Published : 01 Dec 2014 12:33 PM
Last Updated : 01 Dec 2014 12:33 PM

அந்த 43 மாணவர்களுக்கு என்ன பதில்?

இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசுக்கு எதிராக போராடிய 43 மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஏற்பட்ட கொந்தளிப்பான போராட்டங்களுக்குப் பின்னர், ஒரு புதிய பாதுகாப்புத் திட்டத்தை மெக்ஸிகோ அதிபர் என்ரிகோ பென்யா நியத்தோ அறிவித்திருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பு வெளியானது. அதே நாளில்தான் கெரெரோ மாகாணத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 11 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தேசிய மாளிகையில் உரையாற்றிய அதிபர் என்ரிகோ, நகராட்சி நிர்வாகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதைக் கண்டறியும் வகையில் பல நடவடிக்கைகள் எடுப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார். எனினும், இந்தத் திட்டங்கள்மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றன.

முதல்கட்ட நடவடிக்கையாக, இதுபோன்ற குற்றச் செயல்களால் கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் கெரெரோ, ஜாலிஸ்கோ, மிஃபோகன், டமாலிபஸ் போன்ற மாகாணங்களில் குற்றங்களைத் தடுக்க அனைத்துவிதமான முயற்சிகளிலும் அரசு இறங்கப்போவதாக, அதிபர் கூறியிருக்கிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் மூன்று சீர்திருத்தங்களைச் செய்யப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். முதலாவதாக மொத்தம் உள்ள 32 மாகாணங்களிலும் ஒரே மாதிரியான கொள்கைகளை உருவாக்குவது; உள்ளூர் நிர்வாகத்தில் ஊடுருவும் ஊழல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பது; குற்றங்களைத் தடுக்க நிர்வாகத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் அதிகாரம் அளிப்பது.

மெக்ஸிகோவில் பொருளாதார ரீதியில் கீழ்நிலையில் உள்ள கெரெரோ, மிஃபோகன், சியாபாஸ் மற்றும் வஸாகா போன்ற மாகாணங்களை உள்ளடக்கிய மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது குறித்த அறிவிப்பும் அதிபர் என்ரிகோவின் உரையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான சட்டரீதியான பூர்வாங்க நடவடிக்கைகள், வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுத் தொடங்கப்படும்.

நவீன உள்கட்டுமான வசதிகள், பாதுகாப்பு வசதிகள், வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான வரிச் சலுகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய லாபம் தரும் தொழில்களை உருவாக்குவதும், அது தொடர்பான முதலீடுகளை ஊக்குவிப்பதும்தான் தனது திட்டத்தின் நோக்கம் என்று அதிபர் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனினும், அதிபரின் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது என்று மெக்ஸிகோவின் பிரதான எதிர்க் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. பாதுகாப்புத் திட்டத்தின் குறைபாடுகளைக் குறித்து இப்போதே பேச்சு எழுந்திருக்கிறது.

“ஊழலைத் தடுப்பது தொடர்பாக அதிபர் அறிவித்திருக்கும் திட்டம் போதுமானதாக இல்லை. இன்னும் தீர்க்கமான திட்டங்கள் தேவை. இது தொடர்பான மற்ற மதிப்பீடுகளும் அவசியம்” என்று ஜனநாயகப் புரட்சி கட்சியின் தலைவர் கார்லோஸ் நவாரெட் கூறியிருக்கிறார். அதிபரின் திட்டங்கள் அவசரகதியிலும், முழுமையடையாதவையாகவும் இருப்பதாக மக்கள் அமைப்புகளும் கருத்து தெரிவித்திருக்கின்றன. 43 மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் வெகு தாமதமாகவும் அவசரகதியிலும் இந்தத் திட்டங்கள் இருப்பதாக அந்த அமைப்புகள் குறைகூறியிருக்கின்றன.

“மாஃபியா குழுக்களின் ஆதிக்கம், இளம் குற்றவாளிகள் அதிகரிப்பு, புரையோடிப் போன ஊழல் போன்றவைதான் மெக்ஸிகோவின் முக்கியமான பிரச்சினைகள். அதனால்தான், நாட்டின் அடிப்படை அமைப்பையே மாற்றி யமைப்பது அவசியம் என்று சொல்கிறோம்” என்று எஃபே செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், கவிஞரும் ‘அமைதி மற்றும் கவுரவமான சமாதனம்’ இயக்கத்தின் தலைவருமான ஜேவியர் சிசிலியா கூறியிருக்கிறார்.

இதற்கிடையே அதிபரின் உரை வெளியான சமயத்தில், கண்டெடுக்கப்பட்ட உடல்கள் குறித்து எஃபே செய்தி நிறுவனத்திடம் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலக வட்டாரங்கள் முக்கியத் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளன.

கடந்த புதன்கிழமை லாஸ் ரோஸ் மற்றும் லாஸ் ஆர்டில்லோஸ் என்ற குற்றக் குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அவை என்பதுதான் அந்தத் தகவல்!

- மெக்ஸிகோ ஸ்டார் தலையங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x