Last Updated : 16 May, 2015 10:21 AM

 

Published : 16 May 2015 10:21 AM
Last Updated : 16 May 2015 10:21 AM

இசை, ஓவியம், நாடகம், இலக்கியத் துறைகளில் சாதனை புரியும் மூத்த தம்பதி

பள்ளி வயதில் துளிர்த்த ஓவிய ஆர்வமும், இளைய வயதில் கற்றுக்கொண்ட கர்நாடக இசையும், பணி ஓய்வுக்குப் பிறகு அரும்பிய இலக்கியத்தின் மீதான ஈடுபாடும் என 50 ஆண்டுகளைக் கடந்தும் இல்லற வாழ்வில் இணைந்து கைகோர்த்தபடி தொடர்ந்து பல் வேறு விருதுகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறார்கள் எஸ்.வி.வரதராஜன் (82), சாந்தா வரதராஜன் (73) தம்பதியினர்.

சேலத்தில் பிறந்த வரதராஜன் தனது 22 வயதில் சி.எஸ்.எஸ். (சென்ட்ரல் செக்ரடேரியட் சர்வீஸ்) தேர்வில் தேர்ச்சி பெற்று, டெல்லி யில் மத்திய நிதியமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். சற்றும் தளராத உற்சாகத்தோடு 60 ஆண்டுகளுக்கு முந்தைய தனது அனுபவத்தை ‘தி இந்து’வுக்காக பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதிலிருந்து..

“எங்க வீட்டில் எல்லாருமே இசை ஞானத்தோடு நல்லாப் பாடு வாங்க. நானும் கொஞ்சம் பாடு வேன். டெல்லியில் வேலை கிடைச்சுப் போனதும், அங்கே முறைப்படி கர்நாடக சங்கீதம் கற் றுக் கொண்டேன். அதுமட்டுமில்லா மல், மிருதங்கம் வாசிக்கவும் கத்துக்கிட்டு, டெல்லி அகில இந்திய வானொலியில் நிலைய இசைக் கலைஞராக நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் செஞ்சிருக்கேன். பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துமிருக்கிறேன்.

டெல்லியில் இருக்கும்போது தினமும் ‘தி இந்து’ நாளிதழைப் படிச்சிட்டு நிறைய வாசகர் கடிதங் கள் எழுதுவேன். அவை பிரசுரமா கும். எனக்கு எழுதணும்ங்கிற உத்வேகத்தை ஆரம்பத்தில் அந்தக் கடிதங்கள்தான் தந்தன. அதன் பிறகு தமிழிலும் ஆங்கிலத்திலும் இசை குறித்தும், ஆன்மிகம் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் எழுதினேன். அவை பிறகு நூல் களாகவும் வெளிவந்தன” என ஓர் இளைஞனுக்கான உற்சாக குரலில் கூறிக்கொண்டே, தான் எழுதிய தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கிய நூல்களை நம்மிடம் காட்டினார் எஸ்.வி.வரதராஜன்.

அதுவரை அமைதியாய் இருந்த சாந்தா வரதராஜன் முகம் மலர்ந்த புன்னகையுடன் பேச ஆரம்பித்தார். அவர் கூறியதிலிருந்து..

“நான் தஞ்சை மாவட்டத்திலுள்ள வரகூரில் பிறந்தாலும், படித்ததெல் லாம் திருச்சியில்தான். படிப்பில் எனக்கு நிறைய ஆர்வம். பி.எஸ்சி. முதல் ரேங்கில் தேறினேன். அது மட்டுமல்லாமல் ஓவியங்கள் வரை வேன். கண்ணாடி பெயின்டிங், ஜிகினா டிசைன் ஒர்க்ஸ் செய்வேன். எனக்கு 22 வயசில் திருமணமானது. இவரோட டெல்லிக்குப் போயிட் டேன். இந்தி தெரியாது. அதுக்காக சும்மா வீட்டில் இருக்காமல், இவ ரோடு கச்சேரிக்குப் போய் நானும் சேர்ந்து பாடுவேன். அப்படி பாடிப் பாடியே நானும் இசையைக் கற்றுக் கொண்டேன். இவரும் நானும் சேர்ந்து பல்லாயிரம் நிகழ்ச்சிகள் டெல்லி, சென்னை போன்ற பல நகரங்களில் நடத்தியிருக்கோம். 2 பிள்ளைகளும் வேலைக்காக வெளிநாடு போன பிறகு, நாங்க சென்னைக்கே வந்துட்டோம்.

பணி ஓய்வுக்குப் பிறகு இவருக் கும் எனக்கும் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டானது. நான் கவிதை, சமூக முன்னேற்றம், இலக் கியம், இந்தியக் கலாச்சாரம்னு எழுத ஆரம்பித்து, இதுவரை 12 நூல்கள் வெளிவந்துள்ளன” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே தபாலில் வந்த சிற்றிதழ் ஒன்றைப் பிரிக்கிறார். அதில், இவரது கவிதை பிரசுரமாகி யிருப்பதை, ஆர்வத்தோடு காட்டினார்.

வயதான காலத்திலும் நம்மால் என்ன முடியும் என்று சோர்ந்துவிடா மல், தங்களால் இயன்ற வகையில் இசை, இலக்கிய ஆன்மிகப் பணி களை இருவரும் ஒன்றாய் இணைந்து செய்கிறார்கள். மேற்கு மாம்பலத்தில் உள்ள தங்கள் வீட்டின் நடுக்கூடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளார்கள்.

ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், உதவி கேட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கும், சமூக-ஆன்மிக நற்பணிகளுக்கும் தங்களாலான பொருளாதார உதவிகளைச் செய்து வரும் இந்த மூத்த தம்பதியினர் இருவருக்கும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை கடந்த 2015 ஏப்ரல் அன்று ‘கலை முதுமணி’ விருதையும் பொற்கிழியையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது. சென்னையிலுள்ள பல்வேறு இலக்கிய-ஆன்மிக அமைப்புகள் 30-க்கும் மேற்பட்ட விருதுகளை இருவருக்கும் வழங்கியுள்ளன.

“இன்றைய தலைமுறையின ருக்கு பொது அறிவு அதிகமாகவே இருக்கு. பெற்றோர், பெரியவர் சொல்வதைக் கேட்டு நடக்கணும். எல்லாவற்றுக்கும் கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்தாமல், புத்தகங் களையும் வாங்கிப் படிக்கணும். கணவன், மனைவி இருவருமே ஈகோ இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றுமே வசந்தம் வீசும்” என்று ஒரே குரலில் கூறினர் அந்தத் தம்பதி.

இருவரும் இணைந்த இல்லற வாழ்வில், இசையும் ஓவியமும் இலக்கியமும் சேர்ந்தே செழிப்பதில் வாழ்க்கைக்கு புது அர்த்தம் படைத்து வருகிறார்கள் வரதராஜன் தம்பதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x