Published : 18 Jun 2017 02:58 PM
Last Updated : 18 Jun 2017 02:58 PM

சின்ன அண்ணாமலை 10

விடுதலை வீரர், தமிழ் பதிப்பாளர்

சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் பதிப்புலக முன்னோடிகளில் ஒருவருமான சின்ன அண்ணாமலை (Chinna Annamalai) பிறந்த தினம் இன்று (ஜூன் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# காரைக்குடி அருகே உள்ள சிறுவயல் கிராமத்தில் (1920) பிறந்தார். தந்தை அடகுக்கடை வைத்திருந்தார். இயற்பெயர் நாகப்பன். தேவகோட்டை உறவி னர் குடும்பத்துக்கு சுவீகாரம் கொடுக்கப்பட்ட இவருக்கு அண் ணாமலை என்று பெயரிடப்பட்டது.

# தன் வீட்டில் காந்திஜியை நேரில் பார்த்ததால், 9 வயதிலேயே இவரது மனதில் காந்தியமும், தேசப்பற்றும் வேரோடின. 13-வது வயதில் சுதந்திரப் போராட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனந்த விகடனில் கல்கி எழுதிய தலையங்கங்களை மனப்பாடம் செய்து மேடைகளில் பேசி, பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார்.

# ராஜாஜியின் கள்ளுக்கடை மூடல் போராட்டத்துக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், உயர்நிலைப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். படிப் பைத் தொடர்வதற்காக பினாங்கில் இருந்த தாய்மாமனிடம் அனுப்பி வைத்தனர். அங்கு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் குடிப்பழக்கத்தால் சீரழிவதைக் கண்டு வேதனை அடைந்தார்.

# பெண்களை அணி திரட்டி, கள்ளுக்கடைகளுக்கு எதிராகப் போராடி னார். ஆவேசம் கொண்ட பெண்கள், கள்ளுக்கடைகளை தீவைத்துக் கொளுத்தினர். இவர் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்தில் மலேசியாவைவிட்டு வெளியேறவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் நாடு திரும்பினார்.

# 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, போலீஸ் தடையை மீறி தேவகோட்டை பொதுக்கூட்டத்தில் பேச முயன்றார். கைது செய்யப்பட்டு திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு சிறைக் கதவை உடைத்து இவரை விடுவித்தனர்.

# இவரை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காசியில் தலைமறைவாக வாழ்ந்தார். குடும்பத்தினரைத் துன்புறுத்தி, இவரை வரவழைத்தனர் போலீஸார். 5 ஆண்டு கடுங்காவல் சிறைவாசத்தில் பல சித்ரவதைகளை அனுபவித்தார்.

# நாடு விடுதலையடைந்த பிறகு, சென்னை வந்தார். ஏ.கே.செட்டியார், சக்தி வை.கோவிந்தன், வெ.சாமிநாத சர்மா ஆகியோர் ‘தமிழ்ப் பண்ணை’ புத்தக நிலையத்தை இவருக்காக ஆரம்பித்துக் கொடுத்தனர். ராஜாஜி, கல்கி, டி.கே.சி., வ.ரா., தி.ஜ.ர உள்ளிட்டோரின் படைப்புகளை வெளியிட்டார். சிறந்த எழுத்தாளரான இவர் பல நூல்களைப் படைத்துள்ளார்.

# ம.பொ.சி எழுதி வெளியிட்ட ‘வ.உ.சிதம்பரம் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை, அவரையே விரிவாக எழுத வைத்து ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெயரில் மறுபிரசுரம் செய்தார். பல புதிய பதிப்பாளர்களை உருவாக்கினார். காந்திஜியிடம் நேரடியாக அனுமதி பெற்று அவரது ‘ஹரிஜன்’ இதழை தமிழில் தனது பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ‘வெள்ளிமணி’ என்ற வார இதழையும் தொடங்கினார்.

# சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கமலை ரகசியம்’ இவரது கதையில் உருவான வெற்றிப்படம். அதன் தயாரிப்பாளர் பி.ஆர். பந்துலுவிடம் ம.பொ.சி. பற்றி எடுத்துரைத்து அவரது ஆலோசனையுடன் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய படங்களையும் தயாரிக்க வைத்தார். 1967-ல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் இருந்த சிவாஜி ரசிகர்களை ஒன்றுதிரட்டி ரசிகர் மன்றம் தொடங்கினார்.

# ‘தேசியச் செல்வர்’, ‘சிரிப்புக்கு ஒரு சின்ன அண்ணாமலை’ என் றெல்லாம் போற்றப்பட்ட சின்ன அண்ணாமலை 1980 ஜூன் 18-ம் தேதி தனது 60-வது பிறந்தநாள் விழாவின்போது காலமானார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x