Published : 18 Jan 2014 08:02 PM
Last Updated : 18 Jan 2014 08:02 PM
கருந்தலைப்புழுவின் தாக்குதலில் இருந்து தென்னைமரங்களை காக்கும் ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்து, அவற்றை அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் தடையின்றி வேளாண்மைத்துறை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்களில் தென்னைமரங்கள் உள்ளன. ஒவ்வொரு பருவ காலத்திலும், பல்வேறு நோய் தாக்குதல்களால், தென்னைமரங்கள் பாதிக்கப் படுகின்றன. இவற்றை தடுக்க வேளாண்மைத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், ஆண்டுதோறும் கணிசமான தென்னை மரங்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாவதால், விவசாயிகள் பாதிப்படைவது தொடர்ந்து வருகிறது.
மரத்தை வீழ்த்தும் புழு
தென்னையை தாக்கும் நோய்களில், கருந்தலைப்புழு தாக்குதல் என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். கோடை மற்றும் வறட்சிக்காலத்தில் தென்னை மரங்களைத் தாக்கும் கருந்தலைப்புழுக்கள், மரத்தில் உள்ள பச்சை இலைகளை சாப்பிட்டு, மரத்தை முழுமையாக வீழ்த்திவிடும் தன்மை கொண்டவையாகும். இந்த நோய் தாக்குதலால், நாடு முழுவதும், ஆண்டுதோறும் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கருந்தலைப்புழு தாக்குதலில் இருந்து தென்னை மரங்களைக் காக்கும் வகையில், கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தேசிய தென்னை வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாநில தோட்டக்கலைத்துறை வாயிலாக, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் தென்னை ஒட்டுண்ணி மையம் அமைக்கப்பட்டு, அங்கு கருந்தலைப்புழுவை சாப்பிட்டு, நோயை தடுக்கும் ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை தேசிய தென்னை வாரியம் வழங்கி வருகிறது.
இலவச ஒட்டுண்ணி
ஆண்டுதோறும் 10 முதல் 12 லட்சம் ஒட்டுண்ணிகளை இந்த மையம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வந்துள்ளது. கிராம நிர்வாக அதிகாரியிடம் தென்னை பயிரிட்டுள்ளது குறித்து சான்று பெற்று வரும் விவசாயிகளுக்கு இந்த ஒட்டுண்ணிகள், ஏக்கரின் அளவுக்கு ஏற்ப, இலவசமாக வழங்கப்படும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்த ஒட்டுண்ணி முறையாக வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் தளபதி கூறியதாவது:
கொச்சியில் உள்ள தேசிய தென்னை வாரியத்திற்கும், தமிழக அரசின் வேளாண்துறைக்கும் இடையே,ஒட்டுண்ணிகள் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக ஆண்டுதோறும் ஒப்பந்தம் போடப்படும். ஆனால், கடந்த 2011ம்ஆண்டுக்கு பின், இருவருக்குமிடையே ஏதோ முரண்பாடுஏற்பட்டுள்ளது. இதனால், தென்னை வாரியத்தின் நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால், கடந்த 2012 - 13, 2013 - 14 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு தென்னைமரங்களுக்கான ஒட்டுண்ணி இலவசமாக வழங்கப்படவில்லை. விருப்பப்பட்ட விவசாயிகள் பணம் கொடுத்து வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
160 விவசாயிகள்
கடந்த காலங்களில், 1 லட்சம் ஏக்கருக்கு, 12 லட்சம் ஒட்டுண்ணிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டு, இலவசமாக வழங்கப்படாததால், 3,000 ஏக்கருக்குதான் தென்னைஒட்டுண்ணிகள் வாங்கப்பட்டுள்ளன. மொத்தம், 160 விவசாயிகள்தான் ஒட்டுண்ணிகளை வாங்கியுள்ளனர். தென்னை மரங்களை காப்பதில் வேளாண்மைதுறையினர் அக்கறையின்றி செயல்பட்டுள்ளனர்.
உரிய தடுப்பூசி போடப்படாததால், கோமாரி நோய் தாக்கம் அதிகமாகி ஏராளமான கால்நடைகளை விவசாயிகள் பறிகொடுத்தனர். காற்றில் பரவும் தன்மை கொண்ட கருந்தலைப்புழு தாக்குதல் நோயை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால், பெரும் இழப்பை விவசாயிகள் சந்திக்க நேரிடும். தென்னைக்கு நோய் வரும் முன் காக்க வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் சொல்றாங்க
இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி தொடர்பாக, தென்னை வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அதற்கேற்ப, உற்பத்தி செய்யப்படும் அளவு நிர்ணயிக்கப்படும். கடந்த 2011- 12ல், 33.14 லட்சமும், 2012-13ல் 8.12 லட்சமும் ஒட்டுண்ணி உற்பத்தி செய்ய அனுமதி கேட்கப்பட்டது.
கடந்த ஆண்டு அவர்கள் உற்பத்திக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவினை, குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என வாரியத்தினர் வலியுறுத்தினர். அது நடைமுறை சாத்தியமில்லை என்பதால், ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. நடப்புஆண்டுக்கு வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டுள்ளது. எனவே, வழக்கம்போல் தென்னை ஒட்டுண்ணி வழங்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT