Published : 13 Jul 2017 10:55 AM
Last Updated : 13 Jul 2017 10:55 AM

பூச்சிகள் இன்றி சுழலாது உலகு!

நீரின்றி அமையாது உலகு என்று நமக்குச் சொல்லித் தந்திருக்கி றார்கள். ஆனால், ‘பூச்சிகள் இன்றி சுழலாது உலகு’ என்று யாராவது சொல்லித் தந்திருக்கிறார்களா? சீக்கிரமே இதைச் சொல்லித்தரப் போகிறது கோவை வேளாண் பல்கலைக்கழகம்!

பூச்சிகளுக்காகவே மிகப் பிரம்மாண்ட மான அருங்காட்சியகம் ஒன்றை உரு வாக்கி இருக்கிறது வேளாண் பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை. ‘பூச்சிகளே அரசர்கள்’ என்ற வரவேற்பு வாசகத்துடன் சுமார் 6 ஆயிரம் சதுர அடியில் பிரச வித்து நிற்கிறது இந்தப் பூச்சிகள் உலகம். அரங்கில் நுழையும்போதே நம்மை வரவேற்கின்றன விதவிதமாய் வகை, வகையாய் பாடம் செய்து வைக்கப்பட்ட லட்சக்கணக்கான பூச்சிகள்.

சகல விவரங்களும் திரையில்..

கண்ணாடிக் கூண்டில் காட்சிப்படுத்தப் பட்டுள்ள பூச்சி குவியல்களுக்கு அருகே போய் நின்றதுமே, அதன் மேல்புறம் உள்ள எல்.இ.டி. திரையில், அந்தப் பூச்சிகளின் வகை, அவற்றின் நன்மை - தீமைகள், அவற்றை எந்தெந்த நாட்டில் பார்க்கலாம் உள்ளிட்ட சகல விவரங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத் தில் வந்து விழுகின்றன. குரலில் கேட்க, ‘ஹெட் ஃபோன்ஸ்’ வசதியும் உண்டு.

உயிர்காக்கும் கரப்பான் பூச்சி

பொதுவாக கரப்பான் பூச்சி என்றாலே நமக்கு அலர்ஜி. ஆனால், அவைதான் பழைய, அழுகிய பொருட் களை எல்லாம் உண்டு சுற்றுப்புறத் தைத் தூய்மைப்படுத்துகிறது. துப்புரவுப் பணியாளர்கள் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்ய அதன் மூடியை திறந் ததுமே உள்ளே கரப்பான் பூச்சிகள் இருக்கின்றனவா என்றுதான் முதலில் பார்ப்பார்கள். அவை இருந்தால் உள்ளே ஆக்ஸிஜன் இருக்கிறது; பயமின்றி இறங்கலாம் என தீர்மானிப்பார்கள். அந்த அளவுக்கு கரப்பான் பூச்சிகள் உயிர்காக்கும் தோழனாக உள்ளது.

வெட்டுக்கிளிகளை ‘பிரேயிங் மேன்டிட்’ என்றும் ‘வயலின் மேன்டிட்’ என்றும் அவைகளின் உருவத்தை வைத்து வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இவை, பூச்சிகளை மட்டுமே பிடித்து உண்ணும். அந்துப்பூச்சிகள் இரவிலும், வண்ணத்துப் பூச்சிகள் பகலிலும் பறக்கும். அளவில் மிகச் சிறிய தேவதைப் பூச்சிகள் குழவியினத்தைச் சேர்ந்தவை. இது, ஒரு பூச்சியின் வயிற்றுக்குள்ளே உயிர் வாழும். அந்தப் பூச்சிக்குள்ளேயே 16 ஆயிரம் முட்டைகள் வரை இடும். முட்டைகள் பொரிக்கும்போது அந்தப் பூச்சியைப் பிளந்து கொண்டு புதிய பூச்சிகள் வெளியில் வரும்.

இப்படிப்பட்ட தகவல்கள் மட்டுமல்ல, பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலக அளவில் வெளிவந்திருக்கும் நூல்கள் எல்லாம் இந்த அருங்காட்சியகத் தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிவாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் பாதுகாப்புடன் உருவாக்கப் பட்டுள்ளது. தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு பெரிய கரையான் புற்றுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பூச்சிகள் நன்மையே செய்கின்றன

‘‘ஒரு ஆலமரத்தில் அறுநூற்றுக்கும் மேற்ப்பட்ட பூச்சி வகைகளும் நெல் பயிரில் தொள்ளாயிரத்துக்கும் அதிக மான பூச்சி வகைகளும் இருக்கு. இதில் நன்மை தரும் பூச்சிகள் எவை தீமை தரும் பூச்சிகள் எவை என இனம் பிரித் துப் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் மருந்தடித்துக் கொல்கிறோம்.

உண்மையைச் சொன்னால், பூச்சிகள் எல்லாமே உயிர்ச் சங்கிலிக்கு ஏதாவது நன்மையைத்தான் செய்கிறது. இதை அனைவரும் அறிந்துகொள்ளவே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட் டிருக்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த அருங்காட்சிய கத்துக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் ஒப்புதல் கிடைத்து பணிகளைத் தொடங்கினோம்.’’ என்கிறார் இதை உரு வாக்கிய குழுவின் தலைவர், பூச்சியியல் துறை பேராசிரியர் கே.குணதிலகராஜ்.

ஆசிரியர் குழுவினர் மாணவர்களுடன் இந்தியா முழுவதும் பயணித்து இந்தப் பூச்சிகளையும் தகவல்களையும் திரட்டி இருக்கிறார்கள். இதற்கு இவர்கள் எடுத்துக் கொண்ட காலம் 6 ஆண்டுகள். அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறக்கப்பட்ட பூச்சிகளின் இந்த பிரம்மாண்ட உலகம், பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்பட விருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x