Published : 15 Dec 2014 04:24 PM
Last Updated : 15 Dec 2014 04:24 PM

பாமரர்களின் ஆசிரியராக திகழ்கிறது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் வாசகர் திருவிழா நடந்து வருகிறது. கோவையில் தொடங்கிய வாசகர் திருவிழா, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 12 இடங்களில் நடந்து முடிந்துள்ளது. 13-வது வாசகர் திருவிழா, சென்னை எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரி வளாக அரங்கில் நேற்று சிறப்பாக நடந்தது.

விழாவில், சென்னை உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், சட்டம் தொடர்பான நூல்களின் எழுத்தாளருமான கே.சந்துரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பிரபல இலக்கிய எழுத்தாளர் சாரு நிவேதிதா, திரைப்பட நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர். ஏராளமான வாசகர்கள், விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: தமிழ்க் களஞ்சியமாக, தமிழ்கூறும் நல்உலகத்தில் ‘தி இந்து’ பத்திரிகை வரலாற்றுப் பதிவுகளை ஓராண்டாக எடுத்து உரைத்திருக்கிறது. இதன் உயிர் முழக்கம் ‘தமிழால் இணைவோம்’ என்பதுதான். தமிழ்தான் நம் அனைவரையும் இங்கு இணைத்து, பிணைத்து வைத்திருக்கிறது. அந்த வளமான, இளமையான தமிழை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியை மிகச் சிறப்பாக தமிழ் இந்து நாளிதழ் வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது.

சமுதாயத்துக்கு தேவையான நல்லதை திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். அந்தப் பணியைத்தான் ‘தி இந்து’ தமிழ் சிறப்பாக செய்து வருகிறது. மக்களின் கருத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதே ஒரு பத்திரிகையின் நோக்கம் ஆகும். எழுத்து என்பது தொழில் அல்ல; தவம் என்பதைத்தான் இன்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. ரூசோவின் எழுத்துக்கள்தான் பிரெஞ்சுப் புரட்சியை தோற்றுவித்தது. தாமஸ் பெயினின் எழுத்துதான் சுதந்திர அமெரிக்காவுக்கு அடிகோலியது. அதுபோல எழுத்து எதிர்முனையிலும் சிந்தித்தது உண்டு. ஹிட்லர், முசோலினி நடத்திய பத்திரிகைகள் நாசிசத்தையும், பாசிசத்தையும் வளர்த்து மனிதகுலத்தை அழிவுக்கு எடுத்துச் சென்றது. மார்க்ஸின் பத்திரிகை பொதுவுடமைப் பூங்கா உருவாக வித்திட்டது. லெனினின் பத்திரிகைதான் பாட்டாளி வர்க்கத்துக்கு விடியலைக் காட்டியது. காந்தியடிகளின் ‘யங் இந்தியா’ என்ற பத்திரிகை சுதந்திர இந்தியாவுக்கு வழிகாட்டியது.

வாசகரின் தரத்தை உயர்த்தி, அவர்களுக்கு தேவையான செய்திகளை மிகச்சிறப்பாக கொண்டுபோய் சேர்க் கிறது. அதிலும், கருத்துப் பேழை பகுதி கனமான செய்திகளை தமிழ்ப்பாலை வடித்து தாய்ப்பாலைப்போல நமக்கு எளிமையாகத் தருகிறது. வரலாற்றுப் பதிவுகளை இளைய தலைமுறையும், வருங்கால தலைமுறையும் உணர்ந்து கொள்கிற வகையில் இப்பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது.

சமூகத்துக்காக சரியானவற்றை பேசவும், சரியானவற்றை சிந்திக்கவும், தேவைப்பட்டால் சரியானவற்றுக்காக எந்தத் தியாகமும் செய்கின்ற பொறுப்பு சமூக சிந்தனையாளர்களுக்கு இருக் கிறது. அந்த சமூக சிந்தனையை நாளும் நாளும் வளர்க்கின்ற பொறுப்பு ‘தி இந்து’ போன்ற நாளிதழ்களுக்கு இருக்கிறது. அந்தக் கடமையை ‘தி இந்து’ நாளிதழ் மிகச்சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. ஒரு இதழ்களுக்குள் எத்தனை செய்திகள்.. நிலமும்-வளமும், இளமை-புதுமை என வாசகர்களின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உலகச் சிந்தனைகளை நம் கையில் கொண்டு சேர்க்கிற, கையில் இருக்கிற ஒரு அச்சு இணையதளமாகத்தான் ‘தி இந்து’ நாளிதழ் விளங்கிக் கொண்டிருக்கிறது.

பாமரர்களின் பள்ளி ஆசிரியராக விளங்க வேண்டியதுதான் ஒரு நாளிதழின் கடமை. அந்தப் பணியை நிறைவாக செய்துவரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், எல்லா கிராமங்களிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஓராண்டு காலம் நல்ல தமிழை, வளமான தமிழை அச்சுத் தமிழில் பார்த்து வருகிறோம்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x