Published : 24 Nov 2014 12:12 PM
Last Updated : 24 Nov 2014 12:12 PM

மெல்ல.. மெல்ல... தமிழ் இனி படி...- தி இந்து வாசகர் விழாவில் நீதிபதி சத்தியமூர்த்தி பெருமிதம்

'மெல்ல தமிழ் இனி சாகும்…' என்ற பாரதியின் கூற்றை உடைத்தெறியும் வகையில், 'தி இந்து'தமிழ் நாளிதழ் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் 'மெல்ல... மெல்ல... தமிழ் இனி படி...' என வாசிப்பவர்களை ஊக்கப்படுத்தி வருவது சிறப்பு என சேலம் சார்பு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாசகர் திருவிழா தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூரைத் தொடர்ந்து, சேலத்தில் சோனா கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று வாசகர் திருவிழா நடந்தது.

இந்த விழாவில் சேலம், சார்பு நீதிபதி சத்தியமூர்த்தி பேசியதாவது: 'தி இந்து'வாசகர் திருவிழாவுக்கு 'எழுத்து' அழைத்ததால் நாம் இங்கு கூடி வந்துள்ளோம். தமிழகத்தில் 1882-ம் ஆண்டு முதன்முதலில் வாசிப்பு களம் உருவானது. தமிழகத்தில் 1882-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை பல்வேறு பத்திரிகைகள் வெளியாகி வாசிப்பு களத்துக்கான கட்டமைப்பை ஏற்படுத்தின.

கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் வாசிப்பு களம் அற்றுபோய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழர்களுக்காக, தமிழ் மொழியில் நல்ல வாசிப்பு களத்தை உருவாக்கிடும் வகையில், 2013-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி 'தி இந்து'தமிழ் நாளிதழ் தொடங்கியது. இதனால், வாசிப்பு களம் தமிழகத்தில் அற்றுப்போகும் என்ற அச்சம் நீங்கியது. நான் மாணவனாக இருந்தபோது, ஆங்கிலம் தெரிந்துகொள்ள 'தி இந்து'ஆங்கிலம் படி என்றனர். தமிழ் தெரிந்துகொள்ள 'தி இந்து'தமிழ் படியுங்கள் என இப்போது அனைவரிட மும் கூறி வருகிறேன். தமிழ் புலமை மட்டுமல்லாமல் ஆங்கிலப் புலமையை வளர்க்கும் விதமாக 'வெற்றிக்கொடி'யில் கட்டுரை வெளியிட்டு, இருமொழி வளமையை 'தி இந்து'தமிழ் வளர்த்து வருவது பாராட்டுக்குரியது.

'மெல்ல தமிழ் இனி சாகும்…' என்ற பாரதியின் கூற்றை உடைத்தெறியும் வகையில், 'தி இந்து' தமிழ் நாளிதழ் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் 'மெல்ல... மெல்ல... தமிழ் இனி படி...' என வாசிப்பவர்களை ஊக்கப்படுத்தி வருவது சிறப்பு. 'தி இந்து' தமிழில் நடுப்பக்கத்தில் மெல்ல தமிழன் இனி.. என்ற கட்டுரை குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் படும்பாட்டை அப்பட்டமாக விளக்கி, பலரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடக்கூடிய நல்ல வழிகாட்டியாக உள்ளது. இதுபோன்று நல்ல பல கட்டுரைகளை வெளியிட்டு, பொதுமக்களுக்கு உற்ற தோழனாக வும், வழிகாட்டும் ஆசானாகவும் விளங்க வேண்டும்.

நான் முன்வைக்கும் கோரிக்கை

ஓய்வுபெற்ற முதியோர்களுக்கு நோய் தீர்க்கும் முறை, ஆரோக்கியம் மேம்பட முதியோர் பகுதியை தொடங்க வேண்டும். வேலைவாய்ப்பு செய்திகளை அதிகரிக்க வேண்டும். குழந்தைகளுக்கான தனிப்பகுதியை வெளியிட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியை 'தி இந்து' குழுமத் தின் பொது மேலாளர் வி.பாலசுப்பிர மணியன் தொகுத்து வழங்கினார். 'தி இந்து'நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றுப் பேசினார். 'தி இந்து' நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் ஏற்புரை வழங்கினார். விற்பனைப் பிரிவு மண்டல மூத்த மேலாளர் (சேலம்) எம்.ஜெகதீஷ் குமார் நன்றி கூறினார்.

'தி இந்து' தமிழ் வாசகர் திருவிழாவை லலிதா ஜூவல்லரி நிறுவனம், ராமராஜ் காட்டன் வேஷ்டி கள்,  கிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சி புரம் எஸ்.எம். சில்க்ஸ், கோல்டு ரே ரெசிடென்ஸி, தியாகராஜா பாலிடெக் னிக், லேனா டிஜிட்டல் ஸ்டூடியோ இணைந்து நடத்தின. 'தி இந்து'தமிழ் வெளியீடுகளான பொங்கல் மலர், ஆடி மலர், தீபாவளி மலர், 'தி இந்து' ஆங்கில வெளியீடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

'தி இந்து'வும் வாசகர்களும் ஒரே குடும்பம்

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது:

செய்திகளை மட்டுமே சுமந்து வரும் வாகனமாக எங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. செய்தித்தாள் என்பதைவிட நாளிதழ் என்ற அடையாளத்தையே விரும்புகிறோம். சிந்தனையை தூண்டும் வகையில் புது எண்ணங்கள் பூக்கும் மலராக 'தி இந்து' நாளிதழை கொண்டு வந்தோம். பல்வேறு விஷயங்களை தாங்கிவரும் பெட்டகமாய், களஞ்சியமாய் 'தி இந்து' இதழைக் கொண்டு வந்தோம்.

ஒரே ஆண்டில் மிகப்பெரும் இடத்தை 'தி இந்து'வுக்கு அளித்திருக்கிறீர்கள். ஆசிரியர் குழுவும், வாசகர்களும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்ப உறுப்பினர்களில் சிலரிடம் குறைகள் இருந்தால் உரிமையோடு, உண்மையான அக்கறையோடு, தயங்காமல் சுட்டிக்காட்டி அதை நிவர்த்தி செய்வதுபோல, வாசகர்கள் 'தி இந்து'வின் குறைகளையும் சுட்டிக் காட்டி வருகின்றனர். அதன்மூலம் இதழில் இருந்த குறைகளையும் மாற்றிக் கொண்டே வருகிறோம். இன்று லட்சக்கணக்கான வாசகர்கள் மனதில் 'தி இந்து' நிலைத்திருக்க நீங்கள் தந்த ஆலோசனைகளும் ஒரு முக்கிய காரணம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x