Published : 30 Aug 2017 10:05 AM
Last Updated : 30 Aug 2017 10:05 AM

வைஷாலி மறுபிறவி எடுத்த உண்மைக் கதை 2: டாக்டர்.. டாக்டர்!

ஜூ

ன் 7, 2017... புதன்கிழமை காலை.

கட்டிட வேலையின்போது விபரீத விபத்துக்குள்ளான 18 வயது வைஷாலிக்கு விடிவு தேடி, குஜராத்தில் இருந்து சென்னை வந்த அந்த குடும்பத்தை இன்று மறுபடியும் வரச் சொல்லி அனுப்பியிருந்தோம். முகச் சீரமைப்பு நிபுணர் எஸ்.எம்.பாலாஜியின் உதவியாளர் தனலட்சுமியிடம் ஏற்கெனவே பேசி ‘அப்பாயின்ட்மென்ட்’ வாங்கி இருந்தேன். மதியம் 12 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள அவரது மருத்துவமனைக்குச் சென்றோம். வைஷாலியும் அவரது தாய் மற்றும் சகோதரரும் நேற்றைவிட இன்று கூடுதல் படபடப்புடன் இருந்தார்கள்.

முதலில் உதவியாளர் தனலட்சுமி பார்த்தார். முழுதாக விவரங்களைக் கேட்டுக் கொண்டவர், ஸ்கேன் எடுத்துவரச் சொன்னார். ஸ்கேன் ரிப்போர்ட்டை அவர் மருத்துவர் குழுவிடம் ஒப்படைக்க, அதை முழுமையாக ‘ஸ்டடி’ செய்த மருத்துவர் குழு, வைஷாலியை நீண்ட நேரம் பரிசோதித்தது.

மருத்துவர்கள் விசாரித்துக் கொண்டிருந்தபோதுதான், ஒரு விழி சாதாரணமாகத் திறந்தே இருந்தாலும், அதிலும் வைஷாலிக்குப் பார்வை கிடையாது என்று தெரிந்துகொண்டோம்.

இடைப்பட்ட நேரத்தில் மருத்துவர் பாலாஜியிடம் பேசினேன். வைஷாலி குறித்த விவரங்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.

‘‘வசதி இல்லாதவர்களுக்கும் மருத்துவ உதவி போய்ச் சேர வேண்டும் என்பதில் எப்போதுமே கவனமாக இருப்போம். இருந்தாலும், முகச் சீரமைப்பு போன்ற மிகப் பெரிய, சிக்கலான அறுவை சிகிச்சைகளில் எனது நேரம் மட்டுமின்றி.. மயக்கவியல் நிபுணர் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட வேறு பல செலவுகளும் இருக்கிறது. இருந்தாலும், ‘தி இந்து’ முன்னெடுக்கும் நல்ல காரியம் இது என்பதால், அறுவை சிகிச்சைக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்’’ என்றார் பாலாஜி.

‘‘சிகிச்சையின் முதல்கட்டமாக வைஷாலியின் வாயைத் திறப்பதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். வாயின் மேல் அண்ணத்தில் ஏற்பட்டுள்ள பெரிய இடைவெளியை அடைக்க வேண்டும். அதற்கு அவரது தொடையில் இருந்து திசுக்களை எடுத்துப் பயன்படுத்த வேண்டும். அதற்குப் பின்னரே முகச் சீரமைப்பைத் தொடங்கமுடியும்’’ என்று வைஷாலியின் தாயிடம் நிலைமையை விளக்கினார் இந்தி தெரிந்த ஒரு மருத்துவர்.

‘இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகுமோ? பணத்துக்கு எங்கே போவது?’ என்ற கவலை அப்பட்டமாகத் தெரிந்தது வைஷாலியின் தாய், அண்ணன் முகங்களில். மருத்துவரிடம் நான் மெதுவாக, ‘‘உங்கள் தலைமை மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி நல்லெண்ண அடிப்படையில் கட்டணம் இல்லாமலே சிகிச்சை மேற்கொள்ள முன்வந்திருக்கிறார். அதையும் மீறி மருந்து, மாத்திரை உள்ளிட்ட செலவுகள் இருந்தால் ‘தி இந்து’ வாசகர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதையும் வைஷாலி குடும்பத்தினரிடம் சொல்லிவிடுங்கள்’’ என்றேன்.

மருத்துவர் சொல்லச் சொல்ல, அவர்களது முகம் தெளிய ஆரம்பித்தது.

‘விரைவில் அறுவை சிகிச்சைக்கான தேதியைத் தெரிவிக்கிறோம்’ என்று கூறிய மருத்துவர்கள், ‘தேவைப்படும்போது அழைக்கிறோம்’ என்று எங்களை அனுப்பிவைத்தனர்.

அங்கிருந்து கிளம்பும்போது, அவர்கள் முகத்தில் மறுபடியும் கவலையின் தடங்கள். ‘‘என்ன பிரச்சினை?’’ என்று நான் ஆங்கிலத்தில் கேட்க, உடைந்த ஆங்கிலத்தில் அவர்கள் சொன்னது இதுதான்... ‘‘ஆயிரம்விளக்கு பகுதியில் நாங்கள் தங்கியிருக்கும் விடுதியில் தினசரி வாடகை ரூ.800. இன்னும் எத்தனை நாட்கள் தங்க வேண்டியிருக்கும்? கடனாக வாங்கிவந்த காசும் கிட்டத்தட்ட கரைந்துபோய்விட்டது...!’’

சிகிச்சைக்கு வழி செய்தாகிவிட்டது. அவர்கள் உண்ணவும், தங்கவும் என்ன செய்வது? நான் கைந்து நாட்களுக்குள் முடிந்ததைச் செய்வதாகச் சொல்லி மூவரையும் அனுப்பிவைத்தேன். கண்களைத் துடைத்துக்கொண்டு, கையசைத்துவிட்டுச் சென்றார்கள்.

ஜூன் 8, 2017.

அன்றாட பரபரப்புக்கிடையே, ஆசிரியர் குழு இதற்கென சில நிமிடங்கள் கூடியது. ‘‘முதலில் இந்த குடும்பத்தின் நிலை பற்றி ‘தி இந்து’ இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதுவோம். அவசரத் தேவைக்கு வாசகர்கள் நிதி அனுப்ப வாய்ப்பு உண்டு. ஆனாலும், மாதக்கணக்கில் இவர்கள் சென்னையில் தங்கவும், உணவுச் செலவுக்கும் வேறு ஏதாவது வழி யோசிப்போம்’’ என்ற யோசனை ஏற்கப்பட்டது. அவர்களுடனான மொழிப் பிரச்சினை பற்றியும் பேச்சு வந்தது. அத்தனைக்கும் ஒரே தீர்வாக, இணையதள ஆசிரியர் ஒரு யோசனையை முன்வைத்தார்.

30ChRGN_Vaishali-2குஜராத்தி மண்டல் உறுப்பினர் நரேந்திரா

‘‘சென்னைவாழ் குஜராத்திகள் சங்கத்திடம் பேசிப் பார்க்கலாமே!’’

அப்படித்தான் சென்னை ‘ஸ்ரீ குஜராத்தி மண்டல்’ உறுப்பினர் நரேந்திராவின் அறிமுகம் கிடைத்தது.

வைஷாலியின் வேதனைக் கதையைக் கேட்டதும் உருகிப்போனவர், உடனே அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்தார். வெகுநேரம் அவர்களுடன் பேசியவர், ‘‘குஜராத்தைச் சேர்ந்தவன் என்றாலும் இங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்பவன் நான். அங்கிருந்து ஏதோ ஒரு நம்பிக்கையில் தமிழகம் வந்தவர்களுக்கு ‘தி இந்து’ சார்பில் உதவ முன்வந்திருக்கிறீர்கள். பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய அறுவை சிகிச்சைக்கு டாக்டர் பாலாஜி கட்டணம் வேண்டாம் என்று சொல்கிறார். அப்படியிருக்க, நானும் எங்கள் குஜராத்தி சங்கமும் கட்டாயம் ஏதாவது செய்ய வேண்டும். அந்தப் பெண் பூரணகுணமாகி, அவள் வாயாலேயே டாக்டருக்கும் ‘தி இந்து’வுக்கும் நன்றி சொல்லும்வரை, தங்கும் இடத்துக்கும் உணவுக்கும் நான் பொறுப்பு’’ என்று சொல்லி நெகிழவைத்தார் நரேந்திரா.

ஜூன் 10, 2017.

நரேந்திராவிடம் இருந்து போன்... ‘‘பாரிஸ் கார்னரில் இருக்கும் குஜராத்தி மண்டல் வளாகத்திலேயே வைஷாலி குடும்பத்தினர் தங்க ரூம் ரெடி பண்ணிருக்கோம், அங்க இருக்கற கேன்டீன்லயே அவங்க செலவில்லாம சாப்பிட்டுக்கலாம். என்னால முடிஞ்ச பணத்தையும் அவங்க கையில் கொடுத்திருக்கேன்; சில குஜராத்தி நண்பர்கள், சொந்தக்காரங்ககிட்டயும் சொல்லிருக்கேன்’’ என்றார்.

‘பெண்ணே... நல்ல உள்ளங்களின் ஆதரவு அடுத்தடுத்து உனக்குக் கிடைக்கிறது. நீ நிச்சயம் குணமாவாய், அதுவும் சீக்கிரமாகவே..!’ என்று என்னுள் ஒரு குரல் ஒலித்தது.

டாக்டர் பாலாஜி ஏற்கெனவே சொல்லியிருந்த இன்னொரு முக்கியமான விஷயத்தை அடுத்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ‘‘இது சிக்கலான அறுவை சிகிச்சை. வாயே திறக்க முடியாதவருக்கு அனஸ்தீஷியா கொடுப்பது பெரும் சவால். அறுவை சிகிச்சையின் முடிவு நம் கைமீறியும் போகலாம். சட்ட சிக்கல்கள் எழுந்தால் என்ன செய்வது?’’

மறுபடி ஒரு விவாதம் எங்கள் ஆசிரியர் குழுவில்..!

- பயணம் தொடரும்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x