Published : 12 Jul 2017 08:45 AM
Last Updated : 12 Jul 2017 08:45 AM
குமரி முனையில் 2000-ல் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழாவில் குறள் படிக்க வந்த பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் ராஜகுமார் இப்போது திருக்குறளின் காதலன்!
அரசுப் பேருந்து ஓட்டுநராக இருந்து பணி நிறைவு செய்தவர் ராஜகுமார். தற்போது நாகர்கோவிலில் வசிக்கும் இவருக்கு 1,330 குறட்பாக்களையும் மளமளவெனச் சொல்லத் தெரியும். குறள் எண்ணைச் சொன்னால் அதற்கான குறளை அச்சுப் பிசகாமல் அடுத்த நொடியே சொல்கிறார். எந்தக் குறளைச் சொன்னாலும் அதற்கான விளக்கமும் ஒரு குறளுக்கான விளக்கத்தைச் சொன்னால் அந்தக் குறள் எதுவென்றும் தயங்காமல் தடதடக்கிறார் மனிதர். இதுமாத்திரமல்ல, ஒரு குறளின் ஆரம்பம் அல்லது முடிவு வார்த்தையைச் சொன்னால் அது சம்பந்தப்பட்ட அத்தனை குறள்களும் இவரிடமிருந்து அருவியெனக் கொட்டுகிறது.
சொல்லுதல் யார்க்கும் எளிய..
‘‘எனக்குள்ளே இப்படியொரு திறமை வளர்ந்ததே அன்றைக்கு திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் குறள் சொல்ல வந்த குழந்தைகளைப் பார்த்துத்தான்” என்று சொல்லும் ராஜகுமார், “நான் பத்தாம் வகுப்பு படிச்சப்போ எனக்கு ஆசிரியரா இருந்த செல்வராசு சார், 1,330 குறளையும் அச்சுப் பிசகாம சொல்லுவாரு. ‘இதைப் படிக்க எத்தன நாள் ஆச்சு?’னு அவரக் கேட்டப்ப, ‘மூணு வருசமாச்சுடா’ன்னு சொன்னாரு. ‘நான் ஆறே மாசத்துல படிக்கேன் பாருங்க’ன்னு அவருக்கிட்ட சவால் விட்டேன். ‘சொல்லுதல் யார்க்கும் எளிய..’னு குறள் மூலமாவே எனக்கு சார் பதில் சொன்னாரு.
அவரு சொன்ன மாதிரித்தான் ஆச்சு. பத்தாம் கிளாஸ்ல ஃபெயிலாப் போயி, மும்பைப் பக்கம் போயிட்டேன். அப்புறம் எங்கே திருக்குறள் படிக்க? பார்சல் சர்வீஸ் அப்படி இப்படின்னு சுத்திட்டு, கடைசியில சொந்த ஊருக்கே வந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்துல டிரைவரா வேலைக்குச் சேர்ந்தேன்.” தனது கடந்த காலத்தை இப்படி விவரித்த ராஜகுமார் நிகழ்காலத்துக்கு வந்தார்.
இந்த வயசுக்குமேல படிச்சு..
‘‘வேலையில செட்டிலாகிட்டாலும் பத்தாம் கிளாஸ் பாஸ் ஆகாததும் திருக்குறள் படிக்காததும் மனசுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அப்ப, பிரைவேட்டா படிச்சு திரும்பவும் பத்தாம் கிளாஸ் தேர்வு எழுதுங்க’’ன்னு என் மனைவி நாராயண வடிவு தான் ஊக்கப்படுத்துனாங்க. நாகர்கோவில்ல தனியார் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். ‘இந்த வயசுக்குமேல படிச்சு என்ன பண்ணப் போறீங்க’ன்னு எல்லாரும் கேட்டாங்க. அதையெல்லாம் காதுல வாங்கிக்காம படிச்சுப் பாஸானேன். அடுத்த இலக்கு திருக்குறள் படிக்கிறது. வேலைக்கு நடுவுல குறள்களையும் அதற்கான பொருளையும் மனப்பாடம் செய்யுறது சிரமமா இருந்துச்சு. அப்பத்தான், கன்னியாகுமரியில திருவள்ளுவர் சிலை திறந்தாங்க. திறப்பு விழா அன்னைக்கி, 500 குறள் களுக்கு மேல மனப்பாடமா சொன்ன குழந்தைகளை பாராட்டிப் பரிசெல்லாம் குடுத்தாங்க. அந்தக் குழந்தைகளை நாகர்கோவில்லருந்து நான்தான் அரசுப் பேருந்துல அழைச்சுட்டுப் போனேன்.
அந்தக் குழந்தைகளைப் பார்த்ததும் எனக்குள்ள மறுபடி ஒரு உத்வேகம். மூணு வருசம் வீட்டுலயும் பேருந்து ஓட்டத்துலயுமா திருக்குறளைப் படிச்சேன். பேருந்துக்கு எதிரே வரும் வாகனங்க ளோட பதிவெண் களைப் பார்த்து அந்த எண்ணுக்கான குறளைச் சொல்லிச் சொல்லிப் பார்ப்பேன். அப்படி யெல்லாம் கஷ்டப்பட்டுப் படிச்சுத்தான் இந்த நிலைக்கு வந்தேன்” என்று முடித்தார் ராஜகுமார்.
இன்னமும் முயற்சி தளரவில்லை
22 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு செய்தி ருக்கும் ராஜகுமார், முழுமையாகத் திருக்குறளைப் படித்ததும் பள்ளிக் கூடங்களில் திருக்குறள் விளக்கம், வினாடி வினா வகுப்புகளை கட்டணமின்றி நடத்த முன்வந்தார். தி.மு.க. ஆட்சியில் இவரது ஆர்வத்தை மெச்சிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, அன்றைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு மூலமாக இதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், அந்த முயற்சிகள் முற்றுப்பெறவில்லை.
முயற்சியில் இன்னமும் தளராமல் இருக்கும் ராஜகுமார், ”அரசு இப்போது அனுமதித்தாலும் பள்ளி மாணவர்களுக்கு எனது சொந்தச் செலவில் திருக்குறள் போட்டிகளை நடத்தி, பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தத் தயாராய் இருக்கிறேன்” என்கிறார் ஆர்வத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT