Published : 10 Jul 2017 04:31 PM
Last Updated : 10 Jul 2017 04:31 PM

ராஜ்கோட்டில் இருந்து சென்னை வரை 3: இளம்பெண் வைசாலிக்கு உதவிய குஜராத்தி மண்டல் உறுப்பினர்!

விபத்தில் சிக்கிய தன் மகளின் சிகிச்சைக்காக ராஜ்கோட்டில் இருந்து குஜராத், ஆந்திரா, ஹைதராபாத், சென்னை வரை பயணித்த ஒரு மராத்திக் குடும்பத்தின் உணர்ச்சிகரமான உண்மைக் கதை இது.

ஜூன் 10, 2017.

குஜராத்தில் இருந்து இளம்பெண் வைசாலியின் சிகிச்சைக்காக சென்னை வந்த குடும்பத்தினர் பொருளாதார உதவி வேண்டி 'தி இந்து' (தமிழ்) அலுவலகம் வந்திருந்தனர். ஆசிரியர் பண உதவியைக் காட்டிலும் மருத்துவ உதவியே முக்கியம் என்று கூறி இலவச மருத்துவ சிகிச்சைக்கு வழிகோலினார். வைசாலி மற்றும் குடும்பத்தினர் சிரமமில்லாமல் உண்ணவும், தங்கவும் என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

அப்போது ஆசிரியர் ஓர் உபாயம் சொன்னார்.

''என்னதான் நாம் உதவினாலும், குஜராத்திகளின் தொடர்பு இருந்தால் வைசாலி குடும்பத்தினர் எளிதாக, செளகரியமாக உணர்வார்கள். அத்துடன் எங்கிருந்தோ வந்து நம்மிடம் சேர்ந்திருக்கும், அவர்களின் பிரதிநிதிகளாக குஜராத்திகள் சங்கம் இருப்பது நல்லது'

''உண்மைதான் சார். குஜராத்தி சங்கத்தினரிடம் பேசுகிறேன்''

ஆசிரியரிடமே தொலைபேசி எண் வாங்கி, நரேந்திரா என்பவரிடம் பேசினேன்.

குஜராத்தி மண்டல் உறுப்பினரான அவரிடம் நடந்ததை விளக்கினேன். 'அவர்களை நேரில் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்' என்றவர் உடனடியாக வைசாலியின் குடும்பத்தினரைச் சந்தித்தார்.

அவர்களின் நிலையை நேரில் கண்ட நரேந்திரா, நிச்சயம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்தார். உடனடியாக ஆசிரியரைச் சந்திக்க 'தி இந்து' அலுவலகம் வந்தார்.

ஆசிரியரும், நானும் நரேந்திராவிடம் பேசினோம்.

''சார், எங்கோ ஊர், பேர் தெரியாமல் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு உதவ எண்ணுகிறீர்கள். குஜராத்தைச் சேர்ந்தவன் என்றாலும் இங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் நான் அவர்களுக்குக் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்.

அதனால்தான் நேரடியாக அலுவலகத்துக்கே வந்துவிட்டேன். அவர்களுக்கு நிச்சயம் இடம் தயார் செய்து தருகிறேன்'' என்று வாக்களித்துவிட்டுச் சென்றார்.

நாட்கள் சில உருண்டோடின.

வழக்கமான வேலையில் ஈடுபட்டிருந்தபோது போன் அடித்தது.

நரேந்திரா பேசினார்.

''ஹலோ மேடம், வைசாலி ஃபேமிலிக்கு தங்க ஒரு இடம் பாத்தாச்சு, பாரீஸ்ல இருக்கும் குஜராத்தி மண்டல்ல அவங்களுக்கு ரூம் ரெடி பண்ணிருக்கோம், அங்க இருக்கும் கேண்டீன்லயே அவங்க சாப்பிட்டுக்கலாம்'' என்றார்.

அத்தோடு, ''என்னால முடிஞ்ச பணத்தைக் கையில் கொடுத்திருக்கேன்; குஜராத்தி நண்பர்கள்கிட்டயும், சொந்தக்காரங்ககிட்டயும் சொல்லி இருக்கேன், அவங்க மூலமா எதாவது அமவுண்ட் ரெடி பண்ணிக் கொடுக்கலாம்னு யோசிக்கறேன்'' என்றும் நரேந்திரா கூறினார்.

சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது. ''வைசாலி நீ நிச்சயம் குணமாவாய், அதுவும் சீக்கிரமாகவே..!'' என்று உள்ளுக்குள் குரல் ஒலித்தது.

அவசியத் தேவைகளுக்கு வழி செய்தாகிவிட்டது. குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சை அளிக்கும்போது ஏதேனும் சட்ட சிக்கல்கள் எழுந்தால் என்ன செய்ய...?

- பயணம் தொடரும்...

தொடர்புக்கு: 7401297413

உதவ விரும்புவோர்: Acc Name: VAISALI MANOHAR PAWAR

Acc No: 916010031591536,

AXIS BANK (METODA, GIDC), IFSC Code- UTIB0000809.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x