Published : 07 Jun 2016 12:05 PM
Last Updated : 07 Jun 2016 12:05 PM

உங்கள் குரல்: முதியோர் இலவச பஸ் பாஸ் பிரச்சினை

10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகையா?

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித் தொகை வழங்குகிறதா என்று ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் வாசகர் கேள்வி எழுப் பினார்.

இதுகுறித்து பூந்தமல்லியைச் சேர்ந்த நீலகண்டன் என்ற வாசகர் கூறியதாவது:

மத்திய அரசு ‘மோடி திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், அதேபோல், 12-ம் வகுப்பில் 80% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்குவதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளன.

இதுகுறித்து தாலுகா அலுவலகத்துக்குச் சென்று கேட்டால் இப்படியொரு திட்டம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று சொல்கிறார்கள்.

மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் கேட்டாலும் இதே பதில்தான் வருகிறது. உண்மையிலேயே இதுபோன்று மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “மாணவர்களுக்கு இதுபோன்று மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும், தகவலும் வரவில்லை. இந்த தகவல் தவறாக இருக்கலாம்” என்று தெரிவித்தனர்.



மாமல்லபுரம் கடல் அருங்காட்சியக பணிகள் தொடங்குவது எப்போது?

மாமல்லபுரம் கடற்கரையில், கடல் சார் அருங்காட்சி யகம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என தெரியாத நிலை உள்ளதாக ‘தி இந்து’வின் உங்கள் குரல் பகுதியில் வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மீன்வளத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரையில், கடல் சார் அருங்காட்சியகம் அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அறிவிப்புகள் வெளியாகின. இந்த அருங்காட்சியகத்தில் இருந்தபடியே, கடலில் மீன்கள் இருப்பதை பார்க்க முடியும். இது தவிர ‘அக்ரிலிக்’ சுரங்கப் பாதையில் கடலுக்குள் சென்று, கடல் வாழ் உயிரினங்களை அதன் வாழ்க்கை சூழலில் கண்டு களிக்கும் வசதியும் இதில் செய்யப்படும் எனவும். இந்த சுரங்கப் பாதையில் செல்லும் போது, கடலின் அடியில் மணலில் நடக்கும் அனுபவத்தை பெறும் வகையில் வடிவமைக்கப்படும் எனவும் மீன்வளத்துறை தெரிவித்தது. இந்தப் பணிகள் எப்போது தொடங்கும் என தெரியாத நிலை உள்ளதாக, மாமல்லபுரம் பகுதி வாசிகள் மற்றும் வாசகர்கள் ‘தி இந்து’வின் உங்கள் குரலில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அருங்காட்சியகம் திட்டத்துக்காக ரூ.257.58 கோடி திட்ட மதிப்பீடாக வரையறுக்கப்பட் டுள்ளது. தனியார் பங்களிப் புடன் கூடிய இத்திட்டத் துக்கு, வடிவமைத்தல், முதலீடு செய்தல், கட்டுதல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம் (டிபிஎப்ஓடி) அடிப் படையில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப் பணிகள் முடிந்ததும். அடுத்த கட்ட செயல் திட்டப் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்..



முதியோர் இலவச பஸ் பாஸ் பெற ரேஷன் கார்டு நகல் கேட்டதால் ஏமாற்றம்

முதியோர் இலவசமாக பஸ்ஸில் செல்ல புதிய டோக்கன்கள் பெற ரேஷன் கார்டு நகல் கொண்டுவர வேண்டுமென அதிகாரிகள் திடீரென கேட்டதால், முதியோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் பி.எஸ்.குமரன் கூறியதாவது:

மாநகர போக்குவரத்துக்கழகத்தில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய ஏற்கெனவே டோக்கன்களை பெற்றவர்களுக்கு வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கான டோக்கன்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாங்கள் போக்குவரத்துக்கழக சிறப்பு கவுன்ட்டர்களில் சென்று கேட்டபோது, திடீரென ரேஷன் கார்டு நகல் கொண்டு வரவேண்டுமென அங்குள்ள அதிகாரிகள் கூறினர். இதனால், ஏராளமானோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த தகவலை போக்குவரத்துக் கழகம் முன்கூட்டியே அறிவித்திருந்தால், முதியோர்கள் அவதிப்படுவதை தடுக்கலாம்’’ என்றார்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘முதியோர்கள் இந்த பணிமனையில் தான் தங்கள் டோக்கன்களை பெற்று வருகிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில்தான் அவர்களின் ரேஷன் கார்டு நகலை பெற்றுக்கொள்கிறோம். முதல் கட்டமாக டோக்கன் வழங்கும்போதே சுமார் 50 சதவீதத் தினர் நகலை கொடுத்திருந்தனர். மீதமுள்ளவர்களின் ரேஷன் கார்டு நகலை பெறவே அதிகாரிகள் அறிவுறுத்தி இருப்பார்கள். ஒரே ஒரு முறைதான் முதியோர்களின் ரேஷன் கார்டு நகலை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக முறையாக அந்தந்த சிறப்பு கவுன்ட்டர்களில் அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றனர்.



அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x