Published : 13 Jul 2017 11:53 AM
Last Updated : 13 Jul 2017 11:53 AM
மழை பொய்த்ததால், விவசாயம் செய்ய வழியின்றி செக்யூரிட்டி வேலைக்குச் செல்லும் திருச்சி விவசாயி சிவக்குமார், தன் இரு குழந்தைகளின் பள்ளிக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது சிட்டிலாரை கிராமம். அப்பகுதி ஆற்றை ஒட்டி இல்லாததால் எப்போதாவது வந்து நிலம் நனைக்கும் ஆற்று நீரும் அங்கு வருவதில்லை. கிணற்றுப் பாசனத்தையே நம்பியிருக்கும் அக்கிராம மக்கள், மழை இல்லாமல் தங்களின் வாழ்வாதாரம் தொலைத்து நிற்கின்றனர்.
இந்நிலையில் 3-ம் வகுப்பு படிக்கும் மகள் சந்தியா மற்றும் யூ.கே.ஜி. படிக்கும் மகன் கஜேந்திரனின் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கிறார் விவசாயி சிவக்குமார்.
இதுகுறித்து விவசாயி சிவக்குமாருடன் பேசினோம்.
''ரண்டு, மூணு வருசமாவே மழை, மாரி எதுவும் இல்லைங்க. இருக்கற ரண்டரை ஏக்கர் நிலம் இப்போ கட்டாந்தரையா கெடக்கு. அதுசரி குடிக்கிறதுக்குக் கூடத் தண்ணீ இல்லாதப்போ, வெவசாயத்துக்கு மட்டும் எங்கிருந்து வரும்? இருக்கற 1 கேணியும் சுத்தமா வத்திடுச்சு.
அப்போல்லாம் கடலை, சோளம், தக்காளின்னு எப்பவும் தோட்டத்துல பச்சையும், சிவப்புமா பூத்திருக்கும். ஹூம்ம்ம்.. அந்தக் காலமெல்லாம் எப்பத் திரும்பும்னு தெரியல. கூலி வேலைக்குத்தான் போய்ட்டு இருந்தேன். மழை சுத்தமாவே இல்லாததால, இப்போ அதுக்கும் யாரும் கூப்டறதில்லை.
அதனால இப்ப முசிறியில இருக்கும் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனில செக்யூரிட்டி வேலை பார்க்கறேன். சாயந்தரம் 6 மணில இருந்து காலைல 6 மணி வரை வேலை. கிடைக்கிற 5 ஆயிரம் சம்பளம் சாப்பாட்டுக்கே பத்த மாட்டேங்குது. அதனாலதான் இப்படி நிக்கறோம்...'' என்று அமைதியாகிறார்.
சிவக்குமாரின் மனைவி விஜயலட்சுமி பேசும்போது, ''நெலத்துல வெள்ளாமை இல்லாததால எந்த வேலயும் இல்லங்க. அப்போல்லாம் தோட்டத்துல மாடுகளும் வச்சிருந்தோம். நானே பால் கறப்பேன். பால் காசு வந்தாலே போதும். வெளிய வேலைக்கு போக வேண்டியதே இல்லை. அத்தோட ஆடுகளும் கொஞ்சம் இருக்கும். மழை இல்லாம இப்ப எதையுமே பண்ண முடியல.
இப்போ 100 நாள் வேலைக்குப் போறேன். ஆனா அந்த வருமானம் போதலை. அதனால எங்க புள்ளைக படிக்கற ஸ்கூலுக்குப் போயி, எங்க புள்ளைகளை கவர்மெண்டு ஸ்கூல்லயே சேர்த்துக்கறோம்னு சொல்லி சர்ட்டிபிகேட்டைக் கேட்டோம். ஸ்கூல்ல பாப்பாதான் எப்பவும் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கும். அதனால ஸ்கூல்ல நல்லா படிக்கற பொண்ணை ஏன் கெடுக்கறீங்கன்னு திட்டுனாங்க.
'நாங்களே புத்தகம், நோட்டுலாம் கொடுத்துடறோம், ஃபீஸை கொஞ்சம் கொஞ்சமாக் கட்டுங்க. தவணை முறையில டைம் எடுத்துக்கூட கட்டுங்க!' ன்னு சொன்னாங்க. படிக்காம நாமதான் இப்படி ஆகிட்டோம். அவங்களாவது நல்லா இருக்கட்டும்னு நினைக்கிறோம்'' என்று தேம்புகிறார்.
பெயர் | வகுப்பு | தேவைப்படும் பணம் |
சந்தியா | மூன்றாம் வகுப்பு | ரூ. 19,500 |
கஜேந்திரன் | யூகேஜி | ரூ. 15,500 |
விவசாயி சிவக்குமாரைத் தொடர்பு கொள்ள: 9150014221
சிவக்குமாரின் குழந்தைகளுக்கு உதவ:
S Vijayalakshmi, Acc. No: 1778101011234,
IFSC Code: CNRB0001778, Thumbalam, Canara Bank.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT