Published : 01 Dec 2014 01:18 PM
Last Updated : 01 Dec 2014 01:18 PM

மக்கள் மனதில் மாற்றத்தை தி இந்து ஏற்படுத்த வேண்டும்: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்

மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த 'தி இந்து' ஆதரவாக இருக்க வேண்டும் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கேட்டுக்கொண்டார்.

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாசகர் திருவிழா தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலத்தைத் தொடர்ந்து, நேற்று வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் டாக்டர் சென்னாரெட்டி அரங்கில் வாசகர் திருவிழா நடந்தது.

இந்த விழாவில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசும்போது, " 'தி இந்து' முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு என் வாழ்த்துகள். ஆங்கில இந்துவுடன் நீங்கள் போட்டியிட வேண்டும் என வாழ்த்துகிறேன். பாரம்பரியம்மிக்க இந்து குழுமம் தமிழில் பத்திரிகை ஆரம்பித்தது ஆச்சரியமாக இருந்தது.

தொண்டை நாட்டின் தலைநகராக காஞ்சிபுரம் இருந்தாலும், மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர் நகரம் இன்று வளர்ந்து வருகிறது. இன்னும் 20, 30 ஆண்டுகளில் இந்திய அளவில் வளரும் நகரங்கள் பட்டியலில் வேலூர் முதலிடத்தில் இருக்கும். சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடைப்பட்ட பகுதியில் வேலூர் நகரம் இருப்பதால் வளர்ச்சியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்

இந்த மாவட்டத்தின் வாழ்வாதா ரமான பாலாற்றில் நீர் இல்லை. வாஜ்பாய் ஆட்சியின்போது நதிகள் இணைப்புத் திட்டம் குறித்த முடிவு செயல்படுத்த முடியாமல் போனது. நதிகள் இணைப்புத் திட்டத்தை மோடி அரசு நிறைவேற்ற வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கே.ராவ் தெரிவித்திருந்தார். அப்படி நடந்தால் வட இந்தியாவுக்கே நாம் உணவு அனுப்ப முடியும். மக்களிடம் மாற்றங்களை ஏற்படுத்த கல்வியால் மட்டும் முடியும். மக்கள் குடிப்பழக்கத்தில் இருந்து மீளவும், செம்மரங்களை வெட்டச் சென்று சிக்கும் மக்களை காக்கவும் கல்வியால் மட்டுமே முடியும்.

இந்தியாவில் மொத்தம் 39 கல்வி வாரியங்கள் உள்ளன. இவற்றில் கடைசி இடத்தில் தமிழகம் உள்ளது. இதை அதிகாரிகள் புரிந்துகொள்வார்களா எனத் தெரியவில்லை. 5-ம் வகுப்பில் இருந்து 6-ம் வகுப்பில் சேரும் மாணவனுக்கு தனது பெயரைக்கூட எழுதத் தெரியவில்லை என்கிறார்கள். அந்த மாணவனை 9-ம் வகுப்பு வரை பெயிலாக்காமல் அனுப்பி வைக்கிறோம். 10-ம் வகுப்பில் அவனது தலையெழுத்துபடி நடக்கும் என்கிறார்கள். 10-ம் வகுப்பிலும் எப்படியாவது மாணவனை பாஸ் செய்துவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். கடந்த ஆண்டு 30 ஆயிரம் மாணவர்கள் இயற்பியல் பாடத்தில் இருநூறு மதிப்பெண் பெற்றுள்ளார்கள். இது எங்கும் இல்லாத சாதனை.

1965-க்குப் பிறகு தமிழகத்தில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடக்கவில்லை. போராடத் தெரியாதவனாய் தமிழன் மாறிவிட்டான். ஏன் லஞ்சம் வாங்குகிறாய் என கேட்க தைரியம் இல்லை. அதற்கு பதிலாக லஞ்சத்தை எவ்வளவு குறைக்கலாம் என பேசுகிறார்கள்.

தமிழ் பத்திரிகைகளுக்கு ஒருமை, பன்மை தெரியவில்லை. முடிந்தவரை தமிழை பயன்படுத்துங்கள், நல்ல தமிழைக் கேட்க இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறது.

தமிழன் நல்லவனாகவும் வல்லவனாகவும் இருக்க வேண்டும் என மு.வரதராசனார் கூறுவார். மக்கள் உழைக்க வர வேண்டும். மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த 'தி இந்து' ஆதரவாக இருக்க வேண்டும்'' என்றார்.

நிகழ்ச்சியை 'தி இந்து' குழுமத்தின் பொது மேலாளர் வி.பாலசுப்பிர மணியன் தொகுத்து வழங்கினார். 'தி இந்து' நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றார். 'தி இந்து' வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்.

'தி இந்து' வாசகர் திருவிழாவை லலிதா ஜூவல்லரி நிறுவனம், ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தின. விழாவில் 'தி இந்து' தமிழ் வெளியீடுகளான பொங்கல் மலர், ஆடி மலர், தீபாவளி மலர், 'தி இந்து' ஆங்கிலம் வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

வாசகர்களுடன் ஒட்டி உறவாடும் 'தி இந்து'

`தி இந்து' தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது: 150 ஆண்டு பாரம்பரியமிக்க “இந்து” குழுமம் தனது நெறிமுறைகளை உள்ளது உள்ளபடி சொல்லும்போது தமிழில் வெல்ல முடியுமா, தமிழ் வாசகர்கள் படிப்பார்களா என்ற தயக்கம் இருந்தது. இறுதியாக கடந்த ஆண்டு தமிழில் 'தி இந்து' வெளியானது. நீங்கள் கொண்டுவந்தது சரிதான் என்றீர்கள். நீங்கள் சொல்லச் சொல்ல எங்கள் வடிவம் மாறியது. நமக்கு பிடித்தமான சட்டையை தைத்துக்கொள்வதுபோல, உங்களுக்கு தேவையானதை நீங்களே உருவாக்கினீர்கள். அதை நாங்கள் அப்படியே கொடுத்தோம். ஒவ்வொரு மனிதனுடன் ஒட்டி உறவாடக்கூடியது 'தி இந்து'. இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x