Published : 22 Apr 2015 11:07 AM
Last Updated : 22 Apr 2015 11:07 AM

நம்மைச் சுற்றி... | மோடி இலக்கு 193 நாடுகள்

* மகாராஷ்டிரத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 601 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கின்றன ஊடகங்கள். பாஜக அரசு அசரவில்லை. “இறந்தவர்களில் 3 பேர்தான் விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இறந்தவர்கள்” என்று அடித்துவிட்டிருக்கிறார் வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங்.

* மோடியின் வெளிநாட்டுப் பயணம் முடிந்திருக்கும் என்று நினைப்பவர்கள், நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த 11 மாதங்களில் 16 நாடுகளுக்குச் சென்றுவந்திருக்கும் மோடி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் 193 நாடுகளுக்குச் செல்லப்போகிறாராம். வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது.

* மோடி எள் என்றால், எண்ணெயாக இருப்பதில் உத்தரப் பிரதேச பாஜக முன்னணியில் இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் வீடுவீடாகச் சென்று கேஸ் மானியத்தை விட்டுத்தருமாறு பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள் கட்சிக்காரர்கள். மாநிலத்தில் வேறு எங்கும் இது எடுபடவில்லை என்றாலும், மோடி தொகுதியான வாரணாசியில் 12,000 பேர் காஸ் மானியத்தை விட்டுத் தந்திருக்கிறார்கள்.

* தீபிகா படுகோன் விடியோவைப் போலவே திருநங்கைகளும் மை சாய்ஸ் விடியோவை 15-ம் தேதி வெளியிட்டார்கள். ஆணாக இருப்பதோ பெண்ணாக இருப்பதோ தங்கள் உரிமை என்று திருநங்கைகள் சொல்லும் விடியோவை இதுவரைக்கும் 19 ஆயிரத்துச் சொச்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். தீபிகா விடியோ 90 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

* ஹரியாணா பாஜக அரசு, அமைச்சர் பதவிக்கு இணையான அந்தஸ்தை ராம்தேவுக்கு வழங்கியதைப் பெருந்தன்மையோடு ஏற்க மறுத்துவிட்டார் யோகா குரு ராம்தேவ். “இந்த முடிவால் தனது அந்தஸ்தை மேலும் உயர்த்திக் கொண்டிருக்கிறார் ராம்தேவ்” என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் முதல்வர் கத்தார். இதே ராம்தேவின் ‘பதஞ்சலி யோக்பீத்’ அமைப்புதான் இந்தியாவிலேயே அதிகமாக ரூ.207 கோடிக்குச் செம்மரங்களை வாங்கியிருக்கிறது. இந்தச் செய்தி அவரது அந்தஸ்துக்கு என்ன சேர்க்கும் என்று புரியவில்லை.

* செர்பியாவுக்கும் குரோஷியாவுக்கும் இடையில் உள்ள 7 சதுர கி.மீ. பரப்பளவை ‘லிபர்லேண்டு’ நாடாக அறிவித்திருக்கிறார் வித் ஜெத்லிக்கா. தன்னைத்தானே அந்நாட்டின் அதிபராக அறிவித்துக்கொண்டிருப்பவர் இவர். நாட்டில் ராணுவம் கிடையாது, குடிமக்கள் விரும்பினால் வரி செலுத்தலாம் என்று ஏகப்பட்ட அதிரடிகளை அறிவித்திருப்பவர், குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு ஏராளமான நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார். குறிப்பிட வேண்டிய ஒரு விதி நாஸிஸ்ட், பாஸிஸ்ட், கம்யூனிஸ்ட்டுகள் விண்ணப்பிக்க முடியாது.

* சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராகப் பெரும் கூட்டணி உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவிடமிருந்து விலகியிருப்பதற்கான சமிக்ஞைகளை வெளியிட்டிருக்கும் சூழலில், காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் செய்தியாளர்கள் சந்திப்புகளில் தொடர்ந்து திமுக தொடர்பான கேள்விகளைத் தவிர்க்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x