Published : 03 Nov 2014 11:35 AM
Last Updated : 03 Nov 2014 11:35 AM
பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டத்தில், கணிசமான மக்கள் பங்கேற்றிருப்பது அந்நாட்டின் அரசியல் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகப் போராடிவரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ- இன்சாப் மற்றும் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் ஆகிய கட்சிகளுக்கு வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் தாராளமாக நிதியுதவி அளித்துவருகிறார்கள். அத்துடன், சமூக வலைத்தளங்களிலும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களில் பலர், இஸ்லாமாபாத்தில் நடந்த போராட்டங்களிலும் நேரடியாகப் பங்கேற்றனர். பாகிஸ்தான் அரசியலிலும் சமூக மட்டத்திலும் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் தேவை என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதேசமயம், வெளிநாடுகளில் வசிக்கும் இளைய தலைமுறையினர் பலர், தாங்கள் தனிமைப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள். அதுதான், தங்கள் சொந்த நாடுகள்பால் அவர்களை ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது.
மதத்தின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் உருவானது என்பது வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் பொதுவான கருத்து. இஸ்லாமியர் பலர் தங்கள் மதத்தின் மீது ஆழமான பற்றுடன் இருக்கிறார்கள். எனினும், தினமும் தொழுகையில் ஈடுபடாதவர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
தாங்கள் வசிக்கும் நாடுகளின் சமூக மற்றும் கலாச்சாரக் கூறுகள் மிகவும் நவீனமாக இருப்பதை முதல் தலைமுறையாக வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் உணர்கிறார்கள். எனவே, தங்கள் கலாச்சார விழுமியங்களை விட்டுக்கொடுக்காமல், அந்நாடுகளின் சமூக அமைப்புடன் ஒன்றுவதில் அவர்களும் அவர்களது வாரிசுகளும் சங்கடங்களை அனுபவிக்கின்றனர்.
செப்டம்பர் 11 தாக்குதல், லண்டன் நகரக் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களுக்குப் பின்னர், தாங்கள் வசிக்கும் நாடுகளில் இஸ்லாமியர்கள் குறித்த அச்ச உணர்வு ஏற்பட்டிருப்பதையும், அது அந்நாடுகளின் ஊடகங்களில் பிரதிபலிப்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். அவர்களது தனிமை உணர்வுக்கான காரணங்களில் இவையும் அடக்கம்.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் கலாச்சாரம், மதம் ஆகியவற்றுடன் அரசியல்ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருப்பதையே வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் விரும்புகிறார்கள். அவர்களில் பலர் பாகிஸ்தான் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கிறார்கள். சிலர் நேரடியாக அரசியல் களத்தில் பங்காற்றுகிறார்கள். அத்துடன் பொருளாதார வசதி கொண்ட இவர்கள், பாகிஸ்தானில் உள்ள தங்கள் உறவினர்களிடம் நல்ல செல்வாக்கைக் கொண்டிருக்கிறார்கள். எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களில், தங்கள் உறவினர்களிடம் தாக்கம் ஏற்படுத்தவும் அவர்களால் முடிகிறது. அரசியல் கட்சிகள் இவர்களிடம் நெருக்கம் காட்ட இதுவும் ஒரு காரணம்.
அத்துடன் தற்போதைய அரசியல் சூழலில், பாகிஸ்தானில் வசிப்பவர்களின் மனநிலையையே வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களும் பிரதிபலிக்கிறார்கள். எனவே, வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தான் அரசியல் கட்சியினர் இடையிலான உறவு இப்போதைக்கு வலுவிழக்காது என்பதுடன் இருதரப்பும் தங்கள் பரஸ்பர ஆதரவைத் தொடர்வார்கள் என்றே தோன்றுகிறது.
- Dawn - பாகிஸ்தான் நாளிதழ் தலையங்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT