Published : 15 Dec 2014 04:09 PM
Last Updated : 15 Dec 2014 04:09 PM
தமிழ்ச் சமூகத்துக்கு சேவகனாக 'தி இந்து' தமிழ் நாளிதழ் திகழ்கிறது என்று உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு புகழாரம் சூட்டினார்.
'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் வாசகர் திருவிழா நடந்து வருகிறது. கோவையில் தொடங்கிய வாசகர் திருவிழா, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 12 இடங்களில் நடந்து முடிந்துள்ளது. 13-வது வாசகர் திருவிழா, சென்னை எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரி வளாக அரங்கில் நேற்று சிறப்பாக நடந்தது.
விழாவில், சென்னை உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், சட்டம் தொடர்பான நூல்களின் எழுத்தாளருமான கே.சந்துரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பிரபல இலக்கிய எழுத்தாளர் சாரு நிவேதிதா, திரைப்பட நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர். ஏராளமான வாசகர்கள், விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
வாசகர்களிடையே நீதியரசர் கே.சந்துரு பேசியதாவது:
சென்னையில் பிரபல குற்றவியல் வழக்கறிஞராக சேவையாற்றிய வி.எல்.எத்திராஜ், தனது சொத்தை மகளிர் கல்லூரிக்காக 60 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கினார். அந்த மகளிர் கல்லூரி வளாகத்தில், இன்று பல்வேறு குடும்பப் பெண்கள், மாணவிகளுக்கு பயனுள்ள தகவல்களைத் தந்து வழிகாட்டி இதழாகத் திகழும் 'தி இந்து' தமிழ் நாளிதழின் வாசகர் திருவிழா நடப்பது மிகவும் பொருத்தமானது.
'தி இந்து' தமிழ் இதழுக்கு ஒரு வயது முடிந்துள்ளது. இந்து நிறுவனம் தொடங்கும்போதே, அதாவது 136 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிலும் நாளிதழை கொண்டு வந்திருந்தால், தமிழகம் இன்னும் சிறப்பாக இருந் திருக்கும்.
'தி இந்து' தமிழில் வெளியிடப்படும் செய்திகள், கட்டுரைகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சட்டங்கள் தொடர்பாக பெரும்பாலும் பத்திரி கைகளில் பெரிய அளவில் செய்திகள் வெளியாவதில்லை. 'தி இந்து' தமிழில் அதன் ஆசிரியர் கேட்டுக்கொண்டதை ஏற்று, 'நீதி சொல்லும் சேதி' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினேன். இந்தக் கட்டுரைகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
ஒருநாள் சாலையில் நடந்து சென்ற என்னை ஆட்டோ ஓட்டுநர் நிறுத்தி, தனது வாகனத்தில் ஏறுமாறும் அலுவலகத்தில் விடுவதாகவும் கூறினார். 'வேண்டாம் நடந்து செல் கிறேன்' என்று நான் கூறியபோது, 'சார் குடிநீர் சட்டம் பற்றி 'தி இந்து'வில் ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதில் சில சந்தேகங்களை கேட்க வேண்டும்' என்று கூறி, என்னைக் கட்டாயப்படுத்தி ஏற்றிக்கொண்டார். அந்த அளவுக்கு 'தி இந்து'வில் வெளியான கட்டுரைகளின் தாக்கம் இருக்கிறது. 'இந்து' என்ற தலைப்பு இருந்தாலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று எல்லோருக்கும் செய்திகளை வெளியிடும் மதசார்பற்ற ஊடகமாகவே ' தி இந்து' திகழ்கிறது. தற்போதைய நிலையில், சிறுபான்மை மக்களுக்கு கேடயமாக, இதுபோன்ற ஊடகம் சமூகத்தில் தேவைப்படுகிறது.
நீதிமன்றம், சட்டங்கள் குறித்து விமர்சித்தால் எழும் விளைவுகளை நினைத்து, அந்த அச்சத்தில் நீதித் துறையை பத்திரிகைகள் பொதுவாக விமர்சிப்பதில்லை. ஆனால், தமிழ் இந்து அச்சமின்றி கருத்துகளை முன் வைக்கிறது.
நீதித்துறை சார்ந்து சுமார் 100 கட்டுரைகளை எழுதியிருப்பேன். அவற்றில் சுமார் 15 கட்டுரைகள் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு களாக தாக்கலாகியுள்ளன. பல கட்டுரை களிலுள்ள கருத்துகள் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் தீர்மானமாகி யுள்ளன. அந்த அளவுக்கு வழக்கறிஞர்க ளுக்கும், அரசியல் இயக்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு தகவல்களை 'தி இந்து' தருகிறது.
இந்துவின் கட்டுரைகளை, பல மாவட்டங்களில் வழக்கறிஞர் சங்க அலுவலகங்களில் நகல் எடுத்து விநியோகிக்கின்றனர். தகவல் பலகை யில் ஒட்டிவைத்துள்ளனர். எனவே, தமிழ்ச் சமூகத்துக்கு சேவை செய்து வரும் 'தி இந்து' தமிழ் நாளிதழ், ஆங்கில இந்துவைப் போன்று நூற்றாண்டு தாண்டி, தமிழுக்கு சேவகனாகத் திகழும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு நீதிபதி கே.சந்துரு பேசினார்.
காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் உரிமை யாளர் எம்.எஸ்.மனோகரன், ஏர்செல் செல்போன் நிறுவன தமிழ்நாடு வட்ட வணிகப் பிரிவுத் தலைவர் கே.சங்கர நாராயணன் ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியை 'தி இந்து' குழுமத்தின் பொது மேலாளர் வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். 'தி இந்து' தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
'தி இந்து' நாளிதழ் நடுப்பக்கங் களின் ஆசிரியர் சமஸ் ஏற்புரை நிகழ்த்தினார். 'தி இந்து' தமிழ் நாளிதழ் வணிகப்பிரிவுத் தலைவர் ஷங்கர் வி.சுப்ரமணியம் நன்றியுரையாற் றினார்.
தலைநகரில் 'தி இந்து' தமிழ் வாசகர் திருவிழாவை, லலிதா ஜூவல்லரி நிறுவனம், ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் ஆகியவை இணைந்து நடத்தின. சென்னை ஆல்பா விளம்பர நிறுவனம் சார்பில் வாசகர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.
‘பிரமிக்க வைத்த வாசகர்கள்’
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் தனது வரவேற்புரையில் பேசியதாவது: வீடுகளில் செய்தித்தாளை முதலில் கையில் எடுக்கும் குழந்தைகளின் மனதில் தவறான கருத்துகள் பதிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். ‘தி இந்து’ தமிழ் ஆரம்பித்த புதிதில் கட்டுரைகள் எல்லாம் பெரிதுபெரிதாக இருப்பதாக வாசகர்கள் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளை காது கொடுத்து கேட்டோம். அவர்கள் விரும்பிய மாற்றங்களை ஒவ்வொன்றாக செய்தோம்.
நமது வாசகர்கள் தரமானவர்கள். அறிவுப்பூர்வமான விமர்சனங்களை முன் வைப்பவர்கள். எங்கள் குழுவில் உள்ள 150 பேரின் மூளைத் திறனைவிட, வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களின் மூலம், அவர்களுடைய மூளைத் திறன் எங்களை பிரமிக்க வைத்தது. ஒரு செய்தித்தாள் என்பது செய்திகளை சுமந்துகொண்டு வந்து சேர்க்கின்ற வாகனமாக மட்டுமின்றி, ரத்தமும், சதையுமாக இன்னொரு மனிதர்போல் வாசகர்களுடன் உரையாட வேண்டும். அவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும். நல்ல காரியங்களை செயல்படுத்த தூண்ட வேண்டும் என்பதை ‘தி இந்து’ நோக்கமாக கொண்டிருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அளித்திருக்கும் மாபெரும் வரவேற்பு, நல்லது எப்போதும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT