Last Updated : 11 May, 2014 12:00 AM

 

Published : 11 May 2014 12:00 AM
Last Updated : 11 May 2014 12:00 AM

வேவு வாசலுக்கு விசாரணை உண்டா?

வேவு வாசல் (ஸ்னூப்கேட்) என்று தினமும் நாளிதழ் களில் அடிபடுகிறதே அது என்ன வாசல்? நம்ம மதுரையில் உள்ளதுபோல் வடக்கு வாசல், காளவாசல் மாதிரி இன்னொரு கேட் வாசலா?

குஜராத் முதல்வர் (பிரதமருக்கான வேட்பாளர்) உத்தரவின் பேரில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காவல் துறை வேவுபார்த்ததைத்தான் அவ்வாறு பெயரிட்டுள்ளார்கள்.

ஒரு மோசடியோ ஊழலோ எங்கேனும் நடைபெற்றால், அந்தச் சம்பவத்துடன் வாசல் என்று சேர்த்துக் குறிப்பிடுவதுதான் தற்போதைய நடைமுறை. எப்படி ‘கேட்’ என்ற சொல் இந்தப் பிரச்சினைகளில் தொற்றிக்கொண்டது?

வாசலின் வரலாறு

அமெரிக்க அதிபர் நிக்சன் இரண்டாம் முறையாகப் பதவிப் போட்டிக்குத் தயாரானபோது அதற்கொரு குழுவை அமைத்தார். பிரச்சாரம் செய்ததுபோக, அக்குழுவினர் போட்டி வேட்பாளரைப் பற்றிய தகவல்களைத் தோண்டித்துருவ ஆரம்பித்தனர். போட்டி வேட்பாளருடைய மனநிலையைக் கண்டுபிடிக்க அவரது மனநல மருத்துவரிடமிருந்த அவரது மருத்துவ ஆவணங்களைத் திருட முற்பட்டனர். மருத்துவரின் கிளினிக் இருந்த கட்டிடத்தின் பெயர்தான் ‘வாட்டர்கேட்’. குழாய் ரிப்பேர் செய்ய வந்துள்ளோம் என்று உளவுத் துறைக் காவலர்கள் இருவர், அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்து, மனநல மருத்துவரின் ஆவணங்களைத் திருடி, அதன்மூலம் எதிரி வேட்பாளர் மனநிலை குன்றியவர் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. சம்பவம் வெளியே தெரிந்த பின்னர், அந்தத் திருட்டுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையேயிருந்த உறவு ஆராயப்பட்டது. அங்கிருந்த தொலைபேசியில் நடைபெற்ற உரையாடல்கள் சம்பந்தமான ஒலிப்பதிவு நாடாக்களை (நிக்சன் டேப்ஸ்) நீதிமன்றம் கோரியபோது, நிக்சன் தரப்பில் சட்ட விலக்களிப்பு கோரப்பட்டது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதை மறுத்து ஒலி நாடாக்களை வெளியிட உத்தரவிட்டது. அந்த நீதிமன்றத்திலிருந்த ஒன்பது நீதிபதிகளில் நான்கு பேர் நிக்சன் சிபாரிசில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்களே நிக்சனுக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர் என்பது கூடுதல் செய்தி. இந்தச் சம்பவம்தான் பின்னர் ஊடகங்களால் ‘வாட்டர்கேட் ஊழல்’ என்று அழைக்கப்பட்டது.

அதையொட்டி, உலகெங்கிலும் நடைபெற்ற ஊழல் சம்பவங்களுடன் ‘கேட்’ என்ற வார்த்தையைச் சேர்த்து அந்த ஊழல்களுக்குப் புதுப் பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவிலும் நிலக்கரி ஊழலை ‘கோல் கேட்’ என்றும், சவப்பெட்டி ஊழலை ‘காஃபின் கேட்’ என்றும், அவ்வரிசையில் சேர்ந்துள்ளதுதான் ஸ்னூப் கேட். அதை வேவு வாசல் என்றும் சொல்லலாம்.

ஜேட்லி மிரட்டல்

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அகமதாபாதுக்கு வந்து ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அவரை குஜராத் உளவுத் துறையினர் வேவுபார்த்து, மேலதிகாரிகளுக்குத் தொடர்ந்து தகவல் அளித்தனர். அந்தப் பெண்ணின் கைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டது. அந்தத் தகவல்கள் உடனடியாக மாநில உள்துறை அமைச்சரால் முதல்வருக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண் யார்? அரசு உயரதிகாரிகள் அவரை ஏன் வேவுபார்த்தனர்? அதில் முதல்வருக்கு இருந்த ஆர்வம் என்ன? என்ற பல கேள்விகள் பொதுவெளியில் எழுப்பப்பட்டபோது, அதற்கு முறையாக குஜராத் அரசிடமிருந்து பதில் இல்லை. அந்தச் சம்பவம்குறித்து விசாரணை கமிஷன் வைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது.

மத்திய அரசும் விசாரணை கமிஷன் வைக்க முடி வெடுத்தது. அதை எதிர்கொள்ளும் விதமாக குஜராத் மாநில அரசே அதிகாரிகள் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க-வால் அறிவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நடைபெற்றுச் சில மாதங்களாகிவிட்ட பின்னரும், மத்திய அரசால் விசாரணை கமிஷனை அமைக்க முடிய வில்லை. விசாரணை கமிஷன் தேர்தல் முடிவுக்கு முன்னரே நியமிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஷிண்டே ஒருபுறம் கூறிவரவும், கமிஷன் அமைக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்வியுடன் நிறுத்திக்கொள்ளாமல், எந்த நீதிபதியும் அந்த கமிஷனில் பங்குபெற விரும்ப மாட்டார்கள், அப்படியே கமிஷன் அமைத்தாலும் பா.ஜ.க அரசு விசாரணை கமிஷனைக் கலைத்துவிடுமென்று மறுபுறம் பா.ஜ.க. தலைவர் அருண் ஜேட்லி மிரட்டல் விடுத்தார். இதற்கிடையில், கூட்டணிக் கட்சிகளே தேர்தல் முடிவுகளுக்கு முன் கமிஷன் அமைப்பது அநாவசியம் என்று அறிக்கைகள் விட்டபின் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கிடப்பில் போடு அல்லது கமிஷன் போடு

பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டும் என்றால், “ஒன்று கிடப்பில் போடு அல்லது கமிஷன் போடு” என்று ராஜாஜி ஒருமுறை சொன்னார். அதுபோல நம் நாட்டில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால், உடனடியாக வழக்கு பதிவுசெய்யாமல் விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டுக் காலவிரயமாக்கப்படுவது தொடர்நிகழ்வு களாகிவிட்டன. விசாரணை கமிஷன் சட்டத்தின்படி கமிஷனின் அறிக்கைகள் (தீர்ப்புகளல்ல) வெறும் சிபாரிசுகளாக மட்டுமே இருக்கும். அவை, அரசைக் கட்டுப்படுத்தாது. கமிஷன் கொடுத்த அறிக்கையை நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ ஆறு மாதங்களில் தாக்கல் செய்யப்பட வேண்டுமென்று மட்டுமே சட்டம் கூறுகிறது.

விசாரணை கமிஷன் அறிக்கைகளைப் பற்றி எள்ளி நகையாடிய சஞ்சய் காந்தி, அந்த அறிக்கைகள் காவல் துறையினரால் பதியப்படும் ‘முதல் தகவல் அறிக்கை’ என்று குறிப்பிட்டார். கமிஷன் செயல்பாடுகள் அதை அமைத்த அரசுகளின் விருப்புவெறுப்புக்கேற்ப நடைபெற்றுவந்ததுதான் கடந்த கால வரலாறு.

