Published : 05 Jul 2017 08:39 AM
Last Updated : 05 Jul 2017 08:39 AM
காதோலை கம்மல் - நீலகிரி மலையில் வசிக்கும் பனியர் இனத்து பழங்குடி மக்கள் வண்ணமயமாய் அணியும் பாரம்பரியக் காதணி இது. நகரத்தின் பகட்டு நாகரிகம் துரத்தினாலும் பனியர் இனத்து பெண்களில் சிலர் மட்டும் இன்னமும் இந்தக் காதோலை கம்மலை மறக்கவில்லை!
தென் மாவட்டத்துப் பாட்டிகள் காதில் தண்டட்டி அணிவது போல் நீலகிரியின் பந்தலூர், கூடலூர், எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பனியர் இனத்து பழங்குடி பெண்கள் இந்தக் காதோலை கம்மலை அணிகிறார்கள். இவர்களின் பேச்சு நம்மை கவர்கிறதோ இல்லையோ, இவர்கள் அணிந்திருக்கும் காதோலை கம்மல், தூரத்தில் இருந்தாலும் நம்மை திரும்பிப் பார்க்க வைக்கும்.
இரண்டு அங்குல விட்டம்
இரண்டு அங்குல விட்டமுள்ள துவாரத்தில் அழகாய் தொங்கும் இந்தக் காதணிகளை எப்படிச் செய்தீர்கள் என கேட்டால், ’’கைதை சக்கைன்னு ஒரு காட்டு மரத்தோட ஓலையை எடுத்துட்டு வந்து தண்ணியில் வேகப்போடு வோம். வெந்ததும் வெளியில எடுத்து காயவெச்சு, மலை தேன் மெழுகைத் தடவி சுருட்டி அதுல பாசிகளை ஒட்டவைப்போம். மூணு நாள்ல நல்லா காஞ்சதும் காதுல எடுத்துப் போட்டுக்குவோம்.’’ - சொல்லிவிட்டு வெட்கத்தால் முகத்தை மூடிக்கொள் கிறார்கள் பிற ஆண்களிடம் பேசக் கூச்சப்படும் பனியர் பெண்கள்.
காது வளர்க்கும் பெண்கள்
காதோலை கம்மல் செய்யும் முறையையும் அதை அணிய பனியர் பெண்கள் காது வளர்க்கும் முறையை யும் பற்றி இன்னும் விரிவாகச் சொன்னார் கூடலூர் பெத்த குரும்பா அசோசியேஷன் தலைவர் மாதன். ’’ஆதிகாலத்து வழக்கப்படி இந்தப் பெண்கள் சாதாரணமா காது குத்திக்குவாங்க. காது துவாரத்தை பெருசாக்கி வளக்குறதுக்காக ஆரம்பத்துல கல்லை வைச்சுக் கட்டிக்கு வாங்க. துவாரம் பெருசானதும் அதுக்கேத் தாப்புல காதோலை கம்மலை செஞ்சு போட்டுப்பாங்க. தேன் மெழுகால மெருகேத்துறதால இந்தக் கம்மல் ஒன்றரை வருசத்துக்கு வரும். அதுக்கப்புறம் அதைத் தூக்கிப் போட்டுட்டு புதுசு போட்டுப்பாங்க. புதுக் கம்மலு முன்னதவிட பெருசா இருக்கும். அதுக்கேத்தாப்புல காது துவாரமும் பெருசாகும்.
முன்பு, இந்தக் கம்மல்களில், காட்டுல கிடைக்கிற சிவப்பு, பச்சைக் கலர் மர விதைகளைத்தான் ஒட்ட வெச்சாங்க. பாசி மணிகள் வந்தபிறகு அதை ஒட்ட ஆரம்பிச்சாங்க. ஆனாலும், சின்னஞ் சிறுசுக இப்ப காதோலை கம்மலை போடுறதில்ல. வயசானவங்க தான் போட்டுக்கறாங்க. மத்தவங்க, தங்கத்துலயும் கவரிங்லயும் கம்மல், மூக்குத்தின்னு மாட்டிக்கிறாங்க.
இன்னும் சிலபேரு, காது குத்தா மலேயே பசை மாதிரி எதையோ காதுல தடவி விதவிதமாக கம்மல் வாங்கி ஒட்ட வெச்சிக்கிறாங்க. நாப்பது அம்பது வருசத்துக்கு முந்தியெல்லாம் காதோலை கம்மல் போடாத பனியர் பெண்களை பார்க்கவே முடியாது. ஆனா இப்ப, நிலைமை மாறிப்போச்சு. இன்னும் பத்திருபது வருசம் போனா, காதோலை கம்மலை மாத்திரமல்ல, அதை போட்டுக்கிற பனியர் பெண்களையும் பார்க்கவே முடியாது போலிருக்கு’’ என்றார் மாதன்.
நாகரிகம் வந்து விழுங்குது
தொடர்ந்து பேசிய நீலகிரி பண்டைய பழங்குடியினர் நலச்சங்கச் செயலாளர் ஆல்வாஸ், ‘‘காதணி அணிவது உடம்புக்கு நல்லதுன்னு அந்தக் காலத்திலேயே ஒரு நம்பிக்கை இருந்திருக்கு. குளிர், காய்ச்சல் வந்துட்டா, எங்காவது அடிபட்டுட்டா, தீ சுட்டுட்டா உடனே காதை இறுகிப் புடிச்சுக்க சொல்லுவாங்க. அப்படிச் செஞ்சா வலி தெரியாது; ரத்த ஓட்டம் தடைபடாது. அப்படித்தான் அந்தக் காலத்துல பனியர்கள் இந்த காதோலை கம்மல் அணியும் வழக்கத்தை வெச்சிருந்திருக்காங்க. ஆனா, நாகரிகம் வந்து இப்ப இதையெல்லாம் மெல்ல விழுங்கிட்டு இருக்கு.
பனியர்கள் மட்டுமில்லை.. அனைத்து பழங்குடி மக்களும் தங்களது தனித்துவ அடையாளங்களை, கலாச்சாரத்தை தொலைச்சிடாம பாதுகாக்கணும்னு தொடர்ந்து சொல்லிட்டு வர்றோம். அதையும் மீறி சில பழக்க வழக்கங்கள் மாறிடுது. முன்பு, பழங்குடிகள் வசிக்கும் ஊருக்குள்ள மத்தவங்க குடியேறவே முடியாது. இப்ப அந்த நிலை மாறும்போது அவங்ககிட்ட இருக்கிற பழக்கங்கள் பழங்குடி மக்களிடமும் பாதிப்பை ஏற்படுத்துது. அப்படித்தான் இந்தக் காதோலை கம்மல் போடுவதையும் பனியர் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வர்றாங்க’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT