Published : 26 Jan 2015 10:54 AM
Last Updated : 26 Jan 2015 10:54 AM
ஆசியாவில் உள்ள பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தகங்களின் இருப்பிடத்தை கண்டறியும் தொழில்நுட்ப வசதி கடந்த 3 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. இதனால், நூலகத்துக்கு வரும் வாசகர்கள் குறிப்பிட்ட புத்தகத்தை விரைவாக எடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் விதமாக கடந்த 2010-ம் ஆண்டில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்ற பெயரில் பிரம்மாண்டமான நூலகம் அமைக்கப்பட்டது.
ஏறத்தாழ ரூ.170 கோடி செலவில் 8 மாடி கட்டிடத்துடன் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த நூலகம், ஆசியாவில் உள்ள பெரிய நூலகங்களில் முதன்மையான நூலகம் என்ற பெருமை பெற்றது. உலக இணைய மின் நூலகம், யுனெஸ்கோ மின் நூலகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள சிறப்பும் அண்ணா நூலகத்துக்கு உண்டு. இங்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. 24 தினசரி நாளிதழ்களும், 8 மாலை நாளிதழ்களும் தினமும் வாங்கப்படுகின்றன.
நூலக கட்டிடத்தின் தரை தளத்தில் போட்டித் தேர்வு பிரிவு, முதல் மாடியில் பருவ இதழ்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, 2-ம் மாடியில் தமிழ் நூல்கள், 3-ம் மாடியில் கணினி அறிவியல், தத்துவம், உளவியல், சமூகவியல், அறநூல்கள், அரசியல் நூல்கள், 4-ம் மாடியில் பொருளாதாரம், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், இலக்கியம் தொடர்பான நூல்கள், 5-ம் மாடியில் பொது அறிவு, கணிதம், வானவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியமைப்பியல், மருத்துவம் தொடர்பான நூல்கள், 6-ம் மாடியில் பொறியியல் வேளாண்மை, உணவியல், திரைப்படம், விளையாட்டு, மேலாண்மை நூல்கள், 7-வது மாடியில் வரலாறு, புவியியல், சுற்றுலா மற்றும் மேலாண்மை, வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் என ஒவ்வொரு மாடியிலும் குறிப்பிட்ட பிரிவு புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலகத்துக்கு தினமும் சராசரியாக 2 ஆயிரம் பேர் வரை வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ள இந்த பிரம்மாண்ட நூலகத்தில் எந்த புத்தகம் எந்த மாடியில் எந்த அலகில், எந்த அலமாரியில் உள்ளது? என்பதை நொடியில் கண்டறிவதற்காக ‘ஒபக்' (Online Public Access Catalogue-OPAC) எனப்படும் சிறப்பு சாப்ட்வேர் தொழில்நுட்ப வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம், வாசகர்கள் தாங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தின் பெயரையோ அல்லது அதை எழுதிய நூலாசிரியரின் பெயரையோ கணினியில் குறிப்பிட்டால் போதும்.
அந்த புத்தகம் எந்த இடத்தில் உள்ளது என்பதை நொடியில் தெரிந்துகொள்ளலாம். இதனால், வாசகர்கள் தாங்கள் படிக்க விரும்பும் குறிப்பிட்ட புத்தகத்தை உடனே கண்டுபிடித்து படித்துப் பயன்பெற்று வந்தனர்.
இந்த நிலையில், அண்ணா நூலகத்தில் கடந்த 3 மாத காலமாக ‘ஒபக்' தொழில்நுட்ப வசதி முடங்கிக் கிடக்கிறது. இதனால், நூலகத்துக்கு வரும் வாசகர்கள் தாங்கள் விரும்பும் புத்தகத்தை ஒவ்வொரு மாடியாக சென்று, ஏராளமான புத்தக அலமாரிகளில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. புத்தகத்தை தேடிக் கண்டுபிடிப்பதற்கே அதிகம் நேரம் ஆகிவிடுவதால் படிக்கும் நேரம் குறைவாகவே கிடைக்கிறது.
‘ஒபக்' தொழில்நுட்ப வசதிக்கான கணினி சர்வருக்கு மின்சாரத்தை தடையின்றி கொடுக்கும் யுபிஎஸ் வசதி பாதிக்கப்பட்டிருப்பதால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக நூலக ஊழியர்கள் தெரிவித்தனர். பழுதுபார்ப்புக்காக அடிக்கடி ரூ.2 லட்சம் செலவு செய்தும் இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காண முடியவில்லை. முழுமையாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அதற்கு சற்று செலவாகும். அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தால் உடனடியாக இந்த தொழில்நுட்ப பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்கிறார்கள் அண்ணா நூலக ஊழியர்கள்.
ஆசியாவிலேயே பெரிய நூலகமாக திகழும் இந்த நூலகம் பொதுமக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் உடனடியாக இந்த தொழில்நுட்ப குறைபாடுகளைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT