Published : 08 Aug 2017 10:44 AM
Last Updated : 08 Aug 2017 10:44 AM

சிலிக்கானில் கலைவண்ணம் கண்ட சிற்பி: கலாம் மணிமண்டபத்தில் ஓவியம், சிற்பம் படைத்த ஏ.பி.ஸ்ரீதர் நேர்காணல்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மணிமண்படம் ராமேசுவரத்தில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தால் (டிஆர்டிஓ) ரூ.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த மணிமண்டபத்தை பிரதமர் மோடி கடந்த 27-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதைத் தொடர்ந்து, தினமும் ஏராளமானோர் வந்து கலாம் மணிமண்டபத்தைப் பார்த்தவண்ணம் உள்ளனர். அங்கு வைக்கப்பட்டுள்ள தத்ரூப கலாம் சிலை, கண்ணைக் கவரும் பிரம்மாண்ட கலாம் ஓவியங்கள் அருகே நின்று பலரும் ஆசையோடு புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறுகிறார், அந்த சிலிக்கான் சிலைகள், ஓவியங்களை உருவாக்கிய கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர். அவருடன் ஒரு நேர்காணல்..

கலாம் ஓவியங்கள், சிற்பங்களை உருவாக்கும் எண்ணம், வாய்ப்பு உங்களுக்கு எப்படி வந்தது?

கலாமுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற ஒரு தந்திரக் கலை ஓவியத்தை, அவரது பேரன் ஷேக்குக்கு செய்துகொடுத்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. கலாம் மணிமண்டபத்தில் உங்கள் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்றார். மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட போது, இப்பணிகளை மேற்கொண்ட பாதுகாப்புத் துறைக்கு என் பெயரைப் பரிந்துரை செய்தார். கர்னல் சோபே என்பவர்தான் அதற்குத் தலைமை. அவருடன் இருந்து பணிபுரிந்து ஒட்டுமொத்தப் பணிகளையும் முடித்துக் கொடுத்தோம்.

மொத்தம் எத்தனை ஓவியங்கள் வரைந்தீர்கள்?

கலாமின் 8,000 புகைப்படங்களில் இருந்து 95 புகைப்படங்களைத் தேர்வு செய்து அதை அப்படியே ஓவியமாக வரைந்தேன். மணிமண்டபத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து ஓவியங்களும் நான் வரைந்தவை. இது தவிர, 2 சிலிக்கான் சிலை களையும் செய்தேன்.

இப்பணிகளை முடிக்க எத்தனை நாட்கள் ஆனது?

என்னோடு சேர்ந்து 12 பேர் கொண்ட அணி சுமார் இரண்டரை மாதங்களாகப் பணிபுரிந்தோம். டெல்லி ராஷ்டிரபதி பவனில் கலாம் எப்படி இருந்தாரோ, அப்படியே தத்ரூபமாக அந்த இடம்போலவே வடிவமைத்துள்ளோம். அவர் நின்றுகொண்டிருப்பதுபோன்ற சிலையையும் வடிவமைத்துள்ளேன்.

இந்த ஓவியங்களும், சிலைகளும் பிரமாதமாக இருப்பதாக, பிரதமர் மோடி வியந்து பாராட்டினார். 2 சிலிக்கான் சிலைகளுடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ‘‘இப்பணிகளை இவ்வளவு அழகாக, விரைவாகச் செய்து முடித்தவர்களுக் காக, எழுந்து நின்று கைதட்டுங்கள்’’ என்றவுடன், சுமார் 40 ஆயிரம் பேரும் எழுந்து நின்று கைதட்டியது, வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x