Published : 02 Feb 2015 10:28 AM
Last Updated : 02 Feb 2015 10:28 AM

டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூரில் மேலும் ஒரு சிறுமி பலி? - பெற்றோர் குற்றச்சாட்டு; அதிகாரி மறுப்பு

டெங்கு காய்ச்சலுக்கு, திருப்பூரில் மேலும் ஒரு சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதை நகர்நல அதிகாரி மறுத்துள்ளார்.

திருப்பூர், வெள்ளியங்காடு ஈஸ்வரமூர்த்தி நகர், 5-வது வீதியைச் சேர்ந்த பனியன் நிறுவனத் தொழிலாளி செந்தில் (38); இவரது மனைவி சுகன்யா (31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் தனலட்சுமி (5), தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தனலட்சுமிக்கு காய்ச்சல் வந்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர், வீடு திரும்பிய சில மணி நேரங்களில், மீண்டும் அவளுக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு கடந்த 2 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை தனலட்சுமி உயிரிழந்தாள்.

இது குறித்து தனலட்சுமியின் பெற்றோர் கூறுகையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், டெங்கு என்று கூறிதான் சிகிச்சை அளித்தார்கள். எங்களை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால், மகள் இறந்தபிறகு, டெங்கு என்பதை மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, காய்ச்சலால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மகள் இறந்துவிட்டதாக கூறுகிறார்கள் என்றனர்.

இதுவரை 4 பேர்

திருப்பூரில் கடந்த டிசம்பரில் டெங்கு பீதி தொடங்கிய நிலையில், இதுவரை 4 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பால் இறந்துள்ளனர். டெங்கு வால் குழந்தைகள் இறந்ததாக, பெற்றோர் அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், டெங்குவால் இறக்கவில்லை என மருத்துவப் பரிசோதனை ஆவணங்களை முன்வைக்கின்றனர் அதிகாரிகள்.

நகர்நல அதிகாரி மறுப்பு

திருப்பூர் மாநகராட்சி நகர்நல அதிகாரி செல்வகுமார் கூறுகையில், ரத்தத்தில் கிருமிகள் இருந்ததால் தனலட்சுமி இறந்துள்ளார். ரத்தத்தில் கிருமிகள் கலக்க பல்வேறு காரணங்கள் உண்டு. குழந்தைக்கு டெங்கு பரிசோதனை செய்துள்ளனர். அதில், டெங்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. குழந்தைகள் இறப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், திருப்பூரில் டெங்கு பீதி நிலவுவதால், டெங்கு என அனைவரும் கலக்க மடைகின்றனர் என்றார்.

விருதுநகர் அருகே சிறுமி பலி

விருதுநகர் அருகேயுள்ள ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் மஞ்சுளா (15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. அதற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, மஞ்சுளாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து தீவிர சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு மதுரை அரசு மருத்துவமனைக்கு மஞ்சுளா அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை அவர் இறந்தார். இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x