Last Updated : 09 Dec, 2014 12:03 PM

 

Published : 09 Dec 2014 12:03 PM
Last Updated : 09 Dec 2014 12:03 PM

உலகம் சுற்றிய முதல் கப்பல்

உலகம் சுற்றி வந்த முதல் குழு ஃபெர்டினாண்ட் மகெல்லன் (Ferdinand Magellan) தலைமையில் கப்பலில் சென்றவர்கள்தான்.

வாஸ்கோடகாமா 1498-ல் இந்தியாவுக்குக் கடல் வழி கண்டறிந்தவுடன் நறுமணப் பொருட்கள் விற்பனையை போர்த்துகீசியர்கள் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். அதேநேரம், அந்த வியாபாரத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வர ஸ்பானியர்கள் நினைத்தனர். ஆனால் தூரக் கிழக்கில் நறுமணப் பொருட்கள் இருந்த தீவுகளைக் கைப்பற்றுவதற்குத் தடையாக, போர்த்துக்கீசியர்களுடன் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் இருந்தது.

நறுமணத் தீவுகள்

கொலம்பஸைப் போலவே, போர்த்துக்கீசிய சாகசப் பயணி ஃபெர்டினாண்ட் மகெல்லனும், கடலில் ஐரோப்பாவுக்கு மேற்கே பயணிப்பதன் மூலம் நறுமணப் பொருட்கள் இருக்கும் தீவை அடையலாம் என்று நம்பினார். இந்தோனேசியாவில் உள்ள மலுகு தீவுகள்தான் நறுமணத் தீவுகள் எனப்பட்டன.

அதனால் ஸ்பானியர்கள் ஐந்து புதிய கப்பல்களை மகெல்லனிடம் தந்து, போர்த்துக்கீசியர்கள் பயன்படுத்தாத புதிய வழியைக் கண்டறிந்து தருமாறு கேட்டனர். அப்படிப் புறப்பட்ட மகெல்லன்தான், உலகை முதலில் வலம் வந்த கப்பல் குழுவின் தலைவனாக மாறினார்.

புதிய வழி

ஐந்து கப்பல்கள், 260 பேருடன் மகெல்லன் பயணம் புறப்பட்டார். அவருடைய முதன்மைக் கப்பல் டிரினிடாட். கடற்கொள்ளையர்களை எதிர்கொள்வதற்காக அதில் மட்டுமே பீரங்கி இருந்தது. அந்தக் காலத்திலேயே கடற்கொள்ளையர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மரக்கலம் வெறும் 30 மீட்டர் நீளமே கொண்டது. அதில்தான் நீண்ட நெடும் பயணத்துக்குத் தேவையான பெருமளவு உணவை எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது.

இந்தப் பயணம் மூலம் பசிஃபிக் பெருங்கடலைக் கடந்து ஆசியாவுக்கு வர முடியும் என்பதை முதலில் கண்டறிந்தார் மகெல்லன். அதைத் தொடர்ந்து மேற்குப் பகுதி வழியாக ஓரளவு அருகில் வந்த பிலிப்பைன்ஸ், நறுமணத் தீவுகளுடன் ஐரோப்பிய நாடுகள் வியாபாரம் செய்யும் முறை தொடங்கியது.

தடைகள்

இதைத் தொடர்ந்து மகெல்லனின் கப்பல்தான் பூமிப் பந்தை முதலில் வலம் வந்தது. அந்த வகையில் உலகம் சுற்றிய முதல் மனிதர்கள் மகெல்லனின் கப்பல்களில் இருந்தவர்கள்தான்.

ஆனால், பயணம் தொடங்கியபோது உலகைச் சுற்றுவது மகெல்லனின் திட்டமாக இருக்கவில்லை. அப்படிச் சுற்றியதன் மூலம் அவருடைய பயணம் உலக வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், அந்தப் பயணத்தில் கப்பல் குழுவினரின் கலகம், புயல், கொலைப் பட்டினி என பல கடுமையான தடைகளை மகெல்லன் கடந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x