Published : 14 Jan 2015 12:18 PM
Last Updated : 14 Jan 2015 12:18 PM

மீன்களை கொண்டு செல்ல சூரிய சக்தி குளிரூட்டி வாகனம்: முதல்முறையாக குளச்சலில் அறிமுகம்

மீன்களை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல வசதியாக சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிரூட்டி பொருத்தப்பட்ட வாகனம், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

குளச்சல் மீனவர் சங்கத்துக்கு இந்த வாகனத்தை தேசிய மீன் வளர்ச்சிக் கழகம் வழங்கியுள்ளது. வாகனங்களில் நெடுந்தொலை வுக்கு மீன்களை எடுத்துச் செல்லும்போது அவை கெட்டுப் போவது வாடிக்கை. இதை தடுக்கும் வகையில் ஐஸ் பெட்டிகளில் மீன்களை எடுத்துச் செல்வர். குளச்சல் மீனவர் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள நவீன வாகனத்தில், சூரிய சக்தி மூலம் குளிரூட்டும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

மீன்கள் பிடிக்கப்படும் இடத்தில் இருந்து, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு குளிரூட்டப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் தேவைப்படும் நிலையில் இந்த வாகனம் மீனவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வாகனம் குறித்து மீனவர்களுக்கு பயிற்சி அளித்த வங்காள விரிகுடா திட்ட இயக்குநர் ஒய்.எஸ்.யாதவா கூறியதாவது: `எரிவாயு விலை உயர்வு, தரமான பனிக்கட்டி கிடைப்பதில் உள்ள சிக்கல் ஆகியவை மீன்களை கொண்டு செல்வதில் உள்ள முக்கிய பிரச்சினைகள். இந்த வாகனத்தின் மூலம் மீன்களை கொண்டு செல்வதற்கான செலவு கணிசமாகக் குறையும். இந்த வாகனத்தின் மதிப்பு ரூ. 9.75 லட்சம். சோதனை அடிப்படையில் இதை முழுவதும் மானியமாக வழங்கியுள்ளோம்.

இந்த வாகனத்தில் 6 இடங்களில் சூரிய ஒளித்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை சூரிய ஒளியை கிரகித்து இந்த வாகனத்துக்கு குளிர்ச்சியூட்டும். இதன் மூலம் 20 முதல் 25 சதவீதம் வரை டீஸலை மிச்சப்படுத்த முடியும்.

மைனஸ் 10 முதல் மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வரை குளிரூட்ட முடியும்.

கடந்த 2012-ம் ஆண்டு சோதனை அடிப்படையில் 3 படகுகளில் சூரியஒளி மூலம் இயங்கும் வசதியை அமைத்தோம். இப்போது அவை முட்டத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. மேலும் 12 படகுகளில் சூரிய ஒளித்தகடுகள் பொருத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x