Published : 27 Jun 2017 10:14 AM
Last Updated : 27 Jun 2017 10:14 AM
ஒற்றைக் கொட்டாங்குச்சியின் விலை 40 ஆயிரம் ரூபாய்! நம்பமுடியவில்லையா..? நம்பித்தான் ஆக வேண்டும். தனது கைத்திறமையால் கொட்டாங் குச்சியை இப்படி மதிப்புக் கூட்டி இருக்கிறார் சக்தி கணேஷ் என்ற கண்டியர்.
தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட சக்தி கணேஷ் இப்போது கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் வசிக்கிறார். தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை, மரத்தூள் மக்கு பொம்மை, மரக்கைத்தடி இவைகளை அழகிய வேலைப்பாடுகளுடன் செய்து அசத்தும் இவர், மாநில அளவில் கொட்டாங்குச்சி ஓட்டில் சிறந்த கைவினைப் பொருளை உருவாக்கியமைக்காக அண்மையில் தமிழக முதல்வரால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் சக்தி கணேஷ், ஆரம்பத்தில் கைவினைப் பொருட்களை வாங்கி விற்றுவந்தார். காலப்போக்கில், தனக்குள் இருந்த கலை ஆர்வத்தால் அந்தப் பொருட்களை தானே சொந்தமாக செய்து, அதையே தனக்கான அடையாளமாகவும் மாற்றிக் கொண்டார்.
’’நான் கன்னியாகுமரிக்கு வந்து ஏழு வருசம் ஆச்சு. முதலில், தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைதான் செஞ்சுட்டு இருந்தேன். பத்து நாள்ல 50 பொம்மை செய்வேன். என்னோட பொம்மை ஸ்பெஷலா இருக்கும்கிறதால ஒரு பொம்மையை 1,500 ரூபாய் குடுத்து கடைக்காரர்கள் வாங்கிப் பாங்க. இப்ப, இந்தியா முழுவதும் என்னோட பொம்மைகள் போயிக்கிட்டு இருக்கு.
இந்தப் பொம்மைகளைத் தவிர, புதுசா எதாச்சும் பண்ணலாம்னு யோசிச்சேன். அப்பத் தான் இந்தக் கொட்டாங்குச்சி ஐடியா வந்துச்சு. கைவினைக் கலைஞரான என் மனைவி மணிமேகலையும், கைவினை பொருள்கள் வளர்ச்சி
ஆணையத்தின் உதவி இயக்குநர் பாலுவும் என்னோட திறமையைப் பார்த்துட்டு ஊக்கப் படுத்துனாங்க.’’ என்கிறார் சக்தி கணேஷ்.
கொட்டாங்குச்சியில் பைரவர்
தொடர்ந்து பேசிய அவர், ‘‘இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் முழுக்க, முழுக்க கைவேலைப் பாட்டுலயே கொட்டாங்குச்சியில் அஷ்ட பைரவர் சிற்பத்தை உருவாக்கினேன். அதில் 40 தெய்வங்களின் உருவம் இருக்கும். இதுக்குத் தான் இப்ப மாநில விருது கிடைத்தது. அடுத்ததா, அஷ்டலட்சுமி சிற்பத்தை கொட்டாங்குச்சியில் கைவினையில் உருவாக்கி இருக்கிறேன். இதில் எட்டு லட்சுமிகள் உருவமும் கடவுளின் வாகனங் களும் இருக்கும்.
இந்தக் கொட்டாங்குச்சிக் கலைக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கு. வெளி நாட்டுக் காரர்கள் விரும்பி வாங்கிட்டுப் போறாங்க.
இதன் விலை 40 ஆயிரம் ரூபாய். என்றாலும் நுண்கலையை மதித்து, பேரம் பேசாமல் வாங்கிச் செல்கின்றனர். இதை சிலர், நகைப்பெட்டி போலவும் பயன்படுத்துகின்றனர். தொடக்கத்தில் இந்தக் கொட்டாங்குச்சி சிற்பத்தை செய்ய எனக்கு 25 நாள்கள் ஆனது. இப்ப, பழகிட்டதால 20 நாளுக்குள்ளயே முடிச்சிடுவேன்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பற்றிப் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘ஒரு சாதாரண கொட்டாங்குச்சிக்கு கலை வடிவம்
கொடுத்து, அதன் மதிப்பை 40 ஆயிரத்துக்கு உயர்த்தி இருக்கும் இவரைப் போன்ற திறமைசாலிகள் தான் நம் தேசத்தின் சொத்து’ என்றார். சிலர் வீடு, நகைகள்னு வாங்கிச் சேர்ப்பார்கள். கலையுணர்வு மிக்கவர்கள் கலை படைப்புகளை தேடித் தேடி வாங்கி சேகரிப்பார்கள். இந்த கொட்டாங்குச்சி சிற்பத்துக்கும் நிறைய கிராக்கி இருக்கிறது. என்னால் செய்துகொடுக்கத்தான் முடியவில்லை’’ என்று சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT