Published : 19 Jul 2017 10:15 AM
Last Updated : 19 Jul 2017 10:15 AM

விவசாயிகளின் நண்பன் எலிகளின் எதிரி: மஞ்சணக்கொரை ‘மணிண்ணா’

எதிரிக்கு எதிரி நண்பன் என்போமே.. அந்தவகையில, ஊட்டியின் விவசாய தோழர்களுக்கு நம்ம மணி என்ற மணிண்ணா உற்ற தோழன். ஏன்னா, மணிண்ணா எலிகளுக்கு பரம எதிரியாச்சே!

ஊட்டியில் மஞ்சணக்கொரை பகுதிக்குச் சென்று ‘எலி மணி’ என்று கேட்டால் மணிண்ணா வீட்டுக்கு சுலபமாய் வழிகிடைத்துவிடுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக வயல் களிலும் தோட்டங்களிலும் எலி பிடித்துக் கொண்டிருக்கும் மணிண்ணாவுக்கு இப்போது 62 வயது!

ஒரு எலி பிடித்தால் 80 ரூபாய்

“சின்ன வயசுல, காடு, கழனி வேலை, கட்டிட வேலைகள்னு போயிட்டு இருந்தேன். எதுலயுமே நமக்கேத்த வரும்படி இல்லை. அப்பத்தான், காட்டுல எலிபிடிச்சுப் பழகியிருந்தது கைகொடுத்தது. கெழங்கு, கேரட்டு, பீட்ரூட்டுன்னு எதையுமே எலி விட்டு வைக்காது. ஒரு கிலோ சாப்பிட்டுச்சுனா, அம்பது கிலோவ வீணாக் கொரிச்சுக் கெடுத்துரும்.

இப்புடி நாசம் பண்ற எலிகளைக் கட்டுப்படுத்த முடியாம காட்டுக்காரங்க பாடாதபாடு படுவாங்க. அவங்களோட கஷ்டத்தைப் போக்குறதுதான் நம்மளோட வேலை. கத்திரி வச்சு, பொறி வச்சு, வில்லுக வளைச்சு வச்சு எப்படியாச்சும் எலிகளைப் புடிச்சுக் குடுத்துருவேன். முப்பது வருசத்துக்கு முந்தி, ஒரு எலிக்கு 25 பைசா குடுத்தாங்க. இப்ப எண்பது ரூபாய் தர்றாங்க.” வரும்படி கணக்குச் சொன்னார் மணிண்ணா.

70 எலிப்பொறி இருக்கு

“எலிகளைப் பிடிக்க எலிப் பொறிகள் இருக்கே!” என்று கேட்டால், ‘‘பொறி மட்டும் இருந்தா போதுமா? அதை வைக்க வேண்டிய இடத்துல வைச்சுப் புடிக்க வேண்டிய விதமா புடிக்கத் தெரியணும்ல?” என்று எதிர்க் கேள்வி எழுப்பும் மணிண்ணா, “எலிப் பொறிகளை ஒண்ணு, ரெண்டு வாங்குறதால விவசாயிகளுக்கு அதை 70 ரூபாய் சொல்லுவாங்க. நாங்க நிறைய வாங்குறதால முப்பது, நாப்பது ரூபாய்க்குத் தருவாங்க. என்கிட்ட இப்ப எழுபது எலிப்பொறி இருக்கு.

கறுப்பு எலி, வெள்ளெலி, மூஞ்சு எலி, பெருக்கான்னு எலிகளில் நாலு வகை இருக்கு. அதுல மூஞ்சு எலி பெரிசா தொந்தரவு தராது. மெதுவாத்தான் நகரும்; வீடுகள்லதான் இருக்கும். வெள்ளெலி காடுகளுக்குள்ள இருந்து பயிர்களுக்குள்ள புகுந்துடும். கறுப்பு எலியும் ரொம்பத் தொல்லை செய்யும். பெருக்கான் எலி பெரும்பாலும் சாக்கடையிலதான் இருக்கும். இதை, 5 கிலோ கல்லு வைச்சு விசேஷமா வடிவமைக்கப்பட்ட பொறியை வைச்சுத் தான் பிடிக்கமுடியும்.” என்கிறார் மணிண்ணா.

நீலகிரியில் மட்டுமல்லாது, கர்நாட காவில் பந்திப்பூர், குண்டல்பேட் கேரளாவில் சுல்தான்பத்தேரி, நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைப்பின் பேரில் எலி பிடிக்க அடிக்கடி விசிட் அடிக்கிறார் மணிண்ணா. இப்போது கோவை, அன்னூர், அவிநாசி, பல்லடம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி பகுதிகளில் இருந்தும் அண்ணனுக்கு அழைப்புகள்!

ஏழெட்டு லட்சம் எலிகள்

“ஒரு நாளைக்கு 70 எலிப் பொறிகளை வைத்தால் அதில் 10 எலியும் மாட்டும்; அம்பது அறுவதும் சிக்கும். இப்படி கடந்த முப்பது வருசத்துல ஏழெட்டு லட்சம் எலிகளாச்சும் பிடிச்சுருப்பேன். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் தான் நமக்கு சீசன்; எலி நிறைய கிடைக்கும். அது மழைக்காலம்கிறதால காட்டுக்குள்ள இருக்கிற எலிகள் எல்லாம் தீனி கிடைக்காம விவசாய நிலங்களுக்குள்ள புகுந்துரும். அதுகளோட தொல்லை தாங்காம மூலைக்கு மூலை இருந்து எனக்குப் போன் அடிப்பாங்க.

இப்பக்கூட 12 எடத்துலயிருந்து போன்! அதுல, ஒரே ஒரு இடத்துல மட்டுமே இத்தன எலியைப் பிடிச்சிருக்கேன். பொழுதுக்குள்ள பாக்கி இடங்களுக்கும் போயாகணும்” என்றபடியே, பொறிகளில் சிக்கி இருந்த எலிகளைத் தோளில் காவடிபோல் தூக்கிக் கொண்டு நடையைக் கட்டுகிறார் எலியண்ணா. மன்னிக்கணும்.. மணியண்ணா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x