Published : 14 Nov 2014 04:46 PM
Last Updated : 14 Nov 2014 04:46 PM
தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலை தொடர்பான அறிவியல் ஆய்வுப் பணிகளில் தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் மத்தியில் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 1993-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு ‘தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலையை புரிந்து கொள்ளுதல்’(Understanding Weather and Climate) என்ற கருப்பொருளின் கீழ் ஆய்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் வாழும் பகுதிகளில் காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவை அன்றாட மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அறிவியல் வழிமுறைகளை (Method of Science) பயன்படுத்தி ஆய்வுகளை மாணவர்கள் செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எஸ்.பி.ஏ. மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்களான எம்.ஷாலினி, ஜி.திவ்ய, டி.ஹேமா, எம்.சரண், ஆர்.டி.கே.மதன் ரத்தினம் ஆகியோர் `வெப்ப மண்டல காய்கறிகள் சாகுபடியில் வெப்ப கதிர் வீச்சின் தாக்கம்' என்பது பற்றி ஆய்வு செய்துள்ளனர். பள்ளி ஆசிரியை டி.கனிமொழி இந்த ஆய்வினை செய்ய மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
தங்களது ஆய்வு பற்றி ஆய்வுக் குழுவின் தலைவரான எம்.ஷாலினி கூறியதாவது:
"வெண்டை, முள்ளங்கி போன்ற வெப்ப மண்டல காய்கறி பயிர்கள் நன்கு செழித்து வளர உகந்த தட்ப வெப்ப நிலை பற்றி ஆராய்வதாக எங்கள் ஆய்வு அமைந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வைத் தொடங்கினோம். திறந்த வெளியில் வழக்கமான முறையில் வெண்டை, முள்ளங்கி, கொத்தவரை, கத்தரி ஆகியவை ஒவ்வொன்றிலும் 10 செடிகள் வளர்த்தோம். அதேபோல் நிழல் வலை அமைத்து அந்த வலைக்குள் இதே வகையைச் சேர்ந்த 10 செடிகளை வளர்த்தோம்.
இரண்டு மாதங்களுக்குள் திறந்த வெளியில் உள்ள செடிகளின் வளர்ச்சியையும், நிழல் வலையில் உள்ள செடிகளின் அன்றாட வளர்ச்சியையும் ஒப்பிட்டு, அது தொடர்பான தகவல்களை பதிவு செய்து கொண்டே வந்தோம். திறந்த வெளியிலும், நிழல் வலைக்குள்ளும் ஒவ்வொரு நாளின் சராசரி வெப்ப நிலை, ஈரப்பதத்தின் அளவு, விதை முளைக்க எடுத்துக் கொண்ட நாள், தினசரி செடிகளின் உயரம், பூ பூக்க எடுத்துக் கொண்ட காலம், பூக்களின் எண்ணிக்கை, காய்களின் எண்ணிக்கை போன்ற பல விவரங்களை பதிவு செய்தோம்.
இந்த ஆய்வின் மூலம் பல உண்மைகள் எங்களுக்கு தெரிய வந்தன. திறந்த வெளியில் உள்ளதை விட சுமார் 5 டிகிரி செல்சியல் அளவுக்கு நிழல் வலைக்குள் வெப்ப நிலை குறைகிறது. அதே நேரத்தில் நிழல் வலைக்குள் 10 சதவீத அளவுக்கு ஈரப்பதம் அதிகரிக்கிறது. நாங்கள் வசிக்கும் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் மழைக் காலத்தில் நிழல் வலை சாகுபடியை விட திறந்த வெளி சாகுபடியே நல்லது என்பது தெரிய வந்தது.
அதே நேரத்தில் கோடை காலத்தில் எங்கள் பகுதியில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் வெப்ப நிலை அதிகரிக்கும். 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவான வெப்பமே வெப்ப மண்டல காய்கறி பயிர்களுக்கு ஏற்றது. ஆகவே, கோடை காலத்தில் எங்கள் பகுதியில் நிழல் வலையைப் பயன்படுத்தி காய்கறி சாகுபடி செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக புரிந்து கொண்டோம்" என்றார் ஷாலினி.
தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், "இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் குழுக்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடுகள் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற உள்ளன.
மாவட்ட மாநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் சிறந்த ஆய்வுக் குழுக்கள் புதுக்கோட்டை மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வார்கள். மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் 30 சிறந்த குழுக்கள் டிசம்பர் 27 முதல் 31 வரை பெங்களூரில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்பார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT