Last Updated : 26 Dec, 2014 08:25 AM

 

Published : 26 Dec 2014 08:25 AM
Last Updated : 26 Dec 2014 08:25 AM

இடதுசாரி இயக்கங்கள் ஒண்ணா சேரணும்! - நல்லகண்ணு சிறப்பு பேட்டி

சென்னை சி.ஐ.டி. நகரிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், ரூ. 4,500 வாடகை வீட்டில் இன்முகத்தோடு வரவேற்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இன்றைக்கு 90-வது பிறந்த நாள். இந்த வயதிலும் ஆள் அசரவில்லை. ஒரு ஆர்ப்பாட்டத்துக்குப் போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவர் நள்ளிரவு வரை நீண்ட நேர்காணலுக்கு நிதானமாகப் பதில் அளித்தார்.

இந்த 90 வருஷ வாழ்க்கையின் ஊடே பார்க்கும் போது, ஸ்ரீவைகுண்டம், ராமசாமி, கருப்பாயி இந்தப் பெயர்களெல்லாம் இன்றைக்கு உங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு என்ன?

இந்தப் பேரெல்லாம் இல்லைன்னா, இன் னைக்கு நான் இங்கெ உட்கார்ந்துருப்பேனானு தெரியல. ஒரு மனுசன் உருவாக்கத்துல தாய் - தகப்பன், குடும்பம், ஊரு எல்லாத்துக்கும் பங்கிருக்கு. ஸ்ரீவைகுண்டம் இயல்பாவே அரசியல் உணர்வுள்ள ஊர். தூத்துக்குடிக்குப் பக்கம்கிறதால, வ.உ.சி. மூட்டின சுதந்திரத் தீ எங்க பக்கம்லாம் கொளுந்துவிட்டு எரிஞ்சுச்சு. சின்ன வயசுப் புள்ளைங்ககூட, ‘பாரத் மாதா கீ ஜே’, ‘வந்தே மாதரம்’னு கோஷம் போட்டுக் கிட்டு, பாரதியோட ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ பாட்டைப் பாடிக்கிட்டு தெருவுல ஊர்வலம் போவோம். வ.உ.சி-யைப் பத்திப் பேச்சு வரும்போது, அவருக்குள்ள இருந்த சுதந்திர வேட்கையோட கூடவே இன்னும் பல சமாச்சாரங்களும் உள்ள வந்துரும். வெள்ளைக் காரனோட ஏகாதிபத்தியத்தை எதிர்க்கணும்னா, அது பாயுற சகல பாதைகள்லேயும் நாமளும் எதிர் போராட்டத்தைப் பாய வுடணும்கிற எண்ணத்தை விதைச்சவர்ல அவரு! வெள்ளைக்காரன் கப்பலுக்குப் போட்டியா ஒரு கப்பல், அவனோட வியாபாரத்துக்குப் போட்டியா ஒரு வியாபாரம், வர்க்கப் போராட்டத்துக்கு அடிப்படையா தொழிற்சங்கம்... எல்லாத்துக்கும் மேல அந்த தியாகம்.

என்னோட தாய் - தகப்பனுக்கு, புள்ள சின்ன வயசிலயே இப்பிடி ஊர்வலம், போராட்டம்னு போறானேங்கிற கவலை இருந்துச்சு. ஆனா, அவங்க இதையெல்லாம் பெரிசாத் தடுக் கலைன்னுதான் சொல்லணும்.

பள்ளிக்கூட நாட்களில் போராட்டங்களுக்காக வாங்கிய முதல் அடி ஞாபகம் இருக்கிறதா?

ஊர்வலம், போராட்டம்னுட்டு வீட்டுல அப்பா, பள்ளிக்கூடத்துல வாத்தியார்கிட்ட அடி வாங்குறது அப்பப்போ நடக்குறது. பெரிசா அடி வாங்கினதுன்னா, போலீஸ்கிட்ட வாங்கினது. உலகப் போருல பிரிட்டிஷ் சர்க்காருக்கு ஆதரவு திரட்டுறதுக்காக எங்க பள்ளிக்கூடத்துல நாடகம் போட்டாங்க. காந்தி இந்தப் போர்ல நாம பிரிட்டிஷ் சர்காருக்கு ஒத்துழைக்கக் கூடாதுன்னு சொல்லியிருந்த சமயம் அது. நாடகத்தை நிறுத்துன்னு கத்திக்கிட்டு போன எங்களை போலீஸ் நல்லா அடிச்சுச்சு. வாத்தியாருங்களும் சேர்ந்துகிட்டு பாய்ஞ்சாங்க. அப்போகூட பயந்துடலை. மறுநாளே பள்ளிக்கூடத்துல வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினோம்.

காந்தி மீது நிறையப் பற்று இருந்ததோ?

காந்தி மேல பெரிய பற்று இருந்துச்சு. அதை விட அதிகமா நேருவைப் பிடிச்சது.

காந்தி, நேரு, தேசிய இயக்கம் என்று போய்க்கொண்டிருந்தவர் எப்படிப் பொதுவுடைமை இயக்கத்தின் பக்கம் திரும்பினீர்கள்?

அதுலேயும் நேருவுக்குப் பங்கு உண்டு. அவரு சோவியத் ஒன்றியம், பொதுவுடைமைக் கொள்கைகளைப் பத்தி பேசினது, எழுதினது அந்தப் பக்கம் மேல ஒரு ஈர்ப்பை உருவாக் குனுச்சு. அப்புறம், நாளாக நாளாக காங்கிரஸோட ஒட்ட முடியலை. நாடு சுதந்திரத்தை நோக்கி நகரும்போது எல்லாரும் அங்கெ போய் ஒட்டிக் கிட்டான். அதாவது, பசிக்குச் சோறு கிடைக்க வுடாம, எவனெல்லாம் தானியத்தைப் பதுக்கி வெக்கிறானோ, சமுதாயத்துல யாரெல்லாம் மக்களைக் கீழப் போட்டு நசுக்குறானோ, அவனெல்லாமும் அங்கெ போய் ஒட்டிக்கிறான். அப்புறம் எப்படி சமூக மாற்றத்தைக் கொண்டார முடியும்? இப்பிடி ஒரு கேள்வி. இந்தச் சமயத்துலதான் எங்க வாத்தியார் ஒருத்தர், பலவேசம் செட்டியார்னு பேரு, பொதுவுடைமை இயக்கத்தோட பெருமைகளைத் தொடர்ந்து பேசுனார். எல்லாமுமா சேர்ந்து கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்.

நீங்கள் ஒரு இளைஞராகத் தலையெடுத்த காலகட்டம், சரியாக இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்ட காலகட்டம். எப்படி எதிர்கொண்டீர்கள்?

பெரும்பாலும் தலைமறைவாத்தான் இருக்க வேண்டியிருக்கும். அடையாளத்தை மறைச்சுக் கிட்டு, மக்கள் மத்தியில வேலை செய்யணும். பிடிபடாம இருக்க எடம் விட்டு எடம் மாறிக்கிட்டே இருக்கணும். காடு, மேடு, மலைன்னு ஓடிக்கிட்டே இருப்போம். அப்பிடியும் சிக்கிக்கிட்டேன்.

உங்களுடைய மீசை பொசுக்கப்பட்டது அப்போது தானே?

ஆமா... (சிரிக்கிறார்) எனக்கு மீசை மேல ஒண்ணும் பெரிய பிரியமெல்லாம் இருந்த தில்லை. கன்னத்துல இருக்குற மருவ மறைக்கிற துக்காகக் கொஞ்சம் பெரிசா வெச்சிருப்பேன். என்னைப் புடிச்ச போலீஸ் அதிகாரி கண்ணை அது உறுத்திடுச்சு. அடிச்சு உதைச்சு சலிச்ச மனுஷன், கடைசியா என் மீசையையும் சிகரெட் தீயால கொளுத்தி, பொசுக்கிட்டார். அன்னையோட மீசையை விட்டாச்சு.

உங்கள் மீது சதி வழக்கு போடப்பட்டபோது, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்த் தீர்களா?

அரசாங்கம் கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தடை விதிச்சது எதுக்காக? எதிர்க்குரல் இருக்கக் கூடாது, ஒழிக்கணும்கிறதுக்காக. ஒழிக்கணும்னு முடிவெடுத்துட்டா, ஆயுள் தண்டனை என்ன, மரண தண்டனையே கொடுத்தாலும் கொடுத்ததுதான். சமூகப் போராட்டத்துக்காகத் துணியிறவன் இதுக்கெல்லாம் அசந்தா முடியுமா? என் கண் முன்னால அப்படி மரணத்தைத் தழுவின எத்தனையோ தோழர்களைப் பார்த்திருக்கேன். தூக்குத் தண்டனைக்கு மொத நாள்கூடக் கலங்காம உறுதியா இருந்தவர் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்துல முன்ன நின்ன தோழர் பாலு. அதனால, எதுக்கும் துணிஞ்சுதான் இருந்தோம்.

திருமணத்துக்கு முன் மனைவியிடம் பேசினீர்களா, சிறையில் இருந்த ஒரு ஆளைத் திருமணம் செய்துகொள்வதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லையா?

என் வாழ்க்கை முழுக்க இயக்கத்தோடயும் போராட்டங்களோடயும் போயிடும்னு தெளிவா சொல்லிட்டேன். அவங்களோட தகப்பனாரும் பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர். என்னைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுகிட்டுதான் அவங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்க. இன் னைக்கு வரைக்கும் என்னோட பொது வாழ்க்கைக் குத் துணையா இருக்காங்களே தவிர, தொந்தரவா இருந்ததில்ல. இது என்னோட புள்ளைங்க, பேரப் புள்ளைங்களுக்கும் பொருந்தும்.

நீங்கள் சிறையிலிருந்து திரும்பிய பின்னர்தான் கட்சி இரண்டாக உடைந்தது...

ம்... நெஞ்சையே பிளந்துச்சு அந்தப் பிளவு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் சேர வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

மனசார நெனைக்கிறேன். நெறைய பேர் அப்படி நெனைக்கிறாங்க.

ஆனால், இடதுசாரி இயக்கங்கள் வரலாற்றிலேயே மோசமான பின்னடைவைக் கண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட இரு கட்சிகளும் சேர்வதற்கான அறிகுறிகளைப் பார்க்க முடியவில்லையே?

காலம் கனியணும்னு நெனைக்கிறேன். ஆனா, அது நிச்சயம் நடக்கும். இடதுசாரி இயக்கங்கள் ஒண்ணா சேரணும். அது இந்தியாவோட தேவை.

முதல் பொதுத் தேர்தலுக்குப் பின் நாட்டின் இரண் டாவது பிரதானக் கட்சியாக இருந்த இடதுசாரி இயக்கத்தால், ஏன் காங்கிரஸுக்கு மாற்றாக உருவாக முடியவில்லை? ஏன் நீங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வலுப்பெற முடியவில்லை?

ஏனைய கட்சிங்க மாதிரி வெறும் தேர்தலுக்கான வேலைய இடதுசாரி இயக்கங்கள் செய்யலை. சமூகத்தோட அடித்தளத்துலேயே மாற்றத்தைக் கொண்டுவரணும்னு வேலை செய்யிறோம். முதலாளித்துவத்தை அழிக்கணும்னு நெனைக்கி றோம். சாதியை ஒழிக்கணும்னு போராடுறோம். இந்த மண்ணுல இதெல்லாம் உடனே நடக்குற கதையா? சந்திரனுக்கு விண்கலம் அனுப்புற இந்தக் காலத்துலேயும் ஒரு பொண்ணு தனக்கு விருப்பமான பையனை இங்கே சாதி, மதம் பார்க்காம கட்டிக்க முடியலையே? கொன்னுப் போடுறானே? அப்பம், எப்பிடி இடதுசாரி இயக் கத்தை வளர விடுவான்? இந்திய முதலாளி வர்க்கமும் சாதிய அமைப்பும் இடதுசாரி இயக்கத் தோட தொடர்ந்து ஒரு போர் நடத்திக்கிட்டு இருக்கு. அதையும் தாண்டித்தான் நாங்க கால் ஊன வேண்டியிருக்கு.

இந்தியாவுக்கென ஒரு வெற்றிகரமான தனிப் பாதையைக் கண்டடைய இந்திய கம்யூனிஸ்ட்டுகள் தவறிவிட்டீர்களோ?

அப்படிச் சொல்ல முடியாது. மார்க்ஸ் வழிகாட்டி. லெனின் தேவைப்படுற எடத்துல லெனினையும், காந்தி தேவைப்படுற எடத்துல காந்தியையும், அம்பேத்கர் தேவைப்படுற எடத் துல அம்பேத்கரையும், பெரியார் தேவைப்படுற எடத்துல பெரியாரையும் எடுத்துக்குறோம். இந்தியாவுக்குன்னு இன்னிக்குத் தனிப் பாதையை உருவாக்கத்தான் செஞ்சிருக்கோம். ஆனா, போக வேண்டிய தொலைவு ஜாஸ்தியா இருக்கு. பெரிய நாடுல்ல, ஏயப்பா... எத்தனையெத்தனை சமூகங்கள் இருக்கு இங்கே!

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வதற்குப் பதில், அவர்களோடு கைகோத்து அரசியல் செய்ததுபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிராந்திய கட்சிகளோடு கைகோத்ததும் உங்கள் கட்சியின் பின்னடைவுக்கு ஒரு காரணம் என்று சொல்லலாமா?

அப்படிச் சொல்ல முடியாது. அரசியல்ங்கிறது இயற்பியலைவிட சிக்கலானதுன்னு சொல்வார் ஐன்ஸ்டீன். லெனினும் அதையேதான் சொல்வார், ஒரே நேர்க்கோட்டுல போக, அரசியல் ஒண்ணும் மாஸ்கோ - பீட்டர்ஸ்பர்க் சாலை கிடையாதும்பார். இடதுசாரி இயக்கங்கள் எடுக்குற பல முடிவுகள் அந்தந்தக் காலத்தோட சமூகத் தேவைகளை முன்வெச்சி எடுக்குறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணில நாம காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்தப்போ இடதுசாரிகள் தப்பு பண்ணினோம்னு எல்லாரும் எழுதினாங்க, பேசினாங்க. ஆனா, நாங்க வெளியே வந்ததுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு? என் அரசோட கைகளைக் கட்டியிருந்த கட்டு இன்னையோட அவிழ்ந்துச்சுன்னார் சிங். பெருமுதலாளிகள் அவரை அள்ளி அணைச்சுக்கிட்டாங்க. அரசாங்கம் அவங்களோடதாயிடுச்சு. அப்போ, நாங்க செஞ்சதுல எது தப்பு, எது சரி? வெறுமனே எங்களோட இயக்கத்துக்கு எது நல்லதுன்னு யோசிச்சா முடிவை எடுக்குறோம்? நாட்டுக்கு எது நல்லதுங்கிறதுன்னும் யோசிக்கிறோம்ல? அப்பிடிதான் மாநிலங் களேயும் செய்யிறோம். என்ன செய்யிறது, நாட்டு நலனைப் பார்க்கும்போது, கட்சி நலன் பின்னே போயிடுது!

கட்சியின் பலவீனமாக நீங்கள் எதை நினைக் கிறீர்கள், எதைச் சாதனையாக நினைக்கிறீர்கள்?

இன்னைக்கு நாங்க நெலைச்சு நிக்கிறதே சாதனைதான். எத்தனையெத்தனை இழப்புகள், தியாகங்கள் தெரியுமா? பலவீனம் எங்களுக்குள்ள இல்ல; வெளியே இருக்குற இந்தச் சமூக அமைப்புலதான் இருக்கு.

உங்கள் தலைமுறையில் இருந்த அரசியல் விழிப்புணர்வை இன்றைய தலைமுறையிடம் பார்க்கிறீர்களா?

அரசியல் விழிப்புணர்வெல்லாம் அப்பிடியே தான் இருக்கு. ஒற்றுமை உணர்வுதாம் குறைஞ் சிடுச்சு. அன்னைக்கு மேல வெள்ளைக்காரன், கீழ நாம. எல்லாரும், தேச விடுதலைங்கிற ஒரே நோக்கத்தோட ஓடினோம். இன்னைக்கு நமக்குள்ளேயே கீழ, அதுக்குக் கீழ, அதுக்கும் கீழ; மேல, அதுக்கு மேல, அதுக்கும் மேலன்னு நிறைய பிரிவுகள், பிளவுகள் பொருளாதாரரீதியிலும் உண்டாயிடுச்சு. அவங்கவங்க அவங்கங்களைக் காப்பாத்திக்க ஓடுறாங்க. பொதுநல நோக்கம் அடிபட்டுப்போகுது.

இந்தச் சூழலையெல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? முக்கியமாக, உங்கள் இயக்கத்தின் அடித்தளமான தொழிலாளர் வர்க்கத்துடனான இயக் கத்தின் பிணைப்பு நாளுக்கு நாள் நழுவிக்கொண்டே இருக்கிறது. இன்றைய மென்பொருள் துறை ஊழியர்களுக்கெல்லாம் தாங்களும் சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாளிகள் என்ற உணர்வுகூட இல்லை...

கம்யூனிஸம்கிறது ஒரு சமூகத் தேவை. சமூகமே அதை வாரி அணைச்சுக்கும். இந்தியா வுல அது இன்னைக்கோ, நாளைக்கோ உடனே நடந்துடும்னு நான் நம்பலை. ஆனா, நிச்சயம் அந்த நாளும் வரும்.

பொதுவுடைமைக் கொள்கைகளைக் கையில் எடுத்து தீவிரமாக நிற்கும் மாவோயிஸ்ட்டுகள் போன்றவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அவங்க கையில இருக்குற பிரச்சினை, அவங்க அமைக்கணும் நெனைக்குற சமத்துவ சமுதாயம்கிற லட்சியம் எல்லாம் உயர்வானது. ஆனா, பாதையை மாத்திக்கணும்.

இந்தக் கருத்தைக் கொஞ்சம் நீட்டித்து எடுத்துக் கொள்ளலாமா? நாடாளுமன்ற ஜனநாயகமே இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் இறுதிப் பாதை என்று எடுத்துக்கொள்ளலாமா?

நாடாளுமன்ற ஜனநாயகத்தையே பாதுகாத் துக்க வேண்டிய காலகட்டத்துல இருக்கோம் கிறதைப் புரிஞ்சுக்கணும்.

உங்கள் சக தோழர்களுக்குச் சொல்வதற்கு ஏதேனும் செய்தி உண்டா?

நம்ம நாட்டுல சமத்துவச் சமூகத்தைக் கொண்டு வர்றதுங்கிறது பெரிய பயணம். இயக்கமும் நாடும் முக்கியம்னு நெனைக்கணும், இன்னும் வேகமாக ஓடணும், உழைக்கணும். தியாகங்கள் இல்லாம எதையும் சாதிக்க முடியாது!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x