Published : 20 Feb 2015 11:51 AM
Last Updated : 20 Feb 2015 11:51 AM
போர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்?
உலகின் பல இடங்களில் நடக்கும் உள்நாட்டுப் போர்களில், சிறுவர்கள், குழந்தைகளின் கைகளில் துப்பாக்கிகளைத் திணித்து, போர்க்களத்தில் பலியாகச் செய்யும் கிளர்ச்சிப் படையினரைப் பற்றி அறிந்திருக்கிறோம். சூடான் சற்று வித்தியாசமானது. அங்கு கிளர்ச்சிப் படைகள் மட்டுமல்லாது, அரசுப் படைகளிலும் 13 வயதுச் சிறுவர்களும் வலுக் கட்டாயமாகச் சேர்க்கப்படுகிறார்கள் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் (எச்.ஆர்.வி.) எனும் தொண்டு நிறுவனம் இதுதொடர்பான அறிக்கையை சூடான் அரசிடம் சமீபத்தில் தாக்கல் செய்திருக்கிறது. அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் மைக்கேல் மெக்குயி அந்த அறிக்கையை நிராகரித்துவிட்டதுதான் இன்னும் கொடுமை!
மனிதத்தைப் பிரிக்கும் சுவர்
இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையிலான நிரந்தரப் பிரச்சினைகளில், மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் எழுப்பிய சுவரும் ஒன்று. அந்தச் சுவர் எழுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்குக் கரைப் பகுதியின் பில்லின் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி அன்று நடத்தப்படும் போராட்டத்தின் 10-வது ஆண்டு இது. பாலஸ்தீனர்கள் மட்டுமல்லாது, இஸ்ரேல் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். பாலஸ்தீனர்கள் நடத்தும் தற்கொலைப் படைத் தாக்குதல்களைத் தடுப்பதற்காக இந்தச் சுவர் எழுப்பப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது. ஆனால், இந்தச் சுவர் சட்ட விரோதமானது என்கின்றன சர்வதேசச் சட்டங்கள். அதுசரி, இஸ்ரேல் எந்தச் சட்டத்தைத்தான் மதித்திருக்கிறது?
தப்பிச் செல்ல என்ன வழி?
நைஜீரியா, அல்ஜீரியா, சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, மொராக்கோ நாட்டுக்குச் சட்ட விரோதமாகச் செல்பவர்கள் அதிகம். மொராக்கோவி லிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து எப்படியா வது பிழைத்துக்கொள்ளலாம் என்று அந்நாட்டுக்குப் படையெடுக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டு அரசுக் குடியேற்றச் சட்டத்தில் கடந்த ஆண்டு மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர் களில் தகுதியானவர்கள் என்று கருதப்படுபவர்கள், மொராக்கோவில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். விண் ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களின் கதிதான் பரிதாப மானது. மொராக்கோவின் எல்லையில் வனப் பகுதிகளில் தங்கியிருக்கும் அவர்கள் மொராக்கோ காவல் துறையினரின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். கூடாரங்களுக்குத் தீவைக்கப்படுகிறது. எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள், ஆப்பிரிக்க அகதிகள்.
போதை மருந்தும் சுற்றுலாவும்
இந்தோனேஷியாவின் பாலி தீவு சுற்றுலாவாசிகளுக்குப் பிரியமான பிரதேசம். ஆனால், அந்தத் தீவுக்குச் செல்ல வேண்டாம் என்று ஆஸ்திரேலியர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். 2005-ல் பாலியிலிருந்து போதை மருந்து கடத்த முயன்ற ஆஸ்திரேலியர்களில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சூழ்நிலை இந்தோனேஷி யாவில் ஏற்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம். 9 பேர் கொண்ட கடத்தல் கும்பலில், மற்ற 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்டுத் தண்டனையை நிறைவேற்றக் காத்திருக்கிறது 12 பேர் கொண்ட படை. தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலிய அதிபர் டோனி அபோட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT