Last Updated : 19 Aug, 2017 10:21 AM

 

Published : 19 Aug 2017 10:21 AM
Last Updated : 19 Aug 2017 10:21 AM

அப்போ பாட்டு.. இப்போ ‘கபடி.. கபடி’- சின்னத்திரை தொகுப்பாளர் பாவனா நேர்காணல்

வி

ஜய் தொலைக்காட்சியில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் பாவனா, தற்போது ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ தமிழ் சேனல் ஒளிபரப்பும் ‘புரோ கபடி லீக்’ விளையாட்டு நிகழ்ச்சியின் வர்ணனையாளராகப் பொறுப்பேற்று இருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்..

பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் இருந்து திடீரென விளையாட்டு நிகழ்ச்சிக்கு மாறியிருக்கிறீர்களே?

எனக்கே இது ஆச்சர்யம்தான். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்ல இருந்து இப்படி ஒரு வாய்ப்பு வருதுன்னு வீட்டுல சொன்னதும், ‘‘உனக்கும் ஸ்போர்ட்ஸுக்கும் சம்பந்தமே இல்லையே?’’ன்னு சிரிச்சாங்க. ஏன்னா, நானும் எப்பவாவது கிரிக்கெட் மேட்ச் பார்க்குறதோட சரி. மற்றபடி ஸ்போர்ட்ஸ்ல பெரிசா ஒண்ணும் ஈடுபாடு இல்லாமதான் இருந்தேன். ஆனா, ‘புரோ கபடி லீக்’ போட்டி வர்ணனையாளராக வாய்ப்பு தேடி வந்ததும், ‘நாம ஏன் பண்ணக்கூடாது?’ என்ற நம்பிக்கை வந்தது. பொழுதுபோக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மட்டும்தான் பெண் தொகுப்பாளர்கள் வழங்க வேண்டுமா என்ன? அதை மாற்றிக் காட்டுவோமே என்ற ஆர்வம் தான் அந்த வாய்ப்பை எதிர்கொள்ள வைத்தது.

இந்த நிகழ்ச்சிக்காக கடும் பயிற்சி எடுத்துக்கிட் டீங்களாமே?

ஆமா. பாடப் புத்தகத்தைவிட கஷ்டம். பள்ளி, கல்லூரி தேர்வு நடக்கும்போதுகூட நான் இவ்ளோ கஷ்டப்பட்டதில்லை. லீக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சென்னையில் சச்சின், கமல் சார் எல்லாம் கலந்துகிட்ட ‘தமிழ் தலைவாஸ்’ கபடி குழுவோட அறிமுக விழாவில்கூட என்னால கலந்துக்க முடியலை. மும்பையில நிகழ்ச்சி வர்ணனைக்காக தீவிர பயிற்சியில இருந்தேன். தினமும் 12 மணி நேரம் பயிற்சி எடுத்துக்கிட்டேன். கபடி பற்றி படிச்சு தெரிஞ்சுக்க நிறைய நேரம் தேவைப்பட்டது. இதுக்கெல்லாம் ஒரே காரணம், 8 வருஷத்துக்கு மேல ரியாலிட்டி சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்குகிறேன். அதில் இருந்து வித்தியாசமான வேறு களத்துக்குச் செல்லப்போகிறேன். அதுவும் எல்லோரையும் கவரும் விதமாக இருக்க வேண்டும். கொஞ்சம்கூட சொதப்பல் நடந்துவிடக்கூடாது என்ற கவனமும், ஆர்வமும்தான் என்னை இந்த அளவுக்கு உழைக்க வைத்தன.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆங்கில சேனலிலும் வர்ணனை செய்கிறீர்களே?

தமிழ் நிகழ்ச்சியை அழகா பண்ண முடியும் என்ற நம்பிக்கையை சேனல் தரப்புக்கு கொடுத்த பிறகு அவர்களே ஸ்டார் போர்ட்ஸ் ஆங்கில சேனலிலும் லைவ் போட்டியை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். இது உலக அளவில் எனக்கு பெரிய ரீச் கொடுத்திருக்கு. வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப நண்பர்கள் பார்த்துட்டு பாராட்டினாங்க. ஒரு தமிழ்ப் பொண்ணு இவ்வளவு பெரிய விஷயம் செய்றது ஆச்சர்யம்னு இப்பவும் பாராட்டுகள் குவியுது. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. மிகுந்த நம்பிக்கை வச்சு ரிஸ்க் எடுத்ததும், கடின உழைப்புமே இதற்கு காரணம்.

கிரிக்கெட் வர்ணனைக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?

பரவலா நன்கு அறிமுகமான விளையாட்டு கிரிக்கெட். பிட்ச், பவுலிங், கேச், பவுண்டரி என்பதெல்லாம் சாதாரண மக்களுக்குகூட தெரியும். எனவே, அதை எளிதாக வர்ணனை செய்துவிடலாம். சில இடங்களில் தவறு நேர்ந்தாலும் சமாளிச்சுடலாம். கபடி அப்படி இல்லை. ஒவ்வொரு புள்ளியையும் நேர்த்தி யாக கடக்க வேண்டும். எதையும் தவறாக கூறமுடியாது. இந்த எல்லைக் கோட்டில் இருந்தால் என்ன? இந்தப் புள்ளியைத் தாண்டினால் எவ்வளவு மார்க்? இப்படி எல்லாவற்றையும் தெளிவாக, சரியாக சொல்லணும். அதனால்தான் பயிற்சியும் கடினமாக இருந்தது.

தொகுப்பாளினி டிடி சினிமாவுக்கு வந்துட்டாங்க. நீங்க எப்போ?

ஹீரோ வில்லனாவது, வில்லன் ஹீரோவாவது என்பது போன்ற மாற்றங்கள் சினிமாவில் மட்டும் தான் நடக்கணுமா?

சின்னத்திரையில பொழுதுபோக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்போர்ட்ஸ் பக்கம் போகக்கூடாதா? அப்படி ஒரு மாற்றத்தைக் காட்ட வேண்டும் என்றுதான் இங்கு வந்தேன். அதுவும், பெண் தொகுப்பாளர் என்றால் ஒரே மாதிரி பாட்டு, டான்ஸ் மட்டும்தான் என்ற பிம்பத்தை உடைக்க வேண்டும் என்ற ஆர்வமும்தான் காரணம். இப்படித்தான் என் கேரியரை வளர்ப்பேன். எனக்கு எப்போதுமே நடிப்பு மீது ஆர்வம் வந்ததில்லை. இனியும் வராது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x