கவலைக்குரிய இரு விஷயங்கள்

வேவு வாசல் சம்பவம் கவலைப்படக்கூடிய இரண்டு விஷயங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தங்களது ஓய்வுக்குப் பின் பதவிகளை அனுபவித்துவந்தாலும், ஏன் வேவு வாசல் விசாரணை கமிஷன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் என்பது முதல் கேள்வி. பதவியில் உள்ள நீதிபதிகள், தேசநலன்குறித்த பிரச்சினைகள் தவிர மற்ற பிரச்சினைகளை விசாரிக்க அமைக்கப்படும் விசாரணை கமிஷன்களில் பதவியேற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பென் வால்டர் என்ற வக்கீல் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்திருப்பதால், தற்போது பதவியில் இருக்கும் நீதிபதிகள் அந்த கமிஷனில் பொறுப்பேற்க முடியாது. தேர்தல் முடிவுகள் மோடிக்கு ஆதரவாக இருந்தால் கமிஷனின் நிலை என்னவாகும் என்ற நிச்சயமற்ற தன்மையும் காரணமாக இருந்திருக்கலாம்.

அமெரிக்க நீதிபதிகள் X இந்திய நீதிபதிகள்

இந்தப் பிரச்சினையின் உண்மைத் தன்மையை அறிய வேண்டிய பொறுப்பில் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் மட்டுமே தலைமை வகிக்கும்படியான விசாரணை கமிஷனுக்கு ஒரு நீதிபதிகூட முன்வரவில்லை என்பதை பா.ஜ.க-வினர் நீதித் துறையின் கௌரவத்தைக் காப்பாற்றிவிட்டனர் என்று கொண்டாடுவது உண்மையில் வஞ்சப் புகழ்ச்சியே. அடுத்து வரக் கூடிய அரசில் முக்கியப் பொறுப்பு வகிப்பார் என்று நம்பப்படும் ஒருவர் மீது விசாரணை நடத்த முன்வர ஓய்வுபெற்ற நீதிபதிகள்கூடத் தயாரில்லை என்பது நம்மை அச்சுறுத்துகிறது. ‘வாட்டர் கேட்’ ஊழலுக்குப் பிறகு, நிக்சனின் செல்வாக்கு சரிந்ததற்குக் காரணம், அமெரிக்க நீதிபதிகளின் உறுதியான நீதிபரிபாலனம் மட்டுமே. அவரால் பதவி பெற்றவர்கள்கூட அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர் என்பது அங்குள்ள நீதித் துறையின் சுதந்திரத்தைக் காட்டுகிறது.

வேவு வாசல் பிரச்சினையைச் சிலர் அற்ப விஷயமென்றும், அதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்றும் கூறிவருவது வருத்தத்தை அளிக்கிறது. பிரதமர் ஆவதற்குத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதர், இப்படித் தனிமனிதச் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில், தன் கீழுள்ள ஒற்றர் படையை ஒரு பெண்ணை வேவுபார்ப்பதற்கு முடுக்கி விட்டிருந்தால், நிச்சயமாக அவர் இந்நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வர லாயக்கற்றவர். அந்தச் சம்பவத்தை அற்பத்தனமானது என்று ஒதுக்கிவிட முடியாது.

அரசின் மிருக பலம்

எதிர்பாராத திருப்பமாக, சம்பந்தப்பட்ட பெண் இந்த விஷயத்தில் விசாரணை கமிஷன் நியமிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார். அண்ணாமலை நகரில் போலீஸ் தடியடிக்குப் பின்னர், மரணமுற்ற உதயகுமார் தன் மகனே அல்ல என்று அவரது தந்தை பெருமாள் சாமியையே விசாரணை கமிஷன் முன்னால் சாட்சி சொல்ல வைத்த மாநில அரசின் மிருகபலத்தை நாம் பார்த்திருக்கிறோம். அதற்குப் பின்னரும் விசாரணை கமிஷன் நீதிபதி என்.எஸ். ராமசாமி மாநில அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்ததையும் நாம் கண்டோம்.

எனவே, தேர்தல் முடிவுகளின் பிறகு எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் வேவு வாசல் பற்றி விசாரணை கமிஷன் அமைக்க முற்படாமல், கிரிமினல் வழக்கு பதிவுசெய்து அதை முறையாக விசாரித்துக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை வாங்கித்தருவார்களா?

- சந்துரு

(ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம், சமூக விமர்சகர்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x