Published : 01 Jul 2017 10:51 AM
Last Updated : 01 Jul 2017 10:51 AM

பறவைகளை பதற வைக்கிறாங்கப்பா..

தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்களை தூர்வாரக் கிளம்பியிருக்கிறார்கள். சரி, நல்ல விஷயம்தான். ஆனால் பறவைகளுக்கான பாது காக்கப்பட்ட ஏரிகளில் கண்மூடித்தனமாக மரம், செடி, புதர்களையும் வெட்டி அகற்றிப் பறவைகளைப் பதற வைப்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது.

பறவைகளுக்கான 47 ஏரிகள்

தமிழகத்தில் 50 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட ஏரிகள் 1,175 உள்ளன. இதுபோன்ற பெரிய ஏரிகளையும், சதுப்பு நிலங் களையும் நோக்கி மட்டுமே பறவைகள் அதிகம் வருகின்றன. காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம், ஆரப்பாக்கம், தூசி மாமண்டூர், கன்னியாகுமரி மணவாளக்குறிச்சி, நெல்லை மேலக்குளம், மதுரை குன்னத்தூர், கோவை சிங்காநல்லூர், கோவைப்புதூர், சூலூர் உட்பட தமிழகத்தின் 47 ஏரிகளை பறவைகள் அதிகம் கூடும் இடங்கள் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்து றையால் அடையாளம் காணப்பட்டுள்ளது. பறவைகளுக்கு முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவை பாதுகாக்கப்பட்ட ஏரிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழக அரசின் குடிமராமத்து அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுவருகின்றன. இதில், பெரம்பலூர், தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ளூர் விவசாயிகளே ஏரிகளை தூர்வாரி வண்டலை எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், சென்னை, காஞ்சிபுரம், விருத்தாசலம், கடலூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளின் பெயரில் தனியார் மண் நிறுவனங்களும் ரியல் எஸ்டேட், செங்கல் சூளை நிறுவனங்களும் ஐந்து அடி வரை தோண்டிக் களிமண், கிராவல் அள்ளி வருகிறார்கள். பறவைகளுக்காகப் பாதுகாக்கப்பட்ட ஏரிகளும் இவர்களின் கையில் சிக்கியிருப்பதாக பதறுகிறார்கள் பறவைகள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுகுறித்து வன உயிரியலாளரும் பறவைகள் ஆராய்ச்சியாளருமான மோகன்குமார் முருகையன் ‘தி இந்து’விடம் கூறுகையில், “ஏரிகள் என்பவை தண்ணீர் பயன்பாட்டுக்கான இடம் மட்டுமல்ல. அவை பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் திகழ்கின்றன. எல்லா நீர்நிலைகளுக்கும் பறவைகள் வந்துவிடாது. அவைகள் வசிப்பதற்கென்று ஏரிகளில் சதுப்பு நிலம், மரம், செடி, கொடிகள், புதர்கள் என இயற்கையான சில அம்சங்கள் இருக்கின்றன.

கண்மூடித்தனமாகத் தூர்வாருகிறார்கள்

ஏரியின் ஆழமான பகுதிகளில் நீர் மூழ்கி பறவை களான நீர்க் காகம், பாம்புத்தாரா, சாம்பல் கூழைக்கடா ஆகியவை வசிக்கும். இந்த பறவைகளுக்கு ஏரிகளின் ஆழமான பகுதிகளில் நீர் மட்டத்துக்கும் மேலே வளர்ந்திருக்கும் நாட்டுக் கருவேலம் உள்ளிட்ட மரங்கள் வாழ்வாதாரங்களாக திகழ்கின்றன. பறவைகளின் முழங்கால் அளவு ஆழம் கொண்ட பகுதிகளில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தைக் குத்தி நாரை, பெரிய கொக்கு ஆகியவை வசிக்கும். கரைகளில் குருட்டுக் கொக்கு, வெள்ளை மார்பு நீர்க் கோழிகளும், கரைகளில் இருக்கும் புதர்கள், நாணல் செடிகளில் தையல் சிட்டுக்கள், சாம்பல் கதிர்க் குருவிகள், தவிட்டுக் குருவிகள் உள்ளிட்டவை வசிக்கும். இந்த மூன்று வகையான அம்சங்களையும் கொண்ட 47 ஏரிகள் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 47 ஏரிகளையும் இப்போது கண்மூடித்தனமாக தூர்வாருகிறார்கள்.

உதாரணத்துக்கு, கோவையில் பேரூர் புட்டுவீக்கி குளம், வெள்ளலூர் குளம், சிங்காநல்லூர் படகுத் துறை குளம், சூலூர் பெரிய குளம், சூலூர் சிறிய குளம், வேடப்பட்டி புதுக்குளம், கோளரம்பதி குளம், நாகராஜபுரம் குளம் ஆகிய எட்டு குளங்களை தனியார் அமைப்புகள் தூர்வாரிவருகின்றன. நாகராஜபுரம் குளத்தில் பொக்லைன் வைத்துக் கிணறு வெட்டுவது போல மண்ணை அள்ளிவிட்டார்கள். வேடப்பட்டி மற்றும் கோளரம்பதி குளங்களில் நாட்டுக் கருவேலம் உட்பட ஏராளமான மரங்களை ஒன்றுவிடாமல் வெட்டிவிட்டார்கள்.

அடுத்ததாக, பாதுகாக்கப்பட்ட ஏரிகளின் பட்டியலில் இருக்கும் சூலூர், சிங்காநல்லூர் ஆகிய குளங்களிலும் இதே போல செய்யவிருக்கிறார்கள். இவ்வாறு செய்வதால் இனி பறவைகள் இந்த நீர் நிலைகளுக்கு வருவது முற்றிலுமாக நின்றுவிடும். தூர்வாருவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால், கண்மூடித்தனமாகத் தூர்வாராமல் பறவைகளுக்கான குளங்களில் அவற்றின் வாழ்வாதாரங்கள் அழிக்கப் படாமல் அறிவியல் பூர்வமாக தூர்வாரப்பட வேண்டும். சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் போன்ற அமைப்புகளுடன் ஆலோசனை பெற்று தூர் வாரினால் மட்டுமே பறவைகளை காக்க முடியும்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x