Published : 27 May 2015 06:17 PM
Last Updated : 27 May 2015 06:17 PM
செய்தி:>மீண்டும் வெடித்தது 'லிங்கா' விவகாரம்: விநியோகஸ்தர்கள் - தயாரிப்பாளர் சங்கம் மோதல்!
'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆனந்தன் கருத்துப் பகிர்வு:
தமிழ் சினிமா இதுவரை பார்க்காத சில காட்சிகள், அருவருப்பான பேரங்களை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு படம் வெளியாகி பெரும் லாபம் குவிக்கும்போது, அதை முழுவதுமாக அனுபவிப்பவர்கள் அதைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையிட்ட தியேட்டர்காரர்கள்தான்.
அட, இடையில் வரும் மீடியேட்டர்களுக்குக் கூட நல்ல லாபம். அப்போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமான படத்தின் நாயகனுக்கோ அல்லது இயக்குநருக்கோ லாபத்தில் யாரும் பங்கு தருவதில்லை. கேட்டால் 'இது யாவாரம்.. லாப நட்டம் சகஜம்' எனத் தத்துவம் பேசுவார்கள்.
ஆனால் அதே படம், குறிப்பாக ரஜினி படம் சரியாகப் போகவில்லை என்றால், உடனே நஷ்டத்தை திருப்பிக் கொடுங்கள் என ரஜினியை நெருக்குகிறார்கள். இப்போது, அந்த 'வியாபார எத்திக்ஸ்' எங்கே போனதென்று தெரியவில்லை.
எரியும் வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற கொடூர புத்தி. 'உலகில் எந்த நாட்டு சினிமாவிலும் படத்தின் நஷ்டத்தை அதில் நடித்த ஹீரோ ஈடுகட்டியதாக கட்டுக் கதைகள் கூடக் கிடையாது. ஆனால் பாபா படத்துக்காக முதன் முதலில் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் நஷ்ட ஈடு கொடுத்தவர் ரஜினி.
இத்தனைக்கும் அப்போது யாருமே அவரிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதி காத்தார்கள். ஆனால் நஷ்டம் என்ற முணுமுணுப்பு காதில் விழுந்ததால் அந்த நஷ்ட ஈட்டை முன்வைந்து கொடுத்தார் ரஜினி.
அதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இப்போது லிங்காவுக்கு ப்ளாக் மெயிலை விட மோசமான முறையில் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அநாகரீகத்தின் உச்சம் மட்டுமல்ல, மிக மோசடியானது," என்கிறார் அனுபவசாலி விநியோகஸ்தர் ஒருவர்.
ரஜினி படங்கள் மூலம் பல கோடிகள் லாபம் பார்த்தவர் இவர். எல்லாவற்றையும் விட கொடுமை, இப்படி கேவலமான முறையில் நஷ்ட ஈடு கேட்டவர்களுக்கும் ரூ 12.50 கோடி வரை நஷ்ட ஈட்டுத் தொகை கொடுத்துள்ளார் ரஜினி. அந்தத் தொகையை ஒழுங்காகப் பிரித்துக் கொள்ளக் கூட முடியாத இவர்கள், இப்போது மீண்டும் நஷ்டஈட்டுப் புராணத்தை ஆரம்பித்துள்ளனர்.
பேராசை என்ற கொடிய வியாதிக்கு மருந்துமில்லை.. தீர்வுமில்லை. லிங்கா விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரின் பேராசை இன்று தமிழ் சினிமாவையே கேவலமாக்கிக் கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT