிழ் நாளிதழ் உங்களோடு இன்னும் நெருக்கமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. வழக்கமாக நீங்கள் எழுதும் கடிதங்கள், மின்னஞ்சல்கள், 'தி இந்து' அலுவலகத்துடனான தொலைபேசி தொடர்புகள் இவற்றையும் தாண்டி, இந்தத் தொழில் நுட்பம் நமக்குள்ளே கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நீங்கள் தரும் தகவல்களை செய்தியாளர்கள் மூலம் சரி பார்த்து செய்தியாக்க காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறுமுனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் எண்ணங்களையோ... அளிக்க நினைக்கும் புதிய தகவலையோ பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் பதிவில் உள்ள தகவல்கள் போதாதபட்சத்தில், நாங்களே உங்களைத் தொடர்புகொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x