Published : 05 Apr 2014 12:00 AM
Last Updated : 05 Apr 2014 12:00 AM

நள்ளிரவுப் பிரச்சாரம் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்: கட்சிகள் எச்சரிக்கை

நள்ளிரவு வரை வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கலாம் என்கிற முறையை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையம் விதிமுறைகளை கடுமையாக்கி, கட்சிகளும் வேட்பாளர்களும் செய்கிற செலவுகளை குறைக்க வழிவகுத்துள்ளது என்பது மகிழ்ச்சியே. ஆனால், அதேநேரத்தில் எல்லா செலவுகளையும் வேட்பாளர் கணக்கில் சேர்ப்பது சரியான முறையல்ல. குறிப்பிட்ட வேட்பாளர்களுக்காக தலைவர்கள் பிரசாரம் செய்கிறபோது வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதுகூட வேட்பாளரின் செலவு கணக்கில் வரும் என்கிற விதி நீக்கப்பட வேண்டிய விதியாகும்.

இந்தியாவிலேயே பணம் அதிகம் புழங்கும் மாநிலம் கர்நாடகமும் தமிழகமும் தான். நள்ளிரவு வரை வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கலாம் என்கிற முறை தவறுகள் அதிகரிக்க வழிவகுக்கும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். இரவுநேர குற்றங்களுக்கும் இது வழிவகுக்கும். ஆகவே, இதையும் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு ஞானதேசிகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மமகவின் மாணவர் அமைப்பான ‘மாணவர் இந்தியா’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிரச்சாரப் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மமக கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிஃபாயி இதை வெளியிட அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரக்ஷீத் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் ரிஃபாயி கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்திட தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதே நேரத்தில் இரவு 10 மணிக்குப் பிறகு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இது வாக்குகளை விலை பேசுவது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பாக அமையக்கூடும். ஆகவே இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x