Published : 30 Apr 2014 08:57 PM
Last Updated : 30 Apr 2014 08:57 PM
செவ்வாய்க்கிழமை காலை 11 மணியிருக்கும். திருச்சி காந்தி சந்தையிலிருந்து சத்திரம் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் கருப்புக் கண்ணாடி அணிந்த முதியவர் ஒருவர் நீண்ட நேரமாக பேருந்தில் ஏறுவதற்காக காத்துக்கொண்டிருந்தார்.
அவரை பேருந்துகளின் நடத்துநர்கள் ஏற்ற மறுத்து விரட்டினர். கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்திருந்த அந்த பெரியவர் பேருந்தில் மெதுவாக ஏறி இறங்க சில மணித்துளிகள் ஆகலாம் என்பதற்காக அவரை எற்றுவதற்கு அனுமதி மறுத்தனர்.
கொளுத்தும் வெயிலில் அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த ஒரு போக்குவரத்துக் காவலர் இந்த காட்சிகளைக் கவனித்துவிட்டு பெரியவரின் அருகே வந்தார். அவரிடம் ஏன் பேருந்தில் செல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்கிறீர்கள்? எனக் கேட்டார். பெரியவர் பேருந்துகளின் நடத்துநர்கள் ஏற்ற மறுக்கும் விவரத்தை அவரிடம் சொன்னார்.
அந்தக் காவலர் வாஞ்சையாக பெரியவரின் கரங்களைப் பற்றினார். அடுத்து வந்த தனியார் பேருந்தில் பெரியவரை ஏறச் செய்தார். வழக்கம்போல் அந்த பேருந்தின் நடத்துநரும் ஏற்ற மறுத்தார். அந்தக் காவலருக்கு வந்ததே கோபம். நடத்துநரைக் கடிந்துகொண்டதுடன் அந்த பெரியவரை குழந்தையைப்போல் இடுப்பைப் பிடித்து தூக்கி பேருந்தில் ஏற்றிவிட்டார். பெரியவர், "நீ நல்லாயிருப்பேப்பா" என ஆசீர்வத்துவிட்டு பேருந்தில் ஏறிக் கிளம்பினார்.
போக்குவரத்துக் காவலரின் இந்த மனிதாபிமான செயலைக் கண்ட பலரும் வியந்து மனதுக்குள் பாராட்டினர். அந்த போக்குவரத்துக் காவலர் பெயர் காமராஜ். திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்துக் காவல் பிரிவில் பணிபுரிகிறார். இதுபோன்ற நல்ல உள்ளங்கள்தான் காவல்துறையில் மதிப்பை தூக்கி நிறுத்துபவை என்றால் அது மிகையல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT