Published : 29 Apr 2015 09:45 AM
Last Updated : 29 Apr 2015 09:45 AM

நம்மைச் சுற்றி... | திரைப்படமாகிறது தி புரோஃபெட்

* கலீல் ல்ஜிப்ரானின் அழியாப் புகழ்பெற்ற ‘தீர்க்கதரிசி’ (தி புரோஃபெட்) திரைப்படமாகிறது. தயாரிப்பாளர் யார் தெரியுமா? நடிகை சல்மா ஹெய்க். சல்மாவின் தாத்தா லெபனான்காரர் என்பது கொசுறு.

* அருணாசலப் பிரதேசத்திலும் ஒரு இரோம் ஷர்மிளாவை உருவாக்கிவிடுவார்கள்போல. ஏற்கெனவே இங்கு திராப், சங்லாங், லாங்டிங் மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (அஃப்ஸ்பா) அமல்படுத்திவந்த மத்திய அரசு, இப்போது மேலும் 9 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம் மாநிலத்தின் 18 மாவட்டங்களில் 12 இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

* மோடி பிரதமரானவுடன் டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமலாக்கப்பட்டது நினைவிருக்கலாம். பலரும் அப்போது மோடியின் நிர்வாகத் திறனோடு இதை ஒப்பிட்டு மெய்சிலிர்த்தார்கள். 2014 செப்டம்பரில் அமலுக்கு வந்த இந்த முறை 2015 பிப்ரவரியோடு காணாமல்போய்விட்டது!

* தங்களிடம் இருக்கும் எருதுகள், காளைகளை அரசே விலைக்கு வாங்கிக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள் மகாராஷ்டிர விவசாயிகள். பாஜக அரசின் மாட்டிறைச்சித் தடையின் தொடர் விளைவுகளில் ஒன்று இது.

* கர்நாடகத்தில் சாட்டையைச் சுழற்றியிருக்கிறது அம்மாநில உயர் நீதிமன்றம். 2014 நவம்பர் வரையிலான ஓர் ஆண்டில் மட்டும் அங்கு 412 குழந்தைகள் காணாமல்போயிருக்கிறார்கள். தமிழகத்திலும் சாட்டையைச் சுழற்ற வேண்டும். ஏனென்றால், இங்கு 549 குழந்தைகள் காணாமல்போயிருக்கிறார்கள்!

* புருண்டி அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. அதிபர் பியரெ மூன்றாவது முறையாகப் போட்டியிட முடிவெடுத்திருப்பதே காரணம். ஏற்கெனவே, பியரெவால் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்துவரும் மக்கள், மீண்டும் அவர் போட்டியிட்டால் முறைகேடுகள் மூலமாக ஆட்சிக்கு வந்துவிடுவார் என்று அஞ்சிப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x