Published : 29 Jun 2019 04:13 PM
Last Updated : 29 Jun 2019 04:13 PM
கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் 2019-ன் காலிறுதியில் அர்ஜெண்டினா அணி வெனிசூலாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் 2007-க்குப் பிறகு பிரேசில் அணியை சந்திக்கத் தயாராகி உள்ளது.
ஆட்டம் முழுதும் மெஸ்ஸியைச் சூழ்ந்து வீரர்களை வெனிசூலா நிறுத்தியதால் வெனிசூலா அணியினால் முதல் பாதியில் தாக்குதல் ஆட்டம் முடியவில்லை, அதனால் முதல் பாதியில் அர்ஜெண்டினா கோல் பக்கம் வெனிசூலா ஊடுருவ முடியாமல் போனது.
அர்ஜெண்டினாவின் லவ்தாரோ மார்டினேஸ் 10வது நிமிடத்திலும் கியோவனி லோ செல்சோ 75வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர். கேப்டன் லியோனல் மெஸ்ஸி கார்னர் ஷாட்டை உள்ளே செலுத்த செர்ஜியோ அகுயெரோ அடித்த ஷாட்டை பின் உதை மூலம் கோலாக்கினார் மார்டினேஸ்.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் வெனிசூலா அணியினர் தொடர் தாக்குதல் நடத்தி அர்ஜெண்டினா வயிற்றில் புளியைக் கரைத்தனர், ரொனால்டோ ஹெர்னாண்டஸ் அடித்த கோல் ஷாட்டை கோல் கீப்பர் அர்மானி தடுத்ததால் சமன் செய்யும் வாய்ப்பு பறிபோனது.
தொடர்ந்து வெனிசூலா தாக்குதல்களை நடத்த இடையில் 74ம் நிமிடத்தில் அர்ஜெண்டின வீரர் கியோவானி லொ செல்சோ தளர்வான பந்து ஒன்றை கோலாக மாற்றினார், ஆனால் இம்முறை வெனிசூலா கோல் கீப்பர் ஃபாரினேஸ் பிடிக்கக் கூடிய பந்தை பிடிக்காமல் தவறவிட்டார்.
1975 கோப்பா அமெரிக்கா போட்டித் தொடரில் வெனிசூலா, அர்ஜெண்டினாவிடம் 11-0 என்ற கோல் கணக்கில் தோற்ற வரலாறு உள்ளது. அதன் பிறகு கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே வெனிசூலா அணி கால்பந்தாட்டத்தில் ஒரு தவிர்க்க முடியா சக்தியாக உருவானது.
3 மாதங்களுக்கு முன்புதான் வெனிசூலா அணி அர்ஜெண்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.
இடைவேளைக்கு முன்பாக அர்ஜெண்டினா கோல் பகுதிக்குள் நுழைய முடியாமல் போனதால் வெனிசூலாவின் வாய்ப்புகள் சிக்கலானது. பிரேசில் அணியை 2007-க்குப் பிறகு நாக் அவுட்டில் சந்திக்கிறது அர்ஜெண்டினா. கடந்த முறை 3-0 என்று அர்ஜெண்டினா தோற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT