Published : 26 Feb 2015 10:01 AM
Last Updated : 26 Feb 2015 10:01 AM
நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாயும் மகனும் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று ஒருவர் தனது தாயுடன் புகார் கொடுப்பதற்காக வந்தார். திடீரென தாயும் மகனும் நுழைவு வாயிலில் தரையில்படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த மகேஷ்வரி, அவரது மகன் பொறியியல் மாணவர் சிவக்குமார் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக மகேஷ்வரி கூறுகையில், ‘‘எனக்கு மதுரையில் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இதனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் அபகரித்து உள்ளார். என்னையும் மதுரைக்கு செல்ல விடாமல் சென்னை திருமங்கலத்திலேயே சிறை வைத்து இருந்தார். அவரது பிடியில் இருந்து தப்பி வந்துள்ளேன்.
இது தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸார் உறுதியளித்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மகனுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT