Published : 06 May 2015 09:09 AM
Last Updated : 06 May 2015 09:09 AM

நம்மைச் சுற்றி... | விமர்சிக்கப்படும் இடம் நோக்கி அர்னப்

* விமர்சிக்கும் இடத்திலிருந்து விமர்சிக்கப்படும் இடம் நோக்கி நகர்கிறார் அர்னப் கோஸ்வாமி. ‘அவுட்லுக்’ கவர் ஸ்டோரியின் தொடர்ச்சியாக என்டிடிவியின் சமீபத்திய விடியோவும் செமத்தியாக வாரியிருக்கிறது.

* காஷ்மீர் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த பாலிவுட்டை பள்ளத்தாக்குக்கு வரவேற்கும் முதல்வர் முஃப்தி முஹம்மது சய்யீதின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. முதலில், கபீர் கான் இயக்கும் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த சல்மான் கானை வரவேற்றார். ம்ஹூம். அடுத்து, ‘ரயீஸ்’ மற்றும் ‘தில்வாலே’ படங்களின் படப்பிடிப்புக்காக ஷாருக் கானை வரவேற்றார். ம்ஹூஹூம். ஆனாலும், அசராமல் மும்பையை வட்டமிடுகிறார் முப்தி.

* தாவூத் இப்ராஹிம் தன்னைத் தொடர்புகொண்டு, சரணடைவது தொடர்பாகப் பேசினார் என்று ராம் ஜெத்மலானி மீண்டும் கூறியிருப்பது, மும்பையில் தாவூத் பற்றிய கதைகளை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது. கூடவே, மும்பை போலீஸின் இயலாக் கதைகளையும்!

* உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மம்தாவைத் துள்ளவைத்திருக்கின்றன. திரிணமுல் காங்கிரஸின் மகத்தான வெற்றி ஒருபக்கம் என்றால், பாஜகவின் படுதோல்வி மறுபக்கம். மே 9 அன்று கொல்கத்தா வரும் மோடியை விமான நிலையத்தில் பெருமிதத்தோடு வரவேற்பார் மம்தா என்கிறார்கள் தொண்டர்கள். முன்கூட்டியே சட்டசபைத் தேர்தலையும் அவர் வரவேற்கத் தயாராகிறார் என்றும் யூகங்கள் சுற்றுகின்றன!

* புத்தரின் கடைசிப் பயணத்தைக் கச்சாமி பரிக்ரமா என்பார்கள். உத்தரப் பிரதேசத்தின் பாவா நகரிலிருந்து குஷிநகர் வரையிலான 15 கி.மீ. பயணம் இது. இந்தப் பாதையைப் பொருளாதாரரீதியாகப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது உ.பி. சுற்றுலாத் துறை.

பெண்ணுக்குத் திருமண வயது 18 என்கிறது சட்டம். ராஜஸ்தானில் அதை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. மாநிலத்தில் 15 முதல் 17 வயதுள்ள பெண்களில் 15.88% பேர் கல்யாணமானவர்கள் என்கிறது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. அட்சய திருதியை அன்று மட்டும் ஆயிரக் கணக்கான குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. பெண் முதல்வர் என்ன செய்யப்போகிறார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x