Last Updated : 29 Jun, 2019 01:31 PM

 

Published : 29 Jun 2019 01:31 PM
Last Updated : 29 Jun 2019 01:31 PM

சாலை விதிகளை பின்பற்ற ‘மீம்ஸ்’ மூலமாக விழிப்புணர்வு: மேற்கு மண்டல போலீஸாரின் நற்செயல்களுக்கு மக்கள் வரவேற்பு

வாகன ஓட்டுநர்களே சாலை விதிகளை பின்பற்றுங்கள் என்று, ‘மீம்ஸ்’ மூலமாக மேற்கு மண்டல காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ள செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவை முக்கிய தகவல் தொடர்பு சாதனங்களாக இருந்தன. ஆனால், தற்போது எந்த இடத்தில் எந்த சம்பவங்கள் நடந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் ஸ்மார்ட் செல்போனில் முகநூல், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரிந்துவிடுகிறது.

நவீன தொழில் நுட்பங்களின் வளர்ச்சியை உணர்ந்தே, கடந்த டிசம்பர் இறுதியில் தமிழக காவல்துறையில் ‘சோஷியல் மீடியா செல்’ (சமூக ஊடகப் பிரிவு) என்ற பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது.

கோவை மேற்கு மண்டல போலீஸார் சார்பில், சோஷியல் மீடியா செல் மூலமாக போக்கு வரத்து, சட்டம் ஒழுங்கு, குற்றம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் பொதுமக்கள் அறியும் வகையில் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக, பொதுமக்களை எளிதில் ஈர்க்கும் வகையில், திரைப்படங்களில் வரும் சில பிரத்யேக, பிரபலமடைந்த காட்சிகளை வைத்து முகநூல் பக்கத்தில் ‘மீம்ஸ்’ வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

‘‘கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்ட மாட்டேன்’’ என நடிகர் கவுண்டமணி சொல்வதுபோலும், ‘ஹெல்மெட் போடாமல் இவ்வளவு வேகமாக போகக்கூடாது’’ என சிறுவன் அழுவதுபோலும், ‘மங்காத்தா அஜீத்தே ஹெல்மெட் அணிந்துதான் வண்டி ஓட்டுகிறார்’ என நடிகர் யோகிபாபு கூறுவது போலும் மீம்ஸ்கள் பகிரப் படுகின்றன.

இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கே.பெரியய்யா கூறும்போது, ‘கோவை மேற்கு மண்டல காவல்துறையின் சோஷியல் மீடியா செல் மூலமாக பொதுமக்களுக்கு பயன் தரும் பல்வேறு தகவல்கள் பகிரப்படுகின்றன. சாலை போக்குவரத்து விதிகள் குறித்தும், குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பாகவும், திருட்டில், நகைப் பறிப்பில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், சைபர்-குற்றங்கள் தடுப்பது தொடர்பாகவும் பல்வேறு வகைகளில் ‘மீம்ஸ்’கள் மூலமாக எச்சரிக்கை, விழிப்புணர்வு வாச கங்கள் வெளியிடப்படுகின்றன' என்றார்.

2,500 மீம்ஸ்கள் பதிவேற்றம்

மேற்கு மண்டல ‘சோஷியல் மீடியா செல்’ பிரிவின் காவல் உதவி ஆய்வாளர் கே.ரோஜினா பானு கூறும்போது, ‘மேற்கு மண்டல காவல்துறை தலைவர் உத்தரவின்பேரில், சோஷியல் மீடியா செல் பிரிவு மூலமாக முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு கருத்துகள் பகிரப்படுகின்றன. மேற்கு மண்டல சோஷியல் மீடியா செல் முகநூல் பக்கத்தை 10 ஆயிரம் பேர் பின்பற்றுகின்றனர். தினசரி 7 முதல் 10 மீம்ஸ்கள் பதிவேற்றப்படுகின்றன. கடந்த 6 மாதங்களில் சுமார் 2,500 படங்கள் ‘மீம்ஸ்களாக’ பதிவேற்றப்பட்டுள்ளன.

இதேபோல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாகவும், முதியவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும், மழைநீர் சேகரிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ‘மீம்ஸ்’ மூலமாக கருத்துகள் வெளியிடப்பட்டு பகிரப்படுகின்றன. மேற்கு மண்டல போலீஸாரின் நற்செயல்களும் பகிரப்படுகின்றன. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்புள்ளது. நாங்கள் பதிவிடும் மீம்ஸ்கள் பலரால் பகிரப்படு கின்றன'’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x