Last Updated : 25 Jan, 2015 11:31 AM

 

Published : 25 Jan 2015 11:31 AM
Last Updated : 25 Jan 2015 11:31 AM

உலக வரலாற்றில் ஒரு மொழிப் போர்

சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி...

இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள்.

இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965-ம் ஆண்டு தமிழகமே பற்றி எரிந்தது எனலாம். மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்தப் போராட்டத்தில் பல நூறு பேர் உயிர் நீத்தனர். போராட்டத்தை அடக்க ராணுவம் வந்தது.

மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன என்பதும் உலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதது. அதனால்தான், 1965-ம் ஆண்டு போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் குலுக்கி எடுத்தது.

இந்தப் போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 21-4-1938 அன்று ராஜாஜி தலைமை யிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சென்னையில் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற நடராசனின் உடல் நலம் குன்றியது. மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தால் விடுதலை செய்வதாக அரசு கூறியது. மன்னிப்புக் கேட்க மறுத்த நடராசன், 15-1-1939 அன்று உயிரிழந்தார்.

தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, தமிழ் மொழியுணர்வால் உந்தப்பட்டு போராட்டக் களத்துக்குச் சென்ற நடராசன்தான் மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி. அவரைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் 12-ம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

இந்த இரண்டு உயிர் பலிகளால் போராட்டம் மேலும் தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 21-2-1940 அன்று அரசு திரும்பப் பெற்றது. அடுத்து, 1948-ல் ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால், அரசு பின்வாங்கியது. மேலும், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற நேருவின் உறுதிமொழியால் போராட்டம் சற்று ஓய்ந்தது.

இந்நிலையில், 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963-ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. இதனால், அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவின் போராட்டம் தீவிரமானது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த திமுக தொண்டர் சின்னசாமி, இந்தி மட்டும் ஆட்சி மொழியாக அரியணையில் அமர்வதைத் தடுத்தாக வேண்டும் என்று, திருச்சி ரயில் நிலையம் எதிரே 25-1-1964 அன்று தீக்குளித்து மாண்டார்.

சின்னசாமியின் மரணம் அரசியல் எல்லையைக் கடந்து எல்லா தரப்பினரை யும் எழுச்சியூட்டியது. 25-1-1965 நெருங்க நெருங்க போராட்ட எழுச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது. 1965, ஜன. 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்கள் கிளர்ச்சியில் இறங்கின.

சென்னை மாநகராட்சி ஊழியராக பணி யாற்றி வந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், அன்றைய தினம் தீக்குளித்து மாண்டார். மறுநாள், விருகம்பாக்கம் அரங்கநாதன் தீ்க்குளித்து இறந்தார். அதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் முத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

27-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஊர்வலமாகச் சென்ற சிவ கங்கை மாணவர் ராசேந்திரன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அதன் பிறகு, போராட்டம் மேலும் மேலும் வேகமெடுத்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும் அதிகரிக்க, உயிர்ப் பலிகளும் அதிகரித் துக் கொண்டே சென்றன. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்தது. பொள்ளாச்சியில் பிப்ரவரி 12-ம் தேதி ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

நிலைமை மிகவும் மோசமானது. மாண வர்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அண்ணா அறைகூவல் விடுத்தார். ஆனால், போராட்டத்தை கைவிட தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு மறுத்து விட்டது. எல். கணேசன், விருதுநகர் பெ. சீனிவாசன், துரைமுருகன் என திமுகவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் அந்தக் குழுவில் தளகர்த்தகர்களாக இருந்தபோதும், மாணவர்களின் போராட்டத்தை நிறுத்த அண்ணாவால் முடியவில்லை.

இதனிடையே, இந்தித் திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் போக்கைக் கண்டித்து அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த ராஜினாமாக்களை ஏற்கும்படி குடி யரசுத் தலைவருக்கு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பரிந்துரை செய்தார்.

'தமிழகம் தனி நாடாக பிரிந்து போக வேண்டாம் என்று கருதினால், பரிந் துரையை திரும்பப் பெறுங்கள்' என்று சாஸ்திரியிடம் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கில மும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்தனர். இத னால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் மார்ச் 15 அன்று முடிவுக்கு வந்தது.

அந்தப் போராட்டத்தின் தாக்கம் அத்துடன் முடியவில்லை. 1967-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சியைப் பிடித்தது. தேசியத் தலைவராகப் போற்றப்பட்ட காமராஜரை, மாணவர் தலைவரான பெ. சீனிவாசன் தோற்கடித்தார். அன்று ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி, அதன்பிறகு இன்றளவும் தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலுக்கு வெகுதூரத்தில்தான் நிற்கிறது. இந்தி மொழியின் ஆதிக்கத்தைத் தடுக்க முடிந்தது. எனினும், தமிழ் மொழியின் இன்றைய நிலைமை என்ன? தமிழே படிக்காமல் 1-ம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட முடியும் என்ற நிலைமை அல்லவா ஏற்பட்டு விட்டது.

மாநிலத்தில் ஆட்சி மொழியாக, அரசு அலுவலகங்களில் நிர்வாக மொழியாக, கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக, இங்குள்ள நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக என எந்த அங்கீகாரமும் இன்றி தமிழ் தள்ளாடி நிற்கிறது. 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் வெறும் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது மட்டும் போதுமா என்ற கேள்வி தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஏக்க பெருமூச்சாக நிற்கிறது. இந்த சூழலில்தான் மொழிப் போரின் 50-ம் ஆண்டை தமிழ்நாடு கொண்டாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